லட்சக்கணக்கான சந்தக் கவிதைகளை எழுதியவரும், சித்திரக் கவிதைகளில் வல்லவரும், ஆசுகவியுமான தமிழழகன் (86) சென்னையில் காலமானார். தூத்துக்குடியில் ஏப்ரல் 21, 1929 அன்று வேலு செட்டியார் - வள்ளியம்மை தம்பதியினருக்குப் பிறந்த இவர், பள்ளியில் பயிலும்போதே செய்யுள்கள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். புலவர் தேர்வுக்காகப் பயின்ற இலக்கண, இலக்கியங்கள் தமிழ்த்திறனை வளர்த்தன. பாரதிதாசனின் குயில் மற்றும் கலைமகள் இதழ்களில் இவரது கவிதைகள் வெளியானபோது இவருக்கு வயது 17. தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் நிலையக் கலைஞராகப் பணியாற்றிய இவர், திரைப்படப் பாடல்களும் எழுதியிருக்கிறார். சில படங்களில் துணை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது, ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம் போன்றவற்றிலும் ஆர்வம் மிக்கவர். இவருடைய "தமிழழகன் கவிதைகள்" என்னும் நூலுக்கு டாக்டர் மு. வரதசாரன் முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். இவர் குழந்தைகளுக்காகப் பல கதை, கவிதைகளை எழுதியுள்ளார். இவரது 'ஒளியைத் தேடி' என்னும் கவிதை நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பி.லிட்., இளங்கலை வகுப்புகளுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது. இவரது கவிதைகள் ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதிதாசன் விருது, கவிமாமணி விருது, சந்தக் கவிமாமணி விருது, தமிழ்ச்சுடர், தமிழ்க்காவலர், கவிஞானி உட்படப் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். தாம் வசித்த சென்னை திருவொற்றியூரில் 'பாரதி பாசறை'யை நிறுவி அதன் தலைவராக 31 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அக்டோபர் 2, 2015 அன்று காலமானார். இவருக்கு மனைவியும், 5 மகன்களும் உள்ளனர்.
|