எர்தாம்டனின் சுடர்: இதென்ன ரத்தம்!
புத்தகம் – 1; அத்தியாயம் – 1

அரைமனதோடு அருண் அம்மாவுடன் கிளம்பினான். சற்றுநேரம் கை கால்களை நீட்டி மடக்கிய பின்னர் கீதா கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அவர் கல்லூரி நாட்களில் ஒரு சிறந்த ஓட்டக்காரர். ஒலிம்பிக் பந்தயம்

போகுமளவு தேர்ச்சி பெற்றவர். ஆனால், படிப்பே சிறந்தது என்று கவனம் செலுத்தியதில் ஒலிம்பிக் கனவை விட்டுவிட்டார்.

"அருண் கண்ணா, கொஞ்சம் சுறுசுறுப்பா வா, ஒரு ஓட்டம் ஓடலாம்." அருணின் மனதில் பக்கரூவின் நினைப்பே இருந்தது. அம்மா சொல்லியதை காதில் வாங்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

"அருண், வா," என்று சொல்லிக்கொண்டு கீதா ஓட ஆரம்பித்தார்.

அருண் அம்மாவைப் பின்தொடர்ந்தான். அவர்கள் வீட்டிலிருந்து சற்றுதூரத்தில் 'ரன்னிங் டிரெய்ல்'. அதை நெருங்கியவுடன் கீதா மிகவேகமாக ஓட ஆரம்பித்தார்.

சாதாரணமாக அம்மாவும் மகனும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவார்கள். அவர்கள் இருவரும் அப்பா ரமேஷைச் சீண்டிவிட்டு அவர் முக்கிமுனகி ஓடும்போது, சீண்டுவார்கள். சமயத்தில், கூட்டம் கூட்டமாகப் போகும்

வண்டுகளைப் பார்த்து பக்கரூ குரைக்கும். அந்த வண்டுகள் பக்கரூவை நோக்கி வந்தால் அவன் பயந்துபோய் அருணின் பின்னால் ஒளிந்துகொள்வான். ஆனால், அன்று அப்படி ஏதும் நடக்கவில்லை.

அந்த ஓடுபாதை எர்த்தாம்டனின் மிகப்பெரிய உணவுத் தொழிற்சாலையான ஹோர்ஷியானா நிறுவனத்தின் தோட்டங்களின் பக்கமாக சென்றது. அந்த ஊரின் நலனுக்காக மிகவும் செலவு செய்து அந்த டிரெய்லை

ஹோர்ஷியானா ஏற்படுத்தி இருந்தது. ஒரு பக்கம் தோட்டங்கள். நடுவிலே வேலி. அந்த அற்புதமான தோட்டத்தில் சற்றே கூர்ந்து பார்த்தால் ஹோர்ஷியானாவின் விசித்திரமான செயல்கள் தெரியும். ஒவ்வொரு

மரமும், ஒவ்வொரு செடியும், பார் கோடுகளால் (BarCodes) குறியிடப்பட்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் கேமராக்கள். ஒவ்வொரு அசைவையும் ஹோர்ஷியானா கண்காணித்தது. எர்தாம்டனின் நகர மக்கள்

அனைவரும் அதில் வேலை செய்ததால், அவர்கள் எல்லோருக்கும் அதன்மீது சற்றே ஒரு பயமும் இருந்தது.

டிரெய்ல் எங்கும் ஹோர்ஷியானாவின் லோகோ. அங்குள்ள பெஞ்சில், நிழற்கூடத்தில், எல்லா இடத்திலும் இருந்த லோகோ கம்பெனியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியது.

அருண் மிகவும் பின்னால் வருவதைப் பார்த்த கீதா, அவசரமாக செல்ஃபோனை எடுத்து வீட்டிற்கு டயல் செய்தார். "ஹலோ, நான் கீதா பேசறேன்."

"கீதாவா, என்ன விஷயம்?" என்று ரமேஷிடம் இருந்து பதில் வந்தது.

"பக்கரூ…"

"ஓ அவனா? இன்னும் எழுந்துக்கலையே."

"அப்படியா?"

"ஆமாம். நான், அவன் எழுந்ததும் உடனே டெக்ஸ்ட் செய்யறேன். சரியா?"

அதற்குள் அங்கு வந்த அருண், அம்மா செல்ஃபோனோடு நிற்பதைப் பார்த்தவுடன் "அம்மா, பக்கரூ எழுந்துட்டானா?" என்று கேட்டான். அவன் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு.

கீதா பதில் பேசாமல் மௌனமாக நின்றார்.

"அம்மா, ஏன் அம்மா ஒண்ணும் பேச மாட்டீங்கறீங்க?"

அருணின் வருத்தத்தைப் பார்த்து கீதாவின் கண்களில் கண்ணீர். "ஒண்ணும் இல்லை கண்ணா."

அடுத்த சில நிமிடம் மிக வேகமாகச் சென்றது. இருவரும் வீட்டை அடைந்தார்கள். அருண் காலிங் பெல்லை விடாமல் அழுத்தினான். சற்றே எரிச்சலோடு அப்பா கதவைத் திறந்தபோது, அவரைத் தள்ளிக்கொண்டு

தடதட என்று உள்ளே ஓடினான்.

பக்கரூவின் இடத்திற்கு சென்று அவனைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தான் அருண். "பக்கரூ, நான் அருண் வந்திருக்கேன் பாரு."

பக்கரூவிடமிருந்து பதில் வரவில்லை. அருண், தடால் என்று பக்கரூவைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். காலில் ஏதோ பிசுபிசு என ஒட்டுவதை உணர்ந்து பக்கரூவைச் சற்றே தூக்கித் தன் காலைப் பார்த்தான்.

ரத்தம்!

அருண் தூக்கியதுதான் தாமதம், கீதாவும் கவனித்துவிட்டார். பக்கரூவின் வயிற்றின் அடியில் இருந்து ரத்தம்!

"அப்பா ரமேஷ்… வண்டிய கிளப்புங்க. நாம Vet-கிட்ட போகணும்," என்று கத்தினார் கீதா.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com