புரியாத பாசம்
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியவேளை. என் அறையில் இருந்து வெளியே வந்தேன். ஊஞ்சல் எதிரில் இருந்த ரேழியின் ஒரு தூணில் சாய்ந்தபடி அம்மா பூமாலை கட்டிக்கொண்டு இருந்தார். வீட்டை ஆக்கிரமித்திருந்த அமைதி அப்பா வீட்டிலில்லை என்பதை உணர்த்தியது. அம்மாவிடம் பேச இதுதான் சரியான சந்தர்ப்பம்.

என் பெயர் ஸ்ரீதர். என் அப்பாவுக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலின் அலுவலகத்தில் மேற்பார்வையாளர் வேலை. அதனாலேயே நான் படித்தது வளர்ந்தது எல்லாமே ஸ்ரீரங்கத்தில்தான். படிப்புமுடிந்த கையோடு சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்க இந்த மூன்று மாதங்களாய் நான் சென்னைவாசி. வாராவாரம் வெள்ளி இரவு பஸ்ஸில் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு ஞாயிறு இரவு மீண்டும் சென்னை சென்றுவிடுவேன்.

எனக்கு என் அப்பா என்றாலே சிறு வயதிலிருந்தே ஒருவித பயம். வளர வளர அந்த பயமே அவர்மேல் வெறுப்பாய் மாறியிருந்தது. அப்பாவுக்கு நல்ல ஆஜானுபாகுவான உடல். அதற்கேற்றாற்போல் வெண்கலக்குரல். என் பயத்துக்கும் வெறுப்புக்கும் இந்த வெளித்தோற்றம் மட்டுமே காரணமென்று சொல்லிவிட முடியாது. அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். கோவிலில் பணி செய்வதாலேயோ என்னமோ அதோடு கொஞ்சம் ஆசார அனுஷ்டானங்களும் சேர்ந்துகொண்டன. காலையில் எழுந்ததும் பல்தேய்த்த கையோடு குளித்துவிட வேண்டும். அதற்குப் பின்தான் காஃபி. என்ன ஆனாலும் இரண்டு வேளையும் சந்தியாவந்தனம் செய்யவேண்டும். ஏதோஅரசாங்கமாய்ப் பார்த்து இலவச டிவி வழங்கியது அதுநாள்வரை வீட்டில் டிவி கிடையாது. சினிமா என்ற வார்த்தையே அப்பாவுக்குப் பிடிக்காது. இப்படிப் பல கட்டுப்பாடுகள் நிறைந்த சமர்த்துப் பிள்ளையாகத்தான் நான் வளர்க்கப்பட்டேன். அப்பாவின்மேல் எனக்குள்ள வெறுப்புக்கு இந்த கண்டிப்புதான் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.

அப்பாவுக்கு முன்கோபம் அதிகம். அடிக்கடி பொறுமையிழந்து காரணமேயின்றி அம்மாவைத் திட்டுவார். இன்று காலைகூட அவரது மூக்குக்கண்ணாடியைக் காணவில்லை. வைத்த இடத்தை அவரே மறந்துவிட்டார். ஆனாலும் பாவம் வழக்கம்போல் தேவையே இல்லாமல் திட்டு வாங்கியதென்னவோ அம்மாதான். உண்மையில் எனக்கு அப்பாவைப் பிடிக்காமல் போனதே அவர் அம்மாவிடம் நடந்துகொள்ளும் விதம்தான்.

இன்றோடு இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். மனதில் தீர்மானித்துக்கொண்டு அம்மாவின் எதிரிலிருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தேன்.

"ஸ்ரீதரா, காபி கலக்கட்டுமா? உனக்காக புதுசா டிகாக்‌ஷன் போட்டு வச்சு இருக்கேன்."

"இல்லம்மா. இப்போ வேண்டாம்."

ஊஞ்சலில் இருந்து இறங்கி அம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். "ம்ம்ம் ..... அம்மா... வந்து... ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."

"கோவில்ல தர்மகர்த்தா வந்திருக்கார். ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்னு அப்பா போயிருக்காடா. ஒரு மணிநேரத்துல வந்துடுவா."

"அம்மா . நான் உன்கிட்டதாம்மா பேசணும். அதுவும் அப்பா இல்லாதப்போ. இன்னிக்குதான் அதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சு இருக்கு." நான் எப்படிப் பேச்சைத் துவங்குவதென்று தயங்கித்தயங்கி நிற்க அம்மா முந்திக்கொண்டு, "டேய் யாருடா அந்த பொண்ணு? அப்பாவ நினைச்சாலே எனக்கு ஒடம்பும் மனசும் பதர்றதுடா. உங்கப்பாக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதே.. நமக்கு என்னத்துக்குடா இதெல்லாம்..."

"என்னது காதலா! ஏம்மா நான் என்ன பேசவரேன், நீ என்ன சொல்ற? நான் பேசவந்ததே உன்னப்பத்திதான். இப்போ நான் கை நெறைய சம்பாதிக்கறேன். நீ என்கூட சென்னை வந்துடும்மா. அங்க எல்லா வசதியும் இருக்கு. உன்ன ராணி மாதிரி நான் பாத்துக்கறேன் மா."

"ஹ்ம்ம்... இதெல்லாம் கேக்க நன்னாத்தான் இருக்கு. நடைமுறைக்கு ஒத்து வராதுடா. உங்கப்பா இந்தக் கோவிலவிட்டு எங்கயும் வரமாட்டார்."

"அம்மா, அப்பாவ யாரு கூப்டா? நீ வாம்மா என்கூட!"

"என்னடா சொல்ற. அப்பா இல்லாம நான் எப்படி..."

"போதும்மா, நீ கஷ்டப்பட்டது. இப்போ சொன்னியே ஒடம்பும் மனசும் பதர்றது அப்டின்னு. போதும். நீ அப்பாக்கு பயந்து, பயந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்தது. அப்பாவுக்காக பாத்து, பாத்து எல்லாம் செஞ்சு அவரே உலகம்னு வாழ்ந்துண்டு இருக்க. ஆனா அவர் தனக்குத் தேவையான பணிவிடைகள செஞ்சு குடுக்கவும், தன் கோபத்தக் காட்டவும் மட்டும்தான் பொண்டாட்டி அப்டின்னு நினைக்கறார்? என்னிக்காவது ஒருநாள் அப்பா உன்கிட்ட அன்பா பாசமா நடந்துண்டு இருப்பாரா? மதிக்க தெரியாத, மரியாத குடுக்கத் தெரியாத இவரெல்லாம் நீ இல்லாம தவிக்கணும்மா. அப்போதான்மா இவருக்கு உன் அருமை புரியும்."

"டேய் என்னடா விட்டா பேசிண்டே போற? புரிஞ்சுக்க வேண்டியது அவர் இல்ல. நீதான். அவர் மொதல்ல எனக்குப் புருஷன், அப்புறம்தான் உனக்கு அப்பா. அவர் என்கிட்ட பாசமா இருக்கார் அப்டிங்கறது எனக்குப் புரிஞ்சா போதும்டா. ஆமா, உங்கப்பாபத்தி உனக்கென்ன தெரியும்?"

"உங்கப்பா கொஞ்சம் முன்கோபக்காரர்தான். அதுக்காக உங்கப்பாக்கு என்மேல பாசமே இல்லன்னு நினைச்சுட்டியா. என்னோட பொறந்தாம் ரொம்ப ஏழைப்பட்ட குடும்பம்தான். தாலிச்சரடுல இருந்த குந்துமணி தங்கத்தத் தவிர எங்கப்பாவால வேற எந்தச் சீர்செனத்தியும் செய்யமுடியல. வெறுங்கைய வீசிண்டு வந்துட்டாளேன்னு உன் பாட்டி, அத்தை எல்லாரும், நின்னா குத்தம் உக்காந்தா குறைன்னு என்ன கரிச்சுக் கொட்டிண்டே இருந்தா. அப்போதான் உங்கப்பா ஆத்துல இருக்கறவாள தெசதிருப்ப என்கிட்ட பேசினாலே எரிஞ்சு விழறாப்ல பேச ஆரம்பிச்சார். அப்பா எவ்ளோ கோபப்பட்டாலும் நான் பொறுமையாதான் இருந்தேன். அதுவே ஆத்துல இருந்த எல்லாருக்கும் என்மேல ஒரு அனுதாபத்த உண்டு பண்ணித்து. எல்லாரும் என்கிட்ட பாசம் காட்ட ஆரம்பிச்சா. நாளடைவுல உங்கப்பாக்கு குரலை உசத்தி பேசறதே அவரோட குணாதிசயமா மாறிப்போயிடுத்து.

"மதிப்பு அப்டிங்கறது வெறும் பேசற வார்த்தைல மட்டும் இல்லடா. எப்பவும் நான் உன்கூட இருப்பேன் அப்டிங்கற நம்பிக்கயக் குடுக்கறதுதான் உண்மையான புருஷலக்ஷணம். கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சுதான் நீ பொறந்த. அந்த பத்து வருஷத்துல எத்தன பேர் உங்கப்பாவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என் காதுபடவே சொல்லி இருக்கா தெரியுமா. ஏன் ஒரு தடவ உன் பாட்டியோட தூரத்து சொந்தம்னு சொல்லிண்டு ஒருத்தர் தாம்பூலத்தட்டு சகிதமா பத்து இருபது மனுஷாளோட ஆத்துக்கே வந்துட்டார். உங்கப்பா கோபத்துல தாம்பூலத்தட்ட காலால எட்டி உதைச்சார். இந்த ஜென்மத்துல இவமட்டும்தான் என் பொண்டாட்டி. ஒருவேளை இவ செத்துப்போனாகூட நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அப்டின்னு சொன்னார் பார் அங்கதாண்டா உங்கப்பா என் பொண்டாட்டி எனக்கு எவ்ளோ முக்கியம் அப்டின்னு ஊருக்கே காட்டினார்.

"உன் தாத்தா அதாவது என் அப்பா தவறிப்போன சமயத்துல புள்ள இல்லாத வீடாச்சே யார் காரியமெல்லாம் பண்ணப்போறான்னு பேசிண்டு இருந்தப்போ, மாப்ள நான் இருக்கேன் அப்டின்னு எல்லாத்தையும் எடுத்துப்போட்டு செஞ்சார் பாரு, அங்கதாண்டா உங்கப்பா என் பொண்டாட்டி உணர்வுகள நான் மதிக்கறேன் அப்டின்னு ஊருக்கே காட்டினார்."

கொஞ்சம் உணர்ச்சி ததும்பப் பேசியதாலேயே அம்மாவின் கண்கள் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அதைப் புடவைத் தலைப்பால் துடைத்தபடியே எழுந்த அம்மா தொடர்ந்தார், "என்னமோ இவன் புதுசா என்ன ராணி மாதிரி பாத்துக்கப் போறானாம். நான் இந்தாத்துலயே ராணி மாதிரிதாண்டா வாழ்ந்துண்டு இருக்கேன். கைல நாலு காசு வந்ததும் அப்பாவையே குறைசொல்ற அளவுக்கு நீ பெரிய மனுஷனாயிட்டியோ?"

அம்மா பேசிக்கொண்டு இருக்கும்போதே வாசல் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்க, "அப்பா வந்துட்டார்னு நினைக்கறேன் நாம பேசினதெல்லாம் அப்பாக்கு தெரியவேண்டாம்" என்று அம்மா அவசரமாகச் சொன்னார்.

"ஏண்டி பாக்கியம்! நீ எல்லாம் எதுக்குதான் லாயக்கு. மழை வரமாதிரி இருக்கு. மாடில துணி எல்லாம் நனையறதுக்குள்ள எடுத்துண்டு வா. குடை எடுத்துண்டு போடி. அப்புறம் மழைல நனைஞ்சுட்டு ராத்திரி பூரா லொக்குலொக்குன்னு இருமி என் உயிரை வாங்காத."

அப்பாவின் வெறுப்பான பேச்சை தாண்டி, அவருக்கு அம்மாமேல் இருக்கும் உண்மையான பாசம் முதல்முறையாக எனக்குப் புரியத்தொடங்கியது.

ஸ்ரீ,
ரிச்மண்ட், வர்ஜீனியா

© TamilOnline.com