வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டு, காவியுடை அணிந்து, ஒரிசாவிலுள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தருகே சன்னியாசியாகத் திரிந்தார். தனது இஷ்டதெய்வத்தின் வடிவத்தை அவர் ஆழ்ந்து தியானிக்கவே அது உருவமற்ற பிரம்மத்தின் தியானமாக மாறி, பின்னர் பிரம்ம நிஷ்டையாக மாறிவிட்டது.
இடமும் காலமும், சித்தும் அசித்தும் யாவும் முழுவதுமாக அவருக்கு மறந்துபோயின. உடனே ஸ்ரீஜகந்நாதர், தேவி சுபத்திரையுடன் வந்து, அவர்முன்னே ஒரு தங்கத் தாம்பாளத்தை வைத்துவிட்டு மறைந்தார். அந்தத் தங்கத் தாம்பாளத்தில்தான் தினந்தோறும் பூரி ஜகந்நாதர் கோவில் பூசாரிகள் கருவறையில் சுவாமிக்கு நிவேதனம் படைப்பர்.
மாதவதாசர் கண்விழித்துப் பார்த்ததும் தன்முன்னே ஒரு தங்கத் தாம்பாளத்தில் சுவையான உணவு நிரம்பி இருப்பதைக் கண்டார். அதனை வயிறார உட்கொண்டபின் மீண்டும் அவர் தனக்கு உள்ளிருந்த சொர்க்கத்துக்கே திரும்பிப் போய்விட்டார்.
இதனிடையே, தாம்பாளம் காணாமல் போனது தெரியவந்தது. அது திருடப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதித் தேடுகையில் கடற்கரையில் இருந்த மாதவதாசருக்கு அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகத் திறமையான ஒரு போலீஸ்காரர் மாதவதாசரைக் கைது செய்து சிறையில் அடைத்தார். அங்கே அவரை இரக்கமில்லாமல் அடித்தனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை.
அன்றிரவு தலைமைப் பூசாரியின் கனவில் ஸ்ரீஜகந்நாதர் தோன்றி இனிமேல் கோவிலில் எனக்கு நீ நிவேதனம் படைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். "எனக்கு நிவேதனம் வைக்கிறாய், நான் அதை ஏற்றுக்கொண்டால் என்னை அடிக்கத் தொடங்குகிறாய்" என்றார் சுவாமி. இவையெல்லாம் மாதவதாசரின் பெருமையையும் உண்மையான பக்தியின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்த ஜகந்நாதர் செய்யும் லீலையே எனப் புரிந்துகொண்டார் தலைமைப் பூசாரி.
பூரியில் இருந்த சில பண்டிதர்களுக்கு, வங்காளத்திலிருந்து புதிதாக வந்த மாதவதாசருக்கு ஏற்பட்ட திடீர்ப்புகழ் பிடிக்கவில்லை. அவர்கள் மாதவதாசரைத் தம்மோடு வாதிட வரும்படி அழைத்தனர். மாதவதாசர் அப்படியொன்றும் பண்டிதரல்லர். அவர் சாஸ்திரங்களைக் கற்றது தனக்கு ஊன்றுகோலாக இருக்கும்படியே அன்றி, மற்றவர்களை அடிக்கும் தடியாகப் பயன்படுத்த அல்ல. எனவே வாதம் தொடங்குவதற்கு முன்னரே அவர் தான் தோற்றுவிட்டதாக எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டார். மிகுந்த ஞானியெனப் போற்றப்பட்ட மாதவதாசர் இவ்வாறு ஒப்புக்கொண்டது தலைமைப் பண்டிதருக்கு மகிழ்ச்சி தரவே அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதை எடுத்துக்கொண்டு அவர் காசிக்கு ஓடினார். அங்கே இருந்த பண்டிதர்கள் நடுவே இந்தப் பத்திரத்தைக் காட்டி, தன்னை மாதவதாசரைவிட உயர்ந்தவராக ஏற்கவேண்டுமென வற்புறுத்தினார்.
இறைவன் தன் பக்தனை அவமானப்பட விடமாட்டார். அந்தக் கையெழுத்திடப்பட்ட பத்திரத்தை எடுத்து மற்றவர்கள் வாசித்தபோது, அதில் மாதவதாசர் வெற்றியடைந்ததாகவும் தான் தோற்றதாகவும் பண்டிதர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருந்தார்! பக்தனை அவமானப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்.
ஸ்ரீ சத்திய சாயி பாபா |