நவம்பர் 21, 2015 அன்று 'சப்தமி' அறக்கட்டளை 'சப்தமி ஸ்டார்ஸ்' போட்டிகளை டெக்சஸ் ப்ளேனோவிலுள்ள லெகசி சர்ச் அரங்கத்தில் நடத்தியது. வாய்ப்பட்டு மற்றும் கருவியிசை (கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி), நடனம் (பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிசி, கதக்) என்றிவற்றில் போட்டிகள் நடைபெற்றன. உள்ளூர் இசை மற்றும் நாட்டியப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தவும் இதுவொரு மேடையாக அமைந்தது. போட்டிகளுக்கு நடுவர்களாக வயலின் வித்வான் திரு. விட்டல் ராமமூர்த்தி (இந்தியா), பாடகர் திருமதி. சவிதா நாமதூரி (டெக்சஸ்) ஆகியோர் சிறப்புறப் பணியாற்றினர்.
சப்தமி அறக்கட்டளை கலை, கலாசாரத்தை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். இதற்காக இசை மற்றும் நடனக் கச்சேரிகளையும் போட்டிகளையும் நடத்துகிறது. 2015ம் ஆண்டுப் போட்டியில் 260 பேர் பங்கேற்றனர். இதில் 'சப்தமி ஸ்டார்ஸ்' ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவோர், அடுத்த ஆண்டு நிகழ்ச்சியில் மேடையேற வாய்ப்புத் தரப்படும். இந்த நிகழ்ச்சிகள் வெற்றிபெறத் திருவாளர்கள் ஸ்ரீகாந்த் கண்ணன், ஜே ஜயகுமார், அருண்குமார், சுப்ரமணியம் சுந்தர் மற்றும் திருமதி நளினி ரமேஷ் ஆகியோரைக் கொண்ட குழு திறம்பட உழைத்தது.
மேலும் தகவலுக்கு: முகநூல்: www.facebook.com/SaptamiFoundation வலைமனை: www.saptami.org
செய்திக்குறிப்பிலிருந்து |