செப்டம்பர் 26, 2015 அன்று ரெட்வுட் ஷோர்சில் உள்ள வுட்சைட் ஹைஸ்கூல் அரங்கத்தில் செல்வி. ஸ்ரீவித்யா ஷங்கரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளி திருமதி மீனா
லோகன் அவர்களின் மாணவி.
சரஸ்வதியைத் துதிக்கும் விதமாக சியாமளா தண்டகத்திலிருந்து 'மாணிக்க வீணாம்' என்ற சுலோகத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து வந்தது வசந்தா ராக ஜதீஸ்வரம். அங்கயற்கண்ணி வர்ணத்தில் (ராகமாலிகை)
அன்னை மீனாட்சியின் பிறப்பு, சுந்தரேஸ்வரரிடம் கொண்ட காதல், காமதகனம், மார்க்கண்டேயனை காக்க அவர் எமதர்மனைக் கொல்ல முற்பட்டது, சண்டமுண்டர்களை அன்னை வதம் செய்தது போன்ற பல
சம்பவங்களைக் கண்முன் கொண்டுவந்தார்.
'நவரச நிலையே' பதத்தில் நவரசங்களையும் சித்தரித்த விதம் வெகு அழகு. அடுத்து முத்துஸ்வாமி தீக்ஷிதரின் அர்த்தநாரீஸ்வர பதத்திற்கு அற்புதமாக அபிநயித்தார். பின்னர் வந்த காவடிச்சிந்தில் அழகன் முருகன் நம்
கண்முன் வலம்வந்தான். 'தொட்டு தொட்டு' என்கிற பேஹாக் ராகப் பாடலில் கண்ணனின் விஷமங்களை கோபிகைகளின் பார்வையில் ஸ்ரீவித்யா கொணர்ந்த விதம் அருமை. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய
கதனகுதூகலத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
திருமதி. ஜெயந்தி உமேஷின் வாய்ப்பாட்டும், திரு. ரவீந்திர பாரதியின் மிருதங்கமும், திரு. சரவணப்ரியனின் வயலினும், திரு. அஷ்வினின் புல்லாங்குழலும் நிகழ்ச்சிக்கு இனிமை சேர்த்தன.
லதா ஸ்ரீனிவாசன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |