வள்ளியம்மாளின் கதை
"ஆத்தா இது பரத் தம்பி. நம்ம வாணிகூட கேந்திரா மோட்டார்ஸ்ல ஒண்ணா வேலை பண்ணிக்கிட்டுருந்தாரு. ஒரு முக்கியமான ஆராய்ச்சி நடுவுல, கம்பெனிய கவுக்க ஜெர்மன் போட்டிக் கம்பெனி பண்ணுன சதியில என்னன்னவோ நடந்துருச்சு. இதுல எங்க மொதலாளி விஷ்வனாத் அய்யாவுக்கும் பரத் தம்பிக்கும் நடுவுல என்ன நடந்துச்சுனு தெரியலை. இவரு வேலையை ராஜினாமா பண்ணிட்டு யாரோட தொடர்பும் இல்லாம இங்க வந்துட்டாரு. அங்க இவர் இல்லைனா, புது இஞ்சின் வெளிவரது சந்தேகம்தான், அப்படி புது இஞ்சின் குறிச்ச தேதிக்குள்ள வரலைனா கம்பெனிய போட்டிக் கம்பெனி கபளீகரம் பண்ணிடும்னு எல்லாம் பேசிக்கிறாங்க. இப்ப வாணி கல்யாணத்தை விட, பரத் தம்பி கேந்திரா மோட்டார்சுக்கு உடனே திரும்புறதுதான் முக்கியம். அதை எப்படியாவது நீதான் நடத்தி வெக்கணும். இது இவ்வளவு நாள் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்தின கேந்திரா மோட்டார்சுக்கு நான் காட்டற நன்றியா இருக்கும்" மூச்சு விடாமல் சொல்லிமுடித்தார் கதிரேசன்.
வள்ளியம்மாள் பரத்தை இன்னும் அருகே வந்து பார்த்து, "என்னய்யா இதெல்லாம்? பொறுப்பை தட்டிக்கழிச்சுட்டு, வெசனமே இல்லாம இங்க வந்து கிராமத்துக்கு சேவை பண்ணனும், உங்களுக்கு ஒத்தாசையா இருக்கணும்னு சொல்ற? உனக்கு இருக்குற பொறுப்பையே நிறைவேத்தாம, இங்க ஊருல இருக்கற பொறுப்பை நீ என்னமா கெவனிக்கப்போறே? சரி, இதெல்லாம் போவட்டும். என்கிட்டயாவது நீ நெசத்தச் சொன்னியா? இதெல்லாம் மறச்சுப்புட்ட. இப்ப கதிருமட்டும் எதேச்சையா வந்துருக்காட்டி என்ன வெபரீதமாயிருக்கும். ஏம்பா உன்கிட்டதானே பேசுறேன். பதில் சொல்லு,"ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் அந்தக் கிழவி பரத்தை உலுக்கினாள்.
சில்லென்ற வாடைக்காற்று அப்போது அசந்தர்ப்பமாக வீசியது. அது அங்கிருந்த நிலைமையின் உஷ்ணத்தைக் கொஞ்சமும் தணிக்கவில்லை. மெல்ல பகல்பொழுது தணிந்து அந்திசந்தி வேளை வந்துவிட்டது என்பதை ஒவ்வொரு வீடாக அரிக்கேன் மற்றும் மின்தீபங்கள் ஏற்றி அறிவித்துக்கொண்டிருந்தன. மேய்ச்சலுக்குச் சென்று காராம்பசுக்களும், கறவைப்பசுக்களும் பள்ளிவிட்டுத் திரும்பும் பிள்ளைகள் பபுள்கம் தின்றுகொண்டே கும்பலாகத் திரும்புவது போல் வாயை அசைபோட்டவாறே பட்டிகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. இவை எதுவும் பரத்தை பாதிக்கவில்லை.
வள்ளியம்மாளின் வார்த்தைகள் பாதித்தன. கண்களில் ஆக்ரோஷத்தோடு வள்ளியம்மாளை வெறித்துப் பார்த்து, "கேக்கறதெல்லாம் கேட்டுப்புட்டியா? எல்லாத்துக்கும் நான் உனக்கு பதில் சொல்றேன். ஆனா, அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு நீ பதில் சொல்லு. எல்லாத்தையும் மறச்சுப்புட்ட, என்கிட்ட நெசத்தை சொல்லலைனு சொன்னியே. உன் மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ எதையுமே மறைக்கலயா? நெசத்தை மட்டும் தான் பேசுறியா?"
கதிரேசனுக்குப் புரியாத இந்தக் கேள்வியின் அர்த்தம், வள்ளியம்மாளுக்குப் புரிந்தது. ஆனால் அவள் அதை எதிர்கொள்ள இன்னும் தயார் நிலையில் இல்லாததால் மவுனம் சாதித்தாள். பரத் விறுவிறுவென உள்ளே போய் தான் மறைத்து வைத்திருந்த ஃபோட்டோவை எடுத்துவந்து, "இன்னும் புரியலைனா, இதா இந்த படத்தைப் பாரு. இது உன் வீட்டுல இருந்தது. என்னைய போலவே இந்தப் படத்துல இருக்கிறது யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் எதையுமே காட்டிக்காம இந்த காட்டுல கெடக்க? இதல்லாம் தெரிஞ்சுக்கத்தான் இங்க வந்தேன்."
கதிரேசன் அந்தப் படத்தைப் பார்த்து, "இது பரத் தம்பி போலவே இருக்கு. ஆனா பழைய படமாட்டம் இருக்கு. ஆத்தா என்ன நடக்குது இங்க?" வள்ளியம்மாள் பாரத யுத்தத்தில் சிகண்டியை முன் நிறுத்தி அர்ச்சுனன் போர்புரிய ஆரம்பித்ததும் தன் கணையப் போட்டுவிட்டு, பாணங்களை வாங்கி வீழ்ந்ததுபோல, அந்தப் படிக்கட்டில் சரிந்து உட்கார்ந்துவிட்டாள். அவளுக்குப் புரிந்துவிட்டது, உண்மையைச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று.
"ஆத்தா, ஆத்தா இதுக்கு மேலயும் மறைக்காதே. எனக்குத் தெரியும் நான் உன் பேரன்னு. உன் படத்தை என் வீட்டுல பார்த்துருக்கேன். உனக்கு என்னைப் பார்த்ததும் நிச்சயம் நான் உன் பேரன்னு தெரிஞ்சுடுச்சு. அத நான் உன் கண்ணுல பாத்துட்டேன். ஆனாலும் நீ ஏன் அதை வெளிக்காட்டாம மறைச்ச. இந்த பத்திரிகைலகூட நீ இப்ப இந்த கிராமத்துக்கு என்ன பண்ணினனு மட்டும்தான் போட்டுருக்காங்க. ஆனா, நீ யாரு, உன் குடும்பம் எங்கங்கிற வெவரமெல்லாம் அவங்க கேட்டதுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம்னு மறைச்சுட்ட. இப்ப சொல்லு நீ என் பாட்டிதானே, நான் உன் பேரன்தானே. சொல்லு.. சொல்லு."
"ஆத்தா பரத் சொல்றது நெசமா? நீ... நீ பரத்தோட பாட்டியா? சொல்லாத்தா.." வள்ளியம்மாளின் மவுனம் அவருக்கு பரத் சொல்வது உண்மை என ஊர்ஜிதப்படுத்தியது.
"பரத் இப்படி என் பக்கத்துல ஒக்காரு. கதிரு நீயும்தான்". அவர்கள் உட்கார்ந்ததும், "நான் ஏன் உறவை மறைச்சேன், நெசத்தை சொல்லலைனு கேட்டியே. நீ எங்கிட்ட நெசத்தை மறச்சதுக்கும் நான் உன்கிட்ட எந்த வெவரமும் சொல்லாம இருந்ததுக்கும் நிறய வித்தியாசம் இருக்குப்பா. நான் ஒரு மகராசிக்கு சத்தியம் செஞ்சு குடுத்துட்டேன். அதை காப்பாத்தறதுக்காக எந்த ஒட்டு ஒறவும் இல்லாம, தப்பு தப்பு... என் ரத்த சம்பந்தங்கள் கிட்ட எந்த ஒட்டு ஒறவும் இல்லாம இருக்கவேண்டியதாப் போச்சு. போவட்டும். என் சத்தியத்தை மீறுனா உன் வெசனம் தெளிஞ்சு, நீ ஊருக்குப் போயி உன் கம்பெனிய காப்பாத்துவேன்னா, நான் என் சத்தியத்தை மீறுறதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். நீ எனக்கு அந்த வாக்கு குடுப்பியா?"
"கண்டிப்பா, அதுக்கப்புறம் நான் நீ சொல்ற மாதிரி நடக்கறேன். மொதல்ல நீ என் பாட்டிதானே, அதை மேல சஸ்பென்ஸ் வெக்காம ஒப்புக்க" பரத் பரபரப்பாக கிழவிக்கு வாக்களித்தான். அவனுக்கு வள்ளியம்மை தன் நெஞ்சப் பொக்கிஷத்தை திறக்கச் சம்மதம் அளித்தது உற்சாகத்தைக்கொடுத்தது.
"ஒருவிதத்துல நான் என் சத்தியத்தை மீறலைனு மனசை தேத்திக்கிறேன். ஏன்னா, நான் உன் பாட்டிதான்ற உண்மையை நீயேதான் தெரிஞ்சுக்கிட்ட. ஆமா. நான் உன் பாட்டிதான். நீ என் ஒரே பேரன். என் மவன் மோகனோட ஒரே வாரிசு. உன் தாத்தாவை அப்படியே உரிச்சு வச்சிருக்க, எப்படி மறைக்கமுடியும்?" கண்களில் கண்ணீர் மழை பிரவாகமெடுக்க, அதோடு உணர்ச்சிக்கேவல்கள் என்ற இடியோடு அவனை வாரி அணைத்துக்கொண்டாள் அந்த மூதாட்டி. பரத்தும், அதே பாச உணர்வோடு, "பாட்டி, பாட்டி... இப்பயாச்சும் ஒத்துக்கிட்டியே" என்று அவளை அணைத்துக்கொண்டான்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், அரங்கை அலம்புவதுபோல், அந்த பாசக்காட்சி முடிவடைந்ததும் இருவரும் தங்கள் நீர்ததும்பிய கண்களையும், முகத்தையும் துடைத்துக் கொண்டார்கள். இப்போது வள்ளியம்மை தன் கதையை சொல்லத்தொடங்கினாள்.
"உங்க தாத்தாவுக்கும், என் பாட்டனார், குடும்பத்தாருக்கும் இந்த தஞ்சை ஜில்லாதான் சொந்த மண்ணு. ஆனா நானும் ஒன் தாத்தாவும் பொறந்து வளந்த எடம், சூழ்நிலை, வளர்ப்பு எல்லாமே வேற வேற. அது பத்தொன்பதாம் நூற்றாண்டோட முடிவு சமயம். கம்பெனி ஆட்சி போயி, பிரிட்டிஷ்காரங்க ராஜா ஆட்சி முழுமையா இந்த தேசம் பூரா ஸ்தாபிதமாயிருந்த நேரம். அப்ப இந்த ஜில்லாவுல எங்கியும் பஞ்சம். இயற்கை கைவிட்டது கொஞ்சம்னா, மனுஷங்க ஏற்படுத்தினது அதிகம். என்ன பயிர் பண்ணனும், எப்ப பண்ணனும் இதெல்லாமே அசல் தேசத்து ஜில்லா கலெக்டர் நிர்ணயம் பண்ணுவாரு. என்ன வெளச்சாலும், எங்க கும்பியே காஞ்சாலும் அவங்களுக்கு வரி செலுத்திப்பிடணும். கிராமம் கிராமமா, ஈவு எரக்கமில்லாம ஆனா அக்கிரமமா சுரண்டரோம்னு வெளிலகூட அவ்வளவு தெரியாம இப்ப என்னவோ சொல்றாங்களே விஞ்ஞானபூர்வ ஊழல்னு, அப்படி அந்த பிரிட்டிஷ் சர்க்கார் எங்க மக்களை சொரண்டிகிட்டிருந்தாங்க. கிராமத்து விவசாயம் மட்டுமில்லாம, எங்க மத்த தொழிலெல்லாமும், நெசவு, வண்டி, இரும்பு சாதனம் செய்யிறது, கூடை பின்றது எல்லாமே நசிச்சு, ஜனங்க நடைப்பிணமா ஆயிட்டிருந்தாங்க. கொஞ்சம் படிப்பு வாசனை உள்ள ஜனங்க பட்டணம் போயி சர்க்கார் உத்தியோகத்துல அப்படி இப்படினு பொளப்பு தேடிக்கிட்டாங்க. வெவசாயத்தை உட மனசில்லாத பெருவாரி ஜனங்க வயத்துல ஈரத்துணிய போட்டுக்கிட்டு, நிதமும் ஜில்லா கலக்டருகிட்ட மகஜர் குடுத்துக்கிட்டிருந்தாங்க.
"கடன்மேலே கடன் ஏற்பட்டு, சொந்த நெலத்தையும் இழந்துட்டு வேற வருமானத்துக்கு வழியில்லாம, கெடச்ச கூலிவேலைய செஞ்சுக்கிட்டிருந்தாங்க. இந்த கூட்டத்துல என் தாத்தா மாணிக்கமும், அவரோட கூடப்பிறந்த மூணு தம்பிகளும் அவங்க குடும்பமும் அடக்கம். இந்த நிலைமைலதான் அவங்களுக்கு ஒரு வெள்ளக்கார ஏஜெண்ட் பளக்கம் ஏற்பட்டது. அந்த ஏஜண்ட், இவங்க நெலமைய சாதகமாக்கிட்டு, ஆசைவார்த்தை பேசி, இவங்களை அன்னிய தேசத்துல பிரிட்டிஷ் காலனிகள்ல விவசாயம் பாக்க காண்ட்ராக்ட் போட்டான். அஞ்சு வருஷம் காண்ட்ராக்ட். மாசம் ஒண்ணுக்கு ஒரு ஆளுக்கு பத்தணா வருமானம். அஞ்சு வருஷம் முடிஞ்சு, ஊருக்கு சம்பாத்தியத்தோட திரும்பலாம், இல்லைனா இன்னும் அஞ்சு வருஷம் மேலே நீட்டிச்சா, ரெண்டு செண்ட் நெலம் உரிமையாகும். பணம் கிடைக்குதேங்கிறதை விட, நமக்குத் தெரிஞ்ச வெவசாயத்தை பண்ண வாய்ப்பு கெடைக்குதேனு அந்த ஜனங்க வெள்ளந்தியா ஒப்புக்கிட்டதுங்க.
"ஒரு நல்ல நாள், கெழமைல தங்களோட ஓட்ட ஒடசல் சாமான்களை கட்டிக்கிட்டு, நெஞ்சு நிறய நம்பிக்கையோடவும், ஆனா இனிமே இந்த மண்ணை எப்ப பாப்பமோனு கண்ணு முழுக்க கண்ணீரோட பெத்த தாயைப் பிரியற சோகத்தொட அந்த பஞ்சபராரி குடும்பம் சென்னைக்குப் போச்சு. அண்ணன் தம்பியா, குடும்பமா ஒண்ணுமண்ணா வெவசாயம் பாக்கணும்னு நெனச்ச அந்த குடும்பத்து தலைல மண்ணு விழுந்தது. ஏஜெண்ட் அந்த படிக்காத ஜனங்கள நல்லா ஏமாத்திப்புட்டான். வயசானவங்க, சீக்காளிகள கப்பல்ல ஏத்தமாட்டாங்கனு சொல்லி, அவங்க வயசான தாயார், தகப்பனாரை களட்டிவிட்டாங்க. சரி, குடும்ப முச்சூடும் ஊர் திரும்பலாம்னா, காண்ட்ராக்ட்ல கைனாட்டு வெச்சது வச்சதுதான், இப்ப ஊர் திரும்பினா, ஜெயில்ல போடுவோம்னு மெரட்டுனாக. வேற வளியில்லாம, தாய்தகப்பனை ஊருக்கு அனுப்பிட்டு, வெக்காளியம்மன் மேல பாரத்தை போட்டு துறைமுகம் போனாங்க. அங்க இன்னொரு அதிர்ச்சி. மொத்த குடும்பத்தையும், தனித்தனியா வேறவேற கப்பல்ல, ஏத்தறாங்க. யாரும் யாருகிட்டயும் முறையிடமுடியலை. எதைக் கேட்டாலும், இவங்களுக்குப் படிக்கத் தெரியாத காயிதத்தைக் காட்றாங்க. ஒட்டு ஒறவா அன்னம் தண்ணி எந்நேரமும் பொழங்கிட்டிருந்த, குடும்பம் அந்த துறைமுகத்துல விடை பெத்துக்கக்கூட நேரமில்லாம, பட்டில மாடுகள அடைக்கிறமாதிரி அந்த பெரிய பெரிய கப்பல்கள்ல வேறவேற தெசத்துக்கு அனுப்பப்பட்டாங்க. அதுக்குப்பொறவு, எங்க தாத்தா மாணிக்கத்துக்கு தன் குடும்பத்தை பாக்குற கொடுப்பினை கிடைக்கலை. எங்க தாத்தாவும், பாட்டியும் ஃபிஜி போற கப்பல்ல இருந்தாங்க. மத்த குடும்பங்கள் மேற்கிந்தியத்தீவு, தென்னாப்பிரிக்கானு உலகத்து வேற வேற கோடிகளுக்குப் போயிருக்கணும்.
"ஃபிஜி தீவுகளுக்குப் போன என் தாத்தா மாணிக்கம், அங்க கரும்புக்காட்டுல கஷ்டப்பட்டு ஒழைச்சாரு. ரொம்பக் கடினமான வேலையாயிருந்தாலும், தனக்குப் பிடிச்ச விவசாய வேலைங்கிறதாலயும், தெய்வநம்பிக்கை இன்னும் போகாததாலயும் மனசுல உரத்தோட எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு என்னிக்காவது விடியும்னு உழைச்சாரு. வெள்ளக்கார கங்காணிகளோட அடக்குமுறை, அவங்ககிட்டயிருந்து தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாத்தறதுனு ஏகப்பட்ட பிரச்சனைகள். காலம் ஓட ஓட, தாய்மண்ணையே மறந்து, இதுதான் நமக்கு விதிச்சதுனு பளகிட்டாங்க. எங்க தாத்தா இறந்ததும், எங்க அப்பாவும் அங்கியே இருந்தாரு. கொத்தடிமைத்தனம் ஒழிய ஆரம்பிச்சப்புறமும், ஊருக்குத் திரும்பற எண்ணம் இல்லாம அங்கியே காலம் தள்ளிக்கிட்டிருந்தாரு. அப்ப தென்னாப்பிரிக்காவுல மகாத்மா காந்தி பிரிட்டிஷ் சர்க்காரை எதுத்துக்கிட்டிருந்தாரு.
"அவரு இந்தியா திரும்பி, சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிச்சபோது, ஃபிஜில இருந்த நம்ம வம்சாவளிக்கு ரோஷம் வந்துச்சு. தேசம் திரும்பணும்கிற சிந்தனை வந்துச்சு. அப்ப, 1929ல நான் பொறந்தேன். தென்னாப்பிரிக்காவுல காந்திஜியோட போராட்டத்துக்கு உத்வேகம் குடுத்த தில்லையாடி வள்ளியம்மை பேரை எனக்கு வச்சாங்க. தேசம் திரும்ப அங்க இருந்த 30 குடும்பம் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சதும், அங்க இருந்த கண்காணிகளும், மேனேஜரும் அடக்குமுறை பிரயோகிச்சாங்க. ஊர் திரும்பணும்னா, வெறும் கையோட போகணும். பிள்ளை குட்டிகளைக் கொன்னுருவோம்னெல்லாம் மெரட்டுனாங்க. யாருகிட்ட போயி முறையிடறது, எப்படி தப்பிக்கிறதுனு தெரியாத நிலையிலதான், எங்களை மீட்கற சாமி அந்தத் தீவுல வந்து எறங்குச்சு. அது வெற யாருமில்லை. உன் தாத்தா, என் ராசா இதோ இந்த படத்துல இருக்காறே இவர்தான். உன் தாத்தா பேரு ராமசாமி."
"நீ அவரை செல்லமா சாமினு கூப்பிடுவ இல்லியா" இடைமறித்த பரத் வள்ளியம்மாளை சீண்டினான். அவள் அதுவரை சொல்லிவந்த உணர்ச்சிகரமான முன்னோர் கதைக்கு அந்த ஆசுவாசம் உதவியது.
"போடா.." கிழவிக்கு மலரும் நினைவுகள் இன்னும் பழைய வெட்கத்தைத் தந்தன. அவள் தன் அன்புக்கணவனை சந்தித்த முதல் நாளுக்கு மறுபடி பயணித்தாள்.
*****
கேந்திரா இன்னும் கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலைக் கடக்கவில்லை. பரத்துக்கு தன் மெசேஜ் கிடைத்திருக்குமோ, மறுபடி ஒருமுறை அவனைத் தொடர்புகொள்ள நினைத்து தன் செல்ஃபோனை இயக்கினாள். பரத்தை மறுபடி அழைத்தாள். ‘நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்….’ "ப்ச்.. பரத் நீ என் கைல மாட்டினதும் நான் என்ன செய்யறேன் பாரு" மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
அதே நேரம் அவளுக்கு விஷ்வனாத்தின் அழைப்பு வந்தது. எடுத்தாள். "எஸ் டாடி, நான் ட்ரைவிங்ல இருக்கேன். சொல்லுங்க."
"பரத் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?"
"இல்லை டாடி, அவர் ஃப்ரெண்டு மனோகரை பாக்கதான் போனேன். விவரம் தெரியலை" அவரிடம் சக்கரவர்த்தியின் சதித்திட்டத்தை விவரிக்க விரும்பவில்லை.
"சரி நெவர் மைண்ட். நான் சொல்றதை கவனமா கேளு. வித் ஆர் விதவுட் பரத் நாம புது இஞ்சினைச் சொன்னபடி கொண்டுவந்துருவோம். ஐ எம் கான்ஃபிடண்ட் அபவுட் இட். ஆனா, அது நிறைவேறின உடனே, பிஃபோர் வி டிக்ளேர் இட் ஓபன்லி டு தி வேர்ல்ட், நம்ம நோஹவை, கேடிகே எப்படியாவது எடுத்துக்குவாங்கனு தோணுது. என் சந்தேகம் பேஸ்லெஸ் இல்லை. நம்ம ரிசர்ச் டிபார்ட்மெண்ட்லயே சில சந்தேகமான விஷயங்களை பாக்குறேன்."
"அப்ப உடனே ஆக்ஷன் எடுக்கலாமே டாடி!"
"இல்லை, அதுக்கெல்லாம் நேரமில்லை."
"அப்ப என்ன வழி இதுக்கு?"
"இந்த இஞ்சினோட அடிப்படை ஸ்ட்ரக்சர் ரெண்டு லேயர்ல இருக்கும். இந்த ரிசர்சை காப்பாத்தறதுக்காக வேணுமின்னே ஆறு லேயர் தயாரிச்சிட்டிருக்கோம். உண்மையான ரெண்டு லேயர் என்னனு எனக்கும் பரத்துக்கும் மட்டும்தான் தெரியும். அப்படியே அந்த ரெண்டு லேயர் என்னனு கண்டுபிடிச்சாலும், அதுல 120 கனெக்டிவிட்டி பாயின்ட்ஸ் இருக்கு. எது எதுக்கு காம்பினேஷன்னு எனக்கு மட்டுமே தெரியும். கேடிகேவை முறியடிக்கணும்னா, பப்ளிக்கா, அனலிஸ்ட்ஸ் முன்னால நம்ம இஞ்சினை அசம்பிள் பண்ணனும். பரத் இருந்தா இதை ஈசியா முடிக்கலாம். இல்லைனா, நான் இதை அசம்பிள் பண்ணுவேன். பப்ளிக்கா நாம அசம்பிள் பண்ணி, பேடண்டும் ரெஜிஸ்டர் பண்ணிட்டா கேடிகே ஒண்ணும் பண்ணமுடியாது."
"பிரில்லியண்ட் டாட்!"
"இன் கேஸ் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, எனக்கு நம்பிக்கையான ஒரு பேக் அப் வேணும். அதுக்குதான் பரத்தை தேடச் சொன்னேன். இப்ப புரியுதா? இந்த ரகசியம் என்னோட அழியக்கூடாது. இதை டாக்குமெண்ட் பண்ணினா, எப்படியாவது கேடிகே திருடிருவாங்க."
"கவலைப்படாதீங்க டாடி. இதுல நாம நிச்சயம் ஜெயிப்போம். இன்னும் அரை மணியில அங்க நான் இருப்பேன்."
"டேக் கேர், பை."
விஷ்வனாத் இவ்வளவு சென்டிமென்டாகத் தன்னிடம் என்றும் பேசியதில்லை என்பதால், கேந்திரா மனதில் கவலைப் பறவைகள் கூடுகட்டின. வெல்டிங் மணி அவள் வண்டிக்கு ஐந்து அடி தூரத்தில் இருந்தான். கேந்திராவின் அருகே ஒரு ஆட்டோ நகரவே, அந்த இடைவெளியில் மணியின் ஆட்டோ இப்போது. இடதுபுறம் ஒரு எம்பு எம்பினால் அவள் செல்ஃபோனைக் கைப்பற்றிவிடலாம். வண்டி நகர ஆரம்பிக்கும்போது எடுத்துக்கொண்டு, ஆட்டோவை நெரிசலுக்கு நடுவில் செலுத்தி, மறைந்துவிடலாம் என்பது மணியின் திட்டம்.
சிவப்பு, இப்போது பச்சையானது. மணி செல்ஃபோனைப் பறிக்கத் தயாரானான்.
(தொடரும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |