உதயமானது 'புதிய கழகம்'
புதுக்கட்சி துவங்குவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிச் செல்ல, யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய புதிய அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜயகாந்த் அரசியலில் கால் பதிக்க இருக்கிறார் என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. தன் அரசியல் வரவைப் பற்றி தன்னுடைய ரசிகர் மன்ற முன்னணி நிர்வாகி மற்றும் தன் நலம் விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து கடந்த ஜூன் மாதம் தன் அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக பத்திரிகைகளுக்கு அறிவித்தார் விஜயகாந்த். இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. தொடர்ந்து தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை பல்வேறு அரசியல் நிகழ்வுகளை கண்ட மதுரை மாநகரில் செப்டம்பர் 14ம் தேதி நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார்.

இந்நிலையில் விஜயகாந்தின் அரசியல் பிரவேச அறிக்கை, அதை தொடர்ந்து ரசிகர் மன்றங்களை முடுக்கிவிட்ட செயல்கள், அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் உற்சாகத்தோடு மாநாட்டுப் பணியையும் ஆற்ற வைத்தது.

விஜயகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டு அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்லாமல் தேசிய அளவில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செப்டம்பர் 14ல் மதுரையில் நடிகர் விஜயகாந்த் தன் முதல் அரசியல் கட்சி மாநாட்டைத் துவக்கி அரசியலுக்குள் கால்பதித்தார். மாநாட்டு மேடையில் தன் புதிய கட்சியின் பெயரையும், கட்சியின் கொள்கையையும் அறிவித்தார். 'தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்' என்று தன் கட்சிக்கு பெயரிட்ட விஜயகாந்த், ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே தன்னுடைய லட்சியம் என்றும் கூறினார்.

''தேசியத்தில் திராவிடநாடும் ஒரு அங்கம். இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்ததன் அடையாளம். நமக்கு முற்போக்குச் சிந்தனை, கொள்கை இருக்க வேண்டும். அதனால்தான் இந்தப் பெயரை தேர்வு செய்தேன்'' என்று தனது கட்சிக்கான பெயர் காரணத்தை மேடையில் விளக்கிய விஜயகாந்த், தமிழக மக்கள் ஆதரவு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விஜயகாந்த் ரசிகர்கள் பெரும் அளவில் மதுரைக்கு வந்திருந்தனர். மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது என்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னதாக விஜயகாந்த் அறிக்கை விடுத்திருந்தார். ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் ஆர்வமாக மாநாட்டிற்கு வந்தது முக்கியமானது என்றால், மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நதிநீர் இணைப்பு, அரசியலில் தூய்மை, நேர்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கப் பாடுபடுவது, தீவிரவாதத்தை ஒழிப்பது, படித்த, படிக்காத கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, விவசாயிகள், நெசவாளர்கள் பாதுகாப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

வருகிற 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கின்ற நிலையில் விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிடக் கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. நேரிடையாகவே விஜயகாந்தின் அரசியல் நுழைவை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல், பா.ம.க.வின் தமிழ்க் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தையும் விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.

வரும் தேர்தலில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வுள்ளன. சென்ற முறை பலகட்சிகளோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க இம்முறை தனித்து - தன்னுடைய பலத்தை நம்பியே போட்டியிடப் போகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற சூழலில் விஜயகாந்தின் இந்த அரசியல் நுழைவுக்குப் பின்புலமாக அ.தி.மு.க செயல்படலாம் என்று பல்வேறு அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித் தாலும் முதல்வர் ஜெயலலிதா விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து மடல் அனுப்பியிருந்தார்கள்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கிராமம் கிராமமாக சென்று மக்களைச் சந்திக்க முடிவு செய்துள்ள விஜயகாந்த் அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டார். அதற்கு முன்பு பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்திற்கு எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பிரச்சார வேனை பயன்படுத்த விருக்கிறார் என்பது முக்கியமானதாகும்.

கறுப்பு எம்.ஜி.ஆர். என்று இவரது ரசிகர்களால் - தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் வருகையால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்று பெரிய விவாதமே அரசியல் வட்டாரத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரண்டு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துச் சலித்துப் போன தமிழக மக்களுக்கு விஜயகாந்தின் புதிய கழகம் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) நல்ல மாற்றாக இருக்கும் என்று மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் கருத்து தெரிவித் தாலும் வரும் தேர்தலில் எந்தக்கட்சியும் சாராத மக்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ள எத்தகைய செயல்பாடுகளை, வழிமுறைகளை விஜயகாந்தின் கழகம் செய்யப் போகிறது என்பதே இப்போதைய கேள்வி!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com