காலில் முள் தைத்தால், கண் கலங்குகிறது, வாய் அலறுகிறது, இடுப்பு குனிகிறது, கை அந்த முள்ளைப் பிடுங்குகிறது. உடலின் ஓர் பகுதியில் துன்பம் ஏற்பட்டால் பிறபகுதிகள் சும்மா இருப்பதில்லை. இந்த உலகமும் ஒரேயொரு உடல் போன்றதுதான். ஓரிடத்தில் ஏற்படும் துன்பம் மற்ற இடங்களையும் பாதிக்கிறது. இதை ஒரு தத்துவமாக அல்லாமல் நிகழும் உண்மையாக நாம் சென்னை பெருமழை-வெள்ளத்தின் போது பார்த்தோம். உடனடியாக அமெரிக்கத் தமிழர்கள் செயலில் குதித்தனர் — நிதி திரட்டினர்; நிவாரணப் பொருள்கள் திரட்டினர்; ஆதரவு திரட்டினர்; சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு உண்டாக்கினர். தமிழ்ச் சங்கங்கள், நுண்கலை அமைப்புகள், வணிக நிறுவனங்கள், தமிழ்க்கல்வி அமைப்புகள், சமூகப்பணி அமைப்புகள், தனிநபர்கள் என்று எல்லோரும் முன்னெப்போதுமில்லாத புதிய மனோநிலையில் செயல்பட்டனர்.
அடையாறின் கரையோரம் இருந்த ஏழைக்குடிசைகளை மட்டும் இந்த வெள்ளம் பதம் பார்க்கவில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்த நடுத்தர வர்க்கத்தை, தனிப் பங்களாக்களில் இருந்த பெரும்பணக்காரர்களைக் கூட உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்த வைத்துவிட்டது. சொத்துக்களும் பணபலமும் ஆள்பலமும் எப்போதும் கூடவராது என்பதைப் புரியவைத்துவிட்டது. எந்திர மயமான வாழ்க்கையில், மின்சாரமும், தொலைத்தொடர்பும், ஏன் பால்கூட ஒரு 4 நாள் இல்லாமல் போனால் வாழ்க்கை என்னவாகும் என்பதைத் தொட்டுக் காட்டிவிட்டது. நான்காவது மாடியில் நின்றுகொண்டு வானத்திலிருந்து சோற்றுப் பொட்டலம் விழுமா என்று ஏங்கிய கண்கள் சற்றே குனிந்தபோது கீழே ஓடிய வெள்ளத்தில் பார்த்தது டி.வி.யும் கார்களும் மட்டுமல்ல, சடலங்களையுந்தாம்.
114 ஆண்டுகள் கண்டிராத இந்தச் சோகநிகழ்வில் 'மானுடம் வென்றதம்மா' என்று பெருமிதப்படும் தருணங்களும் வாய்த்தன. வயதானோர், இளைஞர், ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் தம்மாலியன்ற உதவிகளைச் செய்ய இறங்கினர். மனிதன் பரிதவித்தபோது மதம் மறக்கப்பட்டது. மீனவர்களின் படகுகள் வேளச்சேரியிலும் முடிச்சூரிலும் தி.நகரிலும் சென்று மக்களைக் காப்பாற்றின. ராணுவ ஹெலிகாப்டர்கள் கர்ப்பிணிகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றன. சாதாரண மனிதர்கள் அசாதாரண வலுவுடனும் வேகத்துடனும் செயல்பட்டனர்.
அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்க இந்தியரும், ஏன், அமெரிக்கரும்கூட நிவாரண நிதி கொடுத்தனர். அமெரிக்காவில் பல கிளைகளையும் தமிழ்நாட்டில் அலுவலகம் மற்றும் தொண்டர்படையும் கொண்ட தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) நிதி சேர்ப்பதிலும் அதைத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்ப்பதிலும் முன்னிலை வகித்தது. அமைப்புரீதியாக பலம்வாய்ந்த AID India, விபா, உதவும் கரங்கள் போன்றவையும் சிறப்பாகச் செயல்பட்டன. 'Help Chennai Get Back on Its Feet' என்ற இயக்கத்துடன் இணைந்து தென்றல் $230,000 நிதியைக் குவித்தது. இது எப்படி பாதிக்கப்பட்டோரைச் சென்றடைந்தது என்பதை இவ்விதழ்க் கட்டுரை விளக்குகிறது. ஆர்வம் இருந்தால் போதாது, திரட்டிய நிதியையும் பொருள்களையும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டமும், வழிவகைகளும் இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்தச் சந்தர்ப்பம் தன்னார்வ அமைப்புகளுக்குப் புரிய வைத்திருக்கிறது.
*****
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த அதே டிசம்பர் 1ம் தேதி கூப்பர்ட்டினோ நகர்மன்றத்தின் துணைமேயராகப் பதவியேற்ற முதல் தமிழ்ப்பெண்ணான சவிதா வைத்யநாதன் அவர்களுடனான நேர்காணலும் முக்கியத்துவம் வாய்ந்ததே. மிக இளவயதில் கதாகாலட்சேபம், உபன்யாசம் ஆகியவற்றைச் செய்து புகழ் குவித்துவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுனரான துஷ்யந்த் ஸ்ரீதரின் நேர்காணல் வேறொரு வகையில் முக்கியமானது. இந்த இதழைக் கிட்டத்தட்ட வெள்ளநிவாரணச் சிறப்பிதழ் என்றே சொல்லுமளவுக்குச் சென்னை வெள்ளம் ஆக்கிரமித்திருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே, கவிதை, மருத்துவக் கட்டுரை என்று அனைத்திலும் சென்னை வெள்ளம் தவிர்க்க முடியாமல் சூழ்ந்துள்ளது. படியுங்கள், உள்ளம் நெகிழுங்கள், உயர்ந்தன செய்யுங்கள்.
வாசகர்களுக்குப் புத்தாண்டு, பொங்கல், விவேகானந்த ஜயந்தி வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
ஜனவரி 2016 |