சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில், நன்றிநவிலல் நாளை முன்னிட்டு ஏழாவது ஆண்டாக டாலஸ் மாநகரப் பகுதியில் வசிக்கும் நலிந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரபல சுயமுன்னேற்றப் பயிற்றுனர் டோனி ராபின்ஸ் 'Basket Brigade' என்ற பெயரில் ஆண்டுதோறும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உள்ள நலிந்தோருக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கூடையை இலவசமாக வழங்கி வருகிறார். சிறுவயதில் தன் குடும்பம் வறுமையில் இருந்தபோது இதே நாளில் அருகேயுள்ள ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு கூடை நிறைய உணவுப் பொருட்கள் வழங்கியதை நினைவுகூர்ந்து, தான் வசதி பெற்றதும் மற்றவர்களுக்கு அதே சேவையைச் செய்துவருகிறார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் இந்தச் சேவையை டாலஸ் நகரில் செய்துவருகிறது.
இந்த ஆண்டு 65 கூடைகள் ஏழை எளியோர்க்கு வழங்கப்பட்டன. உணவுப்பொருட்களுடன், கம்பளங்கள் மற்றும் டோனி ராபின்ஸின் A Quick and Simple Guide to Taking Charge of Your Life புத்தகமும் உடன் வழங்கப்பட்டது. ப்ளேனோ தமிழ்ப் பள்ளிப் பெற்றோர், கொடையாளிகள் வழங்கிய நன்கொடையால் இந்த உதவி சாத்தியமானது. கூடைகளில் பொருட்களை அடுக்கி வைத்தது முதல் பயனாளர்களிடம் நேரடியாக வழங்குவதுவரை அனைத்துப் பணிகளிலும் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள் பங்காற்றினர்.
குழந்தைகளுக்கு அமெரிக்காவில் நிலவும் ஏழ்மைச்சூழலை கண்கூடாகப் பார்க்கும் வாய்ப்பும், அதே சமயம் பெற்றோர் தந்துள்ள வசதி வாய்ப்புகளை எண்ணிப்பார்க்கும் வாய்ப்பும் இதனால் ஏற்படுகிறது. சிறுவயது முதலே இப்படிப்பட்ட நலத்திட்டங்களில் ஈடுபடவும், பெறுவோரின் மகிழ்ச்சியை நேரடியாகக் கண்டு ஈகையின் மேன்மையை உணரவும் இது வாய்ப்பாக அமைகிறது.
சின்னமணி, ப்ளேனோ, டெக்சஸ் |