சலனம்
மார்கரீட்டா...

ரெஸ்ட்ரண்ட் மென்யூ கார்டைப் பார்த்தவுடன் ரகு உற்சாகமடைந்து, கண்கள் மினுமினுக்க, உதட்டை ஈரமாக்கிக்கொண்டே, வெயிட்டரிடம் சைகை காட்ட ஆயத்தமானான். எதிர்ப்புறம் சுசி அவன் கையிலிருந்த டிரிங்க்ஸ் மென்யூவைக் கவனித்தவாறே, அகிலிடம், "உனக்கு என்னடா கண்ணா வேணும்?" என்றாள். அவன் பூஸ்டர் சீட்டிலிருந்து இறங்க முயற்சி செய்துகொண்டே, "மேக் அண்ட் சீஸ்" என்றான். குழந்தை அப்பாவிடமிருந்த கார்டை பிடுங்க எத்தனிக்க, ரகு கார்டிலிருந்து கண்களை விலக்காமல், அந்தத் தாக்குதலை லாவகமாகத் தவிர்த்தான்.

சுசி தனக்கு 'வாட்டர் வித்தவுட் ஐஸ்', அகிலுக்கு 'ஆப்பிள் ஜூஸ்' ஆர்டர் செய்தாள். ரகு தனக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஷாட் வாங்கிக்கொண்டான்.

உணவு வந்தது. சுசி சற்றே எரிச்சலுடன், ஆனால் ஒன்றும் பேசாமல், சாப்பிடத் தொடங்கினாள். இடையிடையே, அகில், ரகுவிடமிருந்த கிளாஸைப் பிடுங்கவும், "ப்பா..கேன் ஐ ஹேவ் எ சிப்?", "ஆங்...வென் கென் ஐ டேஸ்ட் இட்?" என்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.

ரகு, "நோ, இது அடல்ட்ஸ் டிரிங்க்" என்று அவன் கையைத் தட்டிவிட்டபடி, 'ஐ ஸ்பை' விளையாடி அவனைத் திசை திருப்பினான்.

செக்கை செட்டில் செய்துவிட்டு மூவரும் காரில் ஏற, "நான் ஓட்டறேன்.." என்று சுசி சாவியை வாங்கிக்கொண்டாள். அகிலை கார் சீட்டில் உட்கார வைத்துவிட்டு ரகுவிற்குப் பக்கத்தில் ஏறினாள். சற்றே வண்டியை உரும விட்டுக் கிளப்பினாள். சிறிதுநேரம் காரில் மௌனம். ரியர்வியூ மிரரில் அகில் தூங்கிவிட்டிருந்தான். ரகுவும் கண்களை மூடி அமர்ந்திருந்தான். அவளது எண்ணங்கள் அலையலையாய் பின்னோக்கி ஊர்ந்தன.

*****


2014 புத்தாண்டு இரவு...

"உங்களுக்கு எத்தைன தடவை சொல்றது, குழந்தை முன்னாடி குடிக்காதீங்கனு" பார்ட்டி முடிந்தவுடன் சுசி இறைந்தாள்.

"சுசி, நான் ஒண்ணும் குடிகாரன் இல்லை, இது ஃபிரெண்ட்ஸுக்காக, சோஷியல் டிரிங்கிங்."

"அதெல்லாம் அகிலுக்கு தெரியாது, அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம், அப்பா அழகழகான கிளாஸ்ல, கலர்கலரா குடிக்கறார், ஆனா தனக்குத் தர மாட்டேங்கறார், அவ்வளவுதான்"

"இத ஏன் பெரிய விஷயமாக்குறே, ஊர்ல, உலகத்திலே யாரும் குடிக்கலையா? சரியான பத்தாம்பசலி!"

"குடிக்கிறது சரியா, தப்பாங்கற விவாதத்துக்கு நான் வரலை, அவன் முன்னாடி வேண்டாம். அவ்வளவுதான்."

"அதான் ஏன்னு புரியல."

"அவனுக்கு அந்த எக்ஸ்போஷர் வேணாம்."

"கண்ணு, திஸ் இஸ் அமெரிக்கா, ஃபார் ஹெவன்ஸ் ஸேக், இங்கில்லாட்டி என்ன, எல்லா இடங்கள்லேயும் அவன் அதைப் பார்த்துத்தான் ஆகணும்."

"எக்ஸாக்ட்லி, அதனாலதான் வீட்டில, நம்ம நடத்தை அவனுக்கு அந்த பெர்மிஷனை தரக்கூடாது. That makes a big difference. நம்மமாதிரி குடும்பங்கள்ள குழந்தைங்களுக்கு அப்பா அம்மாதான் ஆதர்சம், முன்மாதிரி. அவன் ஆர்வத்தைத் தூண்டவேணாம், அவன் கைக்கு கிடைக்காத, ஆனால் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருக்கும் சலனம். அது வேண்டாம்."

"மத்த அப்பா அம்மா பண்ணாத எந்தத் தப்ப நான் பண்ணிட்டேன்? எல்லாருமா உன்னைமாதிரி பாரனாய்டா இருக்காங்க... அண்ட் அவன் சின்னக் குழந்தை... அவனுக்கு என்ன பெரிசா புரிஞ்சிடப் போகுதுன்னு இந்தப் பேச்சு பேசறே?"

"நீங்க சொல்ற இந்த நாட்டிலதான் எல்லா சினிமாவையும் குழந்தைங்க பார்க்க அனுமதிக்கறதில்லை... G, PG-13, R னு பிரிச்சு வைச்சிருக்காங்க. அதேமாதிரி, மொபைல், மற்ற டெக் ஊடகங்கள்ளேயும் பேரண்டல் கண்ட்ரோல்ஸ் உள்ளடங்கி இருக்கு. இங்க அப்பா, அம்மா சண்டை போட்டா, குழந்தைங்கள வேற ரூமுக்கு அனுப்பிடறாங்க.. அப்படியே கெட்ட வார்த்தை உபயோகிச்சா, அத எழுத்தா உச்சரிக்கிறாங்க.. குழந்தைங்க அறிவுக்கு எட்டாத, புலப்படாத விஷயங்கள் உலகத்தில நிறயை இருக்கு. அதுக்கு அவங்களை எக்ஸ்போஸ் பண்ணத் தேவையில்லைங்கிற அணுகுமுறை எல்லா நாட்டிற்கும், பெற்றோருக்கும் பொதுதான். அகிலுக்கு ஆல்கஹாலின் அளவு, தன்மை என்ன, டோபமைன்னா என்ன, அது மூளையை எப்படி பாதிக்குது, எதுவும் தெரியாது.. அவனுக்கு நீங்க மறுபடியும் மறுபடியும் கொடுப்பது, 'இது அடல்ட்ஸ் டிரிங்க்,' அதை குடிக்க அவன் வெயிட் பண்ணணும்கிற மெஸேஜ்தான், அது ஆபத்தானது.. அவன் வளர வளர, அந்த மனசுல அது ஆழமா பதியும்.. "சோஷியல் லர்னிங் தியரி", கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த மெசேஜை அவனுக்கு தரக்கூடாதுங்கறது என்னோட அபிப்ராயம், ஆசை."

அதற்குள் ரகு செல்ஃபோனில், ஃபேஸ்புக்கில் நோண்ட ஆரம்பத்திருக்க, சுசியின் கண்கள் சட்டென்று கலங்கின..

*****


பொருந்தாத அலைவரிசைதான் தாம்பத்தியத்தின் மிகப்பெரிய சாபம் என்று நினைத்துக்கொண்டது நினைவில் வர, சுசியின் கண்கள் ஒரு கணம் அதிர்ந்து, நினைவலை கலைய, அனிச்சையாய் கை கராஜ் கதைவத் திறந்தது. அகிலை எழுப்பாமல், அலுங்காமல் தூக்கிக்கொண்டு, அவன் காதுகளை மூடிக்கொண்டு கராஜ் பொத்தானை அழுத்தி, ஒற்றைக் கையால் சாக்ஸைக் கழற்றி, ஷூவை விலக்கி, விளக்கை அணைத்து, கதவுகள் எல்லாவற்றையும் மூடி, படுக்கையில் சேர்த்து முத்தமிட்டாள். அவன் தலையை வருடியபடி பக்கத்தில் சாய்ந்தாள்.

ரகு படுக்கையறை பேட்டியோ கதவைத் திறந்து, அழகான முழுநிலா வெளிச்சத்தில் ஃபோனில் 'ஆங்க்ரீ பர்ட்ஸ்' விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென அதிர்வு ஏற்பட, விரலால் தடவி, ஹலோ என்றான்..

"என்னது, எப்ப? ஓ மை காட்... ஹவ் இஸ் ஷீ நவ்? ஐயோ... நான் உடனே வரேன்.. அழாதே, அத்திம்பேர் ஊர்ல இருக்காரா? ம்ம்.. ஐ வில் பீ தேர், வந்து கால் பண்றேன்."

"சுசி, தியாவுக்கு ஆக்ஸிடண்ட், ஐ ஹவ் டு கோ."

"வாட், மை காட், என்னாச்சு, எங்க இருக்கா?"

"ஹாஸ்பிடல்ல. மாலினி இஸ் வித் ஹர், ஐ நீட் டு லீவ் நவ், அங்க போய் ஃபோன் பண்றேன் , இரண்டு சட்டை, பேண்ட் பேக் பண்ணு. நான் ஃப்ளைட் பார்க்கறேன்..."

உடனே சுசி தன் போனை எடுத்து ரீசன்ட் கான்டாக்ட்ஸில் தேடி, "அக்கா, என்னாச்சு? அய்யோ... ஹவ் இஸ் ஷீ? டாக்டர்ஸ் என்ன சொல்றா? ம்... ஓ காட்... டோன்ட் வர்ரி, பகவான் இருக்கார். ரகு இப்ப உடனே கிளம்பி வர்றார்."

அவனை வழியனுப்பிவிட்டு கௌச்சில் வந்தமர்ந்தாள். தியா... அழகான, அறிவான 17 வயதான ரகுவின் அக்காமகள். அட்லாண்டாவில் பிறந்து, அம்பாசமுத்திரம் பாட்டியிடம் வளர்ந்து, ஸ்பெல்லிங் பீ வென்று, டிபார்ட்மென்ட் ஆப் எஜுகேஷனில் "Digital learning to improve education in Georgia" என்று ப்ரசெண்டேஷன் செய்து, SAT இல் 2390 மார்க் வாங்கி, ஆதலால் அப்பா அம்மாவிடம் கார் ஓட்ட அனுமதி கேட்டுக்கொண்டிருந்த தியா... இன்று ஆஸ்பத்திரியில்...

தூங்க மனமின்றி, பூஜையறைக்குள் நுழைந்தாள். தன்வந்திரி ஸ்லோகத்தை நூத்தியெட்டு முறை சொல்லத் தொடங்கினாள். அதிகாலை கௌச்சில் கண்ணயர்ந்த பொழுது, செல்போன் பாடியது. "ம்... ரகு, சொல்லு. ஓ ஓகே. தாங்க் காட், எப்ப, ஓ... தட்ஸ் நாட் பேட், அக்கா எப்படி இருக்கா? குட், நான் கிளம்பி வரேன். இல்லை, வீட்டில சமைச்சாவது கொடுக்கலாமே. ஏன்? ஓஹோ.. அப்படியா... சரி.. யூ டூ டேக் கேர்."

ஒருவாரம் கழித்து ரகு வீடுவந்து சேர்ந்தான். மீசையும், தாடியுமாய், கண்கள் சிவந்து ஜீவனிழந்து உடல் மெலிந்திருந்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அகிலைத் தேடி வாரியணைத்து முத்தமிட்டான். சுசியின் தோளில் வெப்பம் தேடிக் கேவினான்.

பின்பு சுதாரித்தெழுந்து, ஐ-பேடை உயிர்ப்பித்து, WSB வலைத்தளத்தில் ஜியார்ஜியா செய்தியைத் தேடினான். "சுசி. இங்கே வா. இதப்பார், படிச்சியானு தெரியல..."

"Under-age drunk driver: Tragedy in downtown!"

"தியா இருந்த வண்டியை ஓட்டின அவேளாட க்ளாஸ்மேட் அளவுக்கதிகமா குடிச்சிருந்தா. binge drinking. அந்தப் பெண்ணும், முன்சீட்டிலிருந்த பையனும் டெட் ஆன் அரைவல். எங்கக்கா பண்ண புண்ணியமோ பூஜையோ தியா மைனர் முதுகுத்தண்டு காயத்தோட பிழைச்சா. 'வெரி ட்ரமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ்' அவளை இப்படி படுத்த படுக்கையாப் பார்த்தபோது சர்வநாடியும் நடுங்கிடுத்து. அந்த ரெண்டு பசங்களும்... கடவுளே! அவங்க அப்பா அம்மாவைப் பார்த்தேன். அச்சச்சோ. தன் குழந்தையை இழக்கிறது எவ்வளவு பெரிய தண்டைன!"

"நாம அகிலை இன்னும் நல்லாப் பார்த்துக்கணும் சுசி..."

அவளது மடியில் படுத்துத் தேம்பியழுத கணவனை நிறைந்த கண்களால் வருடினாள். தனக்குள்ளே சிறியதாக ஒரு புன்னகையும் பூத்துக்கொண்டாள்.

அஷ்வின்யா,
கலிஃபோர்னியா

© TamilOnline.com