முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 16)
மூன்று மிகநுண்ணிய நுட்பங்களை குட்டன்பயோர்க் நிறுவன நிபுணர்குழாமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கி ஒருங்கிணைத்ததால்தான் முப்பரிமாண அங்கப் பதிப்பில் இரண்டாவதான முழு அங்கப் பதிப்புத் தடங்கலைத் தாண்டமுடிந்தது என்று பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்ததைக் கேட்ட ஷாலினி கைகொட்டிப் பாராட்டினாள். "ஆஹா, அற்புதம் அகஸ்டா! உங்க நிபுணர் குழுவின் திறமைகளும், அவற்றின் ஒருங்கிணைப்பும் பிரமாதம், பிரமாதம். கங்ராட்ஸ்!"

கிரண் அகஸ்டாவைப் பார்த்து "அகஸ்டா, நீங்க சொன்னதுல எனக்குப் பாதிதான் புரிஞ்சது. இருந்தாலும் பிரமாதமான நுட்பங்கள்னு தெரியுது. மீதிப்பாதி புரிய எனக்குப் ப்ரைவேட் ட்யூஷன் வேணும்னு நெனைக்கறேன். என்ன சொல்றீங்க?" என்றான். அகஸ்டா சற்று வெட்கத்துடன் களுக்கினாள்!

வழக்கம்போல் சூர்யா மீண்டும் அவர்களை முக்கிய விஷயத்துக்கு கொணர்ந்தார். "அகஸ்டா, ரெண்டாவது தடங்கலான முழு அங்கப் பதிப்பை உங்க நுட்பங்களினால எப்படி நிவர்த்திச்சீங்கன்னு சொல்லிட்டீங்க. மூணாவதான, தனிநபர் அங்கப் பதிப்பு ரொம்ப காலமாகுதுன்னு சொன்னீங்களே அதையும் குட்டன்பயோர்க் தாண்டியாச்சா?"

அகஸ்டா பெருமிதத்துடன் தொடர்ந்தாள். "ஆமாம் சூர்யா, அதுதான் மிகக்கடினமான தடங்கல்னு சொல்லணும். ஏன்னா, ப்ளாஸ்டிக் வடிவங்கள் போல ஒரேமாதிரி வடிவத்தை ஒருமுறை கணினியில் உருவாக்கி விட்டால் பல்லாயிரக் கணக்கில் பதித்துத் தள்ளமுடியாது. ஓவ்வொருத்தருக்கும் தேவையான அங்கத்தைப் பதிக்கணும்னா, அவர்களுடைய மூல (ஸ்டெம்) உயிரணுக்களை எடுத்து பெருமளவில் வளர்த்துப் பெருக்கி, ஒரு பதிப்புத் திரவத்தில் கலக்கி, அவற்றை கொஞ்சம் கொஞ்சமா அங்கக் கட்டமைப்புமேல் பரப்பி பின் வளர்த்துப் பிணைக்க வேண்டியிருந்தது."

ஷாலினி தலையாட்டினாள், "ஆமாம். இல்லைன்னா அங்கத்தை அவங்க உடம்பு நிராகரிச்சுடுமே? அவங்க உயிரணுக்களையே பயன்படுத்துவதுதான் சரி!"

அகஸ்டா தொடர்ந்தாள். "அதுனால, அதுக்கு வாரக்கணக்குல இல்லன்னா மாதக்கணக்குல கூட நேரம் வேண்டியிருக்கு. அவ்வளவு நாள் உடலுக்கு வெளியில் அந்த உயிரணுக்கள் உயிரோட இருக்கறது ரொம்பக் கஷ்டம். ரத்தம் பாய்ச்சினாலும் உயிரணுக்களின் வளர்ச்சி வேகம் குறைவா இருக்கறது மட்டுமல்லாமல், பல உயிரணுக்கள் வறண்டு உயிரற்றுவிடுகின்றன. அதனால் ஓர் அங்கத்தை முழுதாக உயிரோடு பதிப்பது மிகவும் அரிதாகியது."

கிரண் இடைமறித்தான், "வாவ்! இது ரொம்ப எமகாதகத் தடங்கலா இருக்கே!"

அகஸ்டா முறுவலித்தாள். "ஆமாம் கிரண். சிக்கலின் சிகரம்னுதான் சொல்லணு. நான், அலெக்ஸ், நீல், சேகர் எல்லாரும் ரொம்பவே மண்டையை உடைச்சுகிட்டு பல நுட்பங்களை யோசிச்சோம். ரொம்பநாள் எதுவும் சரிப்பட்டு வரலை..."

சூர்யா மிகுந்த யோசனையோடு குறுக்கிட்டார், "உம்... ஒரு அங்கத்தை ஒருத்தரோட மூல உயிரணுக்களைக் கொண்டே முழுசா ஒரேயடியா பதிக்கணும்னா கஷ்டந்தான். ஒருவேளை, அந்த அங்கத்தைத் தனித்தனியா மெல்லிய பிரிவுகளாப் பிரிச்சு தனித்தனியா ஒரே சமயத்துல பதிச்சு ஒண்ணு சேர்த்தா துரிதப்படுத்தலாம். ஆனா இதுக்கு கோந்துமாதிரி ஒட்டமுடியாதே எல்லாம் இடைவெளியில்லாம, அதுவும் எல்லா வடிவங்களின் நெளிவுசுளிவும் வேற சரியா வரணுமே! ஹூம், எப்படி சமாளிக்கப் போறீங்க?"

அகஸ்டா அதிர்ச்சிகலந்த பிரமிப்பில் வாய்பிளந்தாள்! "ஓ மை காட்! சூர்யா நீங்க நிச்சயமா ஒரு மந்திரவாதிதான். ஒரே போடுல அந்த நுட்பத்தைச் சரியா அடிச்சிட்டீங்களே. அதேதான் இந்தத் தடங்கலுக்கு நிவாரணம்! ஆனா, எப்படி செய்யப் போறீங்கன்னு கேட்டீங்களே, அதை நாங்க ஏற்கனவே செஞ்சாச்சு. ப்ராப்ளம் ஸால்வ்ட்!"

ஷாலினி குழம்பினாள். "இதிலே பெரிய பிரச்சனைகள் இருக்கே? எப்படி சரியான இடத்துல சிற்றறைகளும் நாளங்களும் சரியான வடிவத்துல வராமாதிரி அமைக்க முடியும்? ஒட்டறது எப்படி? எங்க மருத்துவத் துறையில அறுவைசிகிச்சையில் கூட இது கஷ்டமா இருக்கே?"

அகஸ்டா தொடர்ந்தாள். "அதனால்தான் ரொம்ப நாளா இந்த நுட்பம் சரிப்பட்டு வரலை. ஆனா திடீர்னு ஒருநாள் ஒரு மின்னல்போல் ஒரு யோசனை எங்களுக்கு உதிச்சுது! ஷாலினி நீ சொன்னபடி அறுவைசிகிச்சையைச் சார்ந்ததுதான் அந்த யோசனை."

ஷாலினி, "ஊம், அப்படியா, ரொம்ப இன்ட்டரெஸ்டிங்! மேல சொல்லுங்க" என்றாள்.

அகஸ்டா தொடர்ந்தாள், "சூர்யா சொன்னபடி முழு அங்கத்தைச் சிறு சிறு பிரிவுகளாப் பிரிக்கலாம். ஆனா ஒரே மட்டமாப் பிரிக்காமல், ஒட்டறத்துக்கு வசதியானபடி நாளங்களின் நெளிவு சுளிவுகளையும், சிறு அறைகளையும் பதிக்கறத்துக்கு சற்றேனும் சுலபமாகும்படியான பிரிவுகளாக்கலாம். அவை வெவ்வேறு வடிவமுமாகவும் பதிக்கலாம் இல்லயா?!"

கிரண் "ஓகே, அது புரியுது. ஆனா எல்லாத்தையும் எப்படி ஒட்டுவீங்க?" என்றான்.

அகஸ்டா தொடர்ந்தாள், "இதுலதான் அறுவைசிகிச்சைன்னு சொன்னேனே, அந்த மாதிரி, தனியாகப் பதிக்கப்பட்ட இரண்டு பிரிவுகளின் இடைவெளியில் ஒரே ஒரு உயிரணு அகலத்துக்கு மூல உயிரணுத் திரவத்தைத் தடவி சேர்த்துட்டா வெகுவிரைவில் அவை இரண்டு பக்கத்தையும் பிணைத்து ஒண்ணாக்கிடுது. இந்தமாதிரி எல்லா அங்கப் பகுதிகளையும் மூலஉயிரணுத் திரவம் தடவி ஒண்ணா சேத்துட்டா கூடிய சீக்கிரம் முழு அங்கமாகிடுது! அறுவைசிகிச்சை ரணம் ஆறுவதும் கிட்டதட்ட அப்படித்தானே?"

கிரண் "ஓ நீங்க என்ன செஞ்சீங்கன்னு புரிஞ்சுடுச்சு! அங்கப்பகுதிகள் லெகோ தொகுதிகள் (lego blocks) மாதிரி. அவற்றை மூல உயிரணுக்களையே சிமெண்ட்டாப் பயன்படுத்தி ஒட்டி முழு வடிவமாக்கறீங்க. நிஜமாவே பிரில்லியண்ட்தான்!". "ரொம்ப கரெக்டா சொன்னே கிரண்! அதேதான். லெகோ பிளாக்ஸ் சரியான உவமையே இருக்கு!" என்று அகஸ்டா கூற கிரண் பவ்யமாக ஒரு காலைப் பின்னால் வைத்துக் குனிந்து பாராட்டை ஏற்றுக்கொண்டான்!

அகஸ்டா தொடர்ந்தாள். "ஆனா, இது வடிவமைப்புக்கு மட்டுந்தான் உதவியது. அங்கம் சரியா வேலை செய்யணும்னா, பகுதிகளை துரிதமாகப் பதித்து எல்லாவற்றையும் பொருத்தி, மூல உயிரணுப் பரப்பினால் பிணைத்து, கூடிய சீக்கிரம் அங்கம் பெறக்கூடியவரின் ரத்தத்தையே பாய்ச்சி உயிருடன் இயங்கச்செய்ய வேண்டும். அதனால், பகுதிகளை மிகப் பெரியதாகவும் வகுக்க இயலாது. கிரண் சொன்னபடி பார்த்தா, சின்ன லெகோ பிளாக்ஸா பிரிச்சுப் பதிக்கணும், ஆனா முன்னால் சொன்னபடி, நாளங்களும் அறைகளும் சரியா வடிவமையற அளவுக்குச் சற்றுப் பெரிதாவும் இருக்கணும். ரொம்ப விவகாரமான விஷயம்னுதான் சொல்லணும். ஒரு குறிப்பிட்ட அங்கத்தின் முப்பரிமாண மாடலை வச்சு நான் சொன்ன ரெண்டு அம்சங்களுக்கும் சரிப்பட்டு வரா மாதிரியான வடிவம் மற்றும் அளவுடன் பகுதிகளைப் பிரிக்கும் வழிமுறை குட்டன்பயோர்கின் ஒரு முக்கிய ரகசிய நுட்பம்."

ஷாலினி கை கொட்டி ஆராவாரித்தாள். முறுவலுடன் தலைவணங்கிப் பாராட்டை ஏற்று பெருமையில் மிதந்த அகஸ்டாவை, சூர்யாவின் வினா தடாரென்று தரைக்கு விழவைத்தது. "அகஸ்டா, உங்கள் நுட்பச்சிறப்பை நான் பாராட்டுகிறேன். ஆனால், முழு அங்கப் பதிப்பு வெற்றிகரமாகிவிட்டது என்றால் எங்களுக்கு இங்கே என்ன வேலை? அதில் எதோ பிரச்சனைபோல் தோன்றுகிறது. அது என்ன, விளக்குங்களேன்."

இதைக் கேட்டதும் அகஸ்டா நிலைகுலைந்தே போனாள். நிற்கமுடியாமல் சற்றுத் தடுமாறவே, ஷாலினியும் கிரணும் தாங்கி அவளை நடத்திச்சென்று அங்கிருந்த ஸோஃபாவில் அமர்த்தினர். ஓரிரு நிமிடங்கள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டிருந்த அகஸ்டா மெள்ளச் சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்றாள். "சூர்யா, உண்மைதான். எங்கள் நுட்பம் சிறப்பாக இருந்தாலும், ஒரு பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. அதனால்தான் உங்களை வரவழைத்தேன்" என்று கூறியவளின் குரல் தழுதழுக்கவே, அவளருகில் சென்று ஷாலினி அவளை அரவணைத்து ஆசுவாசப் படுத்தினாள்.

பொங்கிவந்த விசும்பலை அடக்கிக் கொண்டு அகஸ்டா தொடர்ந்தாள். "முழு அங்கப் பதிப்பு நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது. ஒரு நோயாளிக்கு அங்க மாற்றமும் வெற்றிகரமாகச் செய்துமுடித்தோம். ஆனால்..." மீண்டும் குரல் தழுதழுக்கவே, சூர்யா ஊக்குவித்தார். "தயங்காதீங்க அகஸ்டா. பிரச்சனை எதுனாலும் சொன்னாத்தானே நிவர்த்திக்க முடியும். விவரமா சொல்லுங்க."

"நீங்க சொல்றது சரிதான் சூர்யா. சொல்றேன். முழுஅங்கப் பதிப்புக்காக சிறு பகுதிகளைப் பிணைக்கற நுட்பம் எங்க தனிச்சிறப்புன்னு சொன்னேன் இல்லயா? அந்த சிறப்பு நுட்பத்துக்கே பங்கமான பிரச்சனைதான் வந்திருக்கு." மேற்கொண்டு அகஸ்டா விவரித்தது, மிகவும் சிக்கலாகத் தோன்றியது...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com