மீ.ப. சோமு
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், பயண இலக்கியம், பத்திரிக்கை என எழுத்தின் பல பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் மீ.ப. சோமு என்னும் மீ.ப. சோமசுந்தரம். இவர் திருநெல்வேலியிலுள்ள மீனாட்சிபுரத்தில் ஜூன் 17, 1921 அன்று பிறந்தார். சிறுவயதிலேயே சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களைப் படித்து வந்ததால் எழுத்தார்வம் மிகுந்தது. வாசிப்பார்வம் அதிகமானது. டி.கே.சி.யின் 'வட்டத்தொட்டி' இவரது இலக்கிய நாற்றங்கால் ஆனது. அங்கே அறிமுகமான 'கல்கி' இவரைச் சிறுகதைகள் எழுதத் தூண்டினார். முதல் சிறுகதை 1937ம் வருடம் ஜூலை மாதம் ஆனந்தவிகடனில் வெளியானது. அப்போது இவருக்கு வயது 16. கல்கி இவரைத் தொடர்ந்து ஊக்குவிக்க, சிறுகதைகள், சிறு சிறு கட்டுரைகள் எழுதினார். இவரது சிறுகதை ஒன்றுக்கு விகடனின் முதல்பரிசும், பாரதி பதக்கமும் கிடைத்தன. அதுமுதல் பரவலான கவனம் பெற்றார். விகடன் மட்டுமல்லாது மேலும் பல இதழ்களுக்கும் எழுதினார். வட்டத்தொட்டியின் மூலம் பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் நட்பு கிடைத்தது. அது கவிதைமீதான ஆர்வத்தை வளர்த்தது. மரபுக் கவிதைகள் எழுதத் துவங்கினார். "குடிக்காட்டு வேழமுகன் வெண்பா மாலை", "திருக்குற்றாலப்பாட்டு" போன்ற பாடல்கள் டி.கே.சி. உள்ளிட்டோரால் பாராட்டப்பெற்றன. சோமுவின் கவிதைகளை டி.கே.சி. "தமிழ்மகளுக்கு ஒரு சீதனம்" என்று பாராட்டிச் சிறப்பித்தார்.

இன்டர்மீடியட் படிப்பை முடித்த சோமு, தமிழார்வத்தாலும், இலக்கியம்மீதான காதலாலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 'கீழ்த்திசையியல்' பாடப்பிரிவில் வித்வான் பட்டம் பெற்றார். திருச்சி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர் வேலை கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு திறம்படப் பணிபுரிந்தார். டி.கே.சி.யின் மூலம் ராஜாஜியின் நட்பு கிடைத்தது. 1940ல் நடந்த இவரது திருமணத்திற்கு ராஜாஜியும், டி.கே.சி.யும் நேரில் வந்து வாழ்த்தினர். வானொலிப் பணியின் ஊடே ஓய்வு நேரங்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதினார். முதல் கவிதைத்தொகுப்பு 'இளவேனில்' 1946ல் வெளியானது. தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதும் அதற்குக் கிடைத்தது. தொடர்ந்து 'தாரகை', 'பொருநைக் கரையிலே', 'வெண்ணிலா' போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

'கவிதை கவிதைக்காகவே' என்ற கருத்துக்கொண்ட சோமு, கவிதையை, "சொல்லும், பொருளும், வடிவமும், ஒலிப்பண்பும், ஒருங்கே இணைந்து வைகறைப்போதில் கதிரொளி பட்டு மலரும் தாமரைபோலத் தானே தானாகி, மலர்கிற மொழிமலரே கவிதை" என்று வரையறுக்கிறார். விகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். குடும்பம், சமூகம், நகைச்சுவை, தத்துவம் எனப் பலதளங்களில் இவரது கதைகள் விரிகின்றன. 'ஐம்பொன் மெட்டி', 'வீதிக்கதவு', 'கல்லறை மோகினி', 'திருப்புகழ்ச் சாமியார்', 'கேளாதகானம்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர் என்பதால், தேர்ந்தெடுத்த அவரது சிறுகதைகளை நேஷனல் புக் டிரஸ்டுக்காகத் தொகுத்திருக்கிறார். புதுமைப்பித்தன் இவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பும் நூலாக வெளியாகியுள்ளது. ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனத்தால் வெளியாகியுள்ளன.

நீதிபதி மகராஜன், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, மு. அருணாசலம் என பலரது நட்புக்கும் பாத்திரமானவர் இவர். ராஜாஜியுடன் இணைந்து திருமூலரின் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றிற்கும், ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார். அது நூலாகவும் வெளிவந்தது. ராஜாஜி, கல்கி, டி.கே.சி.யுடன் மிக நெருக்கமான நட்புக் கொண்டவர். அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை நினைவுகூரும் வண்ணம் தனது மகளுக்கு சிதம்பர ராஜ நந்தினி (சிதம்பநாதர், ராஜாஜி, கல்கி) என்று பெயரிட்டார். டி.கே.சி.க்கும் தனக்குமான நட்பைப் பற்றிக் கூறும்போது, "அறிவின் பண்பாடும். இதயத்தின் பண்பாடும் நன்கு ஒன்று சேர்ந்து உருவாகிய ஒப்பற்ற முனிவர் டி.கே.சி." என்று கூறியிருக்கிறார். அக்காலத்தின் தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவுதந்து, தமிழிசைப் பாடல்களை ஊக்குவித்தவர்களில் சோமு முக்கியமானவர்.

இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் என நுண்கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். அவைபற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 'கார்த்திகேயனி', 'ஐந்தருவி', 'பிள்ளையார் சாட்சி', 'நமது செல்வம்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கட்டுரைத் தொகுதிகளாகும். லண்டனில் ஜி.யு. போப் கல்லறையைக் கண்டுபிடித்து முதன்முதலில் எழுதியவர் சோமுதான். இவரது நாடகங்களைப் பெரிதும் விரும்பி, டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையேற்றியுள்ளனர். 'கடல்கண்ட கனவு' இவர் கல்கியில் தொடராக எழுதிய குறிப்பிடத்தகுந்த சரித்திர நாவலாகும். மற்றொரு படைப்பு 'ரவிச்சந்திரிகா'. இது பின்னர் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் பாராட்டைப் பெற்றது. புல்லாங்குழல் வித்வான் ரவிக்கும், சந்திரிகாவும் இடையே உள்ள உறவை இசையும் நாட்டியமும் கலந்து அதில் காவியமாக்கியிருப்பார் சோமு. 'நந்தவனம்', 'எந்தையும் தாயும்' போன்றவை இவரது மற்ற நாவல்களாகும். தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்திலும் இவரது பங்குண்டு. இவரது நூல்கள் பலவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர் கல்கி காலமானதும், 1954-56களில் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார் சோமு. கல்கி இதழின் பிரதிகள் லட்சத்திற்கும் அதிகமாக விற்கும்படியான சாதனையை இவர் நிகழ்த்திக் காட்டினார். தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை 'அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்' என்ற தலைப்பில் தொடராக எழுதினார். பின்னர் இது தொகுக்கப்பட்டு 'அக்கரைச் சீமையிலே' என்ற தலைப்பில் வெளியானது. அந்நூலுக்கு 1962ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. அதனை ஜவஹர்லால் நேருவின் கையால் பெற்றார். ஏ.கே. செட்டியார், சோமலெ வரிசையில் மீ.ப. சோமுவையும் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் என்று தாராளமாகச் சொல்லலாம். கல்கியிலிருந்து விலகியபின் 'நண்பன்' என்ற மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார்.

சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் எனப் பலமொழிகளிலும் புலமைமிக்கவர் சோமு. அழகுத் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றும் திறன் கொண்டிருந்தார். சங்க இலக்கியங்கள் பற்றியும், கம்பனைப் பற்றியும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றியிருக்கிறார். வெளிநாடுகளில் உள்ள இலக்கியக் கழகங்களின் கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். சித்தர்கள் பற்றியும், சித்தர் பாடல்கள் பற்றியும் விரிவாக ஆய்ந்துள்ளார். சித்தர்கள் மீதான ஈடுபாடு பற்றிச் சொல்லும்போது, "இறைவழிபாட்டிலும், சித்தர் முறைகளிலும் உபாசனைகளிலும் ஈடுபட்டுச் சில அற்புத அனுபவங்கள் பெற்றவர் எனது பெரியப்பா. சிறுவயதிலேயே அவருடைய வழிபாட்டுச் சின்னங்களையும் என் தந்தையின் வழிபாட்டு முறைகளையும் கண்டு நானும் மனம் உருகியிருக்கிறேன். பிற்காலத்தில் சில ஞானிகளின் தொடர்பும் எனக்கு ஏற்பட்டது" என்கிறார். இவரது சித்தர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை 'சித்தர் இலக்கியம்' என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. வானொலியிலும் சித்தர்கள்பற்றிச் சொற்பொழிவாற்றியுள்ளார்.

தனது படைப்புகளுக்காக ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, பல்கலை வித்தகர் விருது, தமிழ் இசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது உட்படப் பல விருதுகள் பெற்றவர். அகில இந்திய வானொலில், வானொலி நிலையத் தலைமைத் தயாரிப்பாளர், பண் ஒருங்கிணைப்பாளர் என நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பொறுப்புகளில் பணியாற்றிய சோமு, 1981ல் பணி ஓய்வு பெற்றார். பின்னர் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகப் பதவி வகித்தார். நோய்வாய்ப்பட்ட இவர் ஜனவரி 15, 1999ல், பொங்கல் தினத்தன்று காலமானார். நெல்லைச் சீமைக்குப் புகழ்சேர்த்த புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் அ.சீனிவாசராகவன், வல்லிக்கண்ணன் போன்றோரின் வரிசையில் மீ.ப. சோமசுந்தரத்துக்கும் மிகமுக்கியமான இடமுண்டு.

அரவிந்த்

நன்றி: மீ.ப. சோமு படம் - பசுபதிவுகள்

© TamilOnline.com