பித்துக்குளி முருகதாஸ்
உள்ளத்தை உருக்கும்வகையில் பக்திப் பாடல்களைப் பாடக்கூடியவரும் சிறந்த அம்பாள் மற்றும் முருக பக்தருமான பித்துக்குளி முருகதாஸ் (95) சென்னையில் காலமானார். இவர், கோயம்புத்தூரில் 1920ம் ஆண்டு சுந்தரம் ஐயர்-அலமேலு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலசுப்ரமணியன். நல்ல குரல்வளம் இருந்ததால் இவரது தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் இவருக்கு இசைப்பயிற்சி அளித்தார். முத்துசுவாமி தீக்ஷிதர், ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் ஆகியோரது கீர்த்தனைகள் உட்பட பல கிருதிகளை முறைப்படிப் பாடக் கற்றுக்கொண்டார். ஒரு சமயம் ரமண மஹரிஷியைச் தரிசிக்க நேர்ந்தது. ரமணரின் அருட்பார்வை பாலசுப்ரமணியனின் மீது விழுந்தது. அது திருப்புமுனை ஆனது. காந்தியடிகள்மேல் கொண்ட பற்றினால் உப்புசத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார். சிலகாலம் சிறைவாசம் அனுபவித்தார். பல்வேறு பணிகள் செய்தபின் இவரது ஆர்வம் முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் திரும்பியது. இறை நாமத்தை, முருகன் புகழை உலகெங்கும் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு துதிப்பாடல் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். 1939ல் காஞ்சன்காட்டில் சுவாமி ரமாதாசரைச் சந்தித்தார். அவர் தீட்சையளித்து 'முருகதாஸ்' என்ற பட்டத்தைச் சூட்டினார். முருகனின்மீது கொண்ட பித்தால் 'பித்துக்குளி' என்பதைப் பெயருடன் இணைத்துக்கொண்டார்.

பல மொழிகள் தெரிந்த இவர், பக்திப் பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பல வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நிகழ்த்தியிருக்கும் முருகதாஸ், தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத அகாடமி விருது, மதுரகான மாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 60ம் வயதில், தன்னுடன் பக்திப் பாடல்களைப் பாடிவந்த சரோஜா என்பவரை மணந்துகொண்டார். அவரும் 2011ல் காலமானார். பாடல்மூலம் ஈட்டிய தொகை அனைத்தையும் ஏழைக்குழந்தைகள் நல்வாழ்விற்கும், ஆன்மீகப் பணிகளுக்குமே முழுக்க முழுக்கச் செலவிட்டார். பித்துக்குளி முருகதாஸ் நவம்பர் 17, 2015 செவ்வாய்க்கிழமை, முருகனுக்குகந்த கந்தசஷ்டி தினத்தன்று காலமானார்.



© TamilOnline.com