கர்ணனுடைய ஆரம்பகாலம் என்று பார்த்தால், ஆதிபர்வத்தில் துரோணரிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் கர்ணன் இருப்பதைப் பார்க்கிறோம். இங்கே அதிக விவரங்கள் தென்படவில்லை. இந்தச் சமயத்தில்தான் துரோணர் அஸ்வத்தாமனுக்கே கற்றுக்கொடுக்காத பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தை 'பிரயோக ஸம்ஹாரங்களோடு' (ஏந்த, செலுத்த, திரும்பப்பெற) கற்றுக்கொள்கிறான். இது பலவகையான பரீட்சைகளுக்குப் பிறகே அர்ச்சுனனுக்குக் கற்பிக்கப்படுகிறது. (பாண்டவர் வனவாச சமயத்தில் அஸ்வத்தாமன் துரோணரை நிர்பந்தித்து இந்த வித்தையை அரைகுறையாகக் கற்றுக்கொண்ட கதையை, போர்முடிந்த பதினெட்டாம் நாளிரவில் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொல்கிறான். இதைத் தனியே பார்ப்போம்.) இந்தச் சந்தர்ப்பத்துக்கும் முன்னதாகக் கர்ணன் தென்படுவதில்லை. பிறகு அரங்கேற்ற நிகழ்வில் பிரவேசிக்கிறான். இடையில் எங்கே போயிருந்தான், என்ன ஆனான் என்ற விவரங்கள் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகே துரோணர் குருதட்சிணை கேட்க, அவருடைய பழைய நண்பனும் பிறகு அவமதித்தவனுமான பாஞ்சாலனுடன் போர்தொடுக்கச் செல்லும் கௌரவர்களோடு கர்ணனும் இருக்கிறான். அவர்களால் வெல்ல முடியாத பாஞ்சாலனை, பாண்டவர்கள் வென்றார்கள். அது வேறு கதை.
இடைப்பட்ட காலத்தில் கர்ணனுக்கு என்ன ஆனது என்ற விவரம் கடைசிவரை சொல்லப்படவே இல்லை. இங்கே கடைசிவரை என்று நான் குறிப்பிடுவது. கர்ணனுடைய வதத்துக்குச் சற்று முன்னர்வரை. தனக்குத் தேரோட்டும் சல்யனிடம் சாபம் பெற்ற கதை முதலானவற்றைக் கர்ணன் சொல்கிறான். போரில் கௌவரவர் பக்கத்துக்கு முதல் 10 நாளுக்குத் தலைமையேற்றவர் பீஷ்மர்; 11 முதல் 15ம் நாள் முடிவுவரை துரோணர்; 16ம் நாளும், 17ம் நாள் மதியம் வரையிலும் கர்ணன்; அரைநாளுக்கு யாரும் தலைமையில்லை; 18ம் நாள் பகலில் சல்யன்; இரவில் அஸ்வத்தாமன். எனவே, தான் சாபம் பெற்ற கதைகளை சல்யனிடம் கர்ணன் சொன்னது 17ம் நாள் போர் தொடங்கிய நேரத்தில். அப்போதுதான் பரசுராமரிடம் தான் பெற்ற பயிற்சி முதலானவற்றைத் தெரிவிக்கிறான். அவர் கர்ணனுடைய மடியில் தலைவைத்துப் படுத்திருக்கையில் கர்ணனுடைய தொடையை ஒரு புழு குடைந்ததையும், அதனால் ஏற்பட்ட குருதிப்பெருக்கு முதலான சம்பவங்களையும், குரு தன்னை க்ஷத்திரியன் என்று கண்டுகொண்டு சபித்ததையும் சொல்கிறான். "சல்ய! பல்குனனுக்கே நன்மையை விரும்புகின்ற தேவராஜன் விகாரரூபமுள்ள ஒரு புழுவினுடைய சரீரத்தில் பிரவேசித்து என்னுடைய தொடையை அடைந்து குடைந்தபடியால் அதிலும் எனக்கு இடையூறைச் செய்தான். அந்தத் தொடையில் தலையைவைத்து ஆசாரியர் தூங்கிக் கொண்டிருக்கையில் புழுவானது என் தொடையை அடைந்து குடைந்தது. தொடை பிளக்கப்பட்டபடியால் என் சரீரத்தினின்று ரத்தவெள்ளமானது தாரையாகப் பெருகியது..." என்று நாமறிந்த விவரங்களைச் சொல்கிறான். (தொகுதி 6, கர்ண பர்வம், அத். 36; பக். 152).
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, 'பரசுராமர் மடியில் படுத்திருக்கும்போது இந்திரன் ஒரு புழு வடிவத்தை எடுத்துக்கொண்டு வந்து, கர்ணனுடைய தொடையைக் குடைந்தான்' என்பது. இது கர்ணனுடைய வாய்மொழியாகச் சொல்லப்படுவது. இங்கே கர்ணன் பரசுராமரிடமும், ஒரு அந்தணருடைய பசுவைத் தற்செயலாகக் கொன்றுவிட்டு அவரிடமும் (இருவரிடமும்) சாபத்தைப் பெற்ற விவரம் இருக்கிறதே தவிர, அந்தணர்களுக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சியளிப்பது, க்ஷத்ரியர்களுக்கும் பிறருக்கும் அளிப்பதில்லை என்ற உறுதியோடு இருந்த அவரிடம். தான் பயிற்சி பெற்றது எப்படி என்பன போன்ற விவரங்கள் ஏதும் இல்லை. பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்ரியர்களை அழித்தவர்; அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தார். க்ஷத்ரியன் என்று தெரிந்தே அவர் பயிற்சியளித்தது பீஷ்மருக்கு (தேவவிரதன் என்ற கங்கை மைந்தன்) மட்டுமே. மாறாக, தன்னைக் கொல்லப் பிறந்தவனான திருஷ்டத்யும்னனுக்கும், 'இவன் தன்னைக் கொல்லப் பிறந்திருக்கிறான்' என்று தெரிந்தே துரோணர் பயிற்சியளித்தார். இது ஒருபுறமிருக்கட்டும்.
கர்ணன் சாபம் பெற்ற விவரங்களை மட்டும்தான் சல்யனிடம் சொல்கிறான். அதிலும் தேவேந்திரன் செய்த இடைஞ்சலால்தான் தனக்கு இந்தச் சாபமே ஏற்பட்டது என்றும் ஒரு வார்த்தையைச் சொல்கிறான். கதையைப் படிப்பதை இங்கேயே நிறுத்திவிட்டால், கர்ணன் தேவேந்திரன்மேல் சொல்லும் குற்றச்சாட்டுதான் இறுதியானது என்ற அபிப்பிராயம் எற்படும். அப்படித்தான் ஏற்பட்டிருக்கிறது. கர்ணன் தோல்வியடைந்ததே சல்யன் சாரதியாக இருந்து அவனை அதைரியப்படுத்திக்கொண்டே இருந்ததால்தான் என்றொரு அபிப்பிராயம் இருக்கிறதல்லவா, அதைப்போலத்தான்.
சல்யன் கர்ணனைக் குறைத்துப் பேசினான் என்பது உண்மைதான். எப்போது? போருக்குக் கிளம்பிய உடனேயே, வழிநெடுக, 'கண்ணனையும் அர்ச்சுனனையும் எனக்குக் காட்டித் தருபவர்களுக்கு நான் இத்தனை கிராமங்களைத் தருவேன், இத்தனை பொன் தருவேன்' என்று அறிவித்தபடியே கர்ணன் போர்க்களம் புகுந்ததும், 'சரி, யாராவது சூரியனையும் சந்திரனையும் அடையாளம் காட்டும்படிக் கேட்பார்களா என்ன? கண்ணனையும் அர்ச்சுனனையும் உனக்கு யாராவது அடையாளம் காட்ட வேண்டுமா? அவர்களை நேரில் பார்க்கும்போது உன் வீரத்தைக் காட்டு' என்பதை ஒத்து சல்யன் சில சொன்னது உண்மைதான். கர்ணனுடைய கண்ணுக்கு எதிரில் துச்சாதனனை பீமன் கொன்றபோது, கர்ணன் கலங்கிப்போக, அவனை தைரியப்படுத்தியவன் சல்யன். பதினேழாவது நாள் போரில் ஒரு கட்டத்தில் பீமன் கர்ணனை வென்று, கொல்லமுனைந்த நேரத்தில் பீமனை சல்யன் தடுக்கிறான். "பீமஸேனனால் அடிக்கப்பட்டவனும் பகைவர்களை அடக்கும் திறமையுடையவனும் ஸேனாபதியுமான அந்த ஸூத புத்திரன் ரத்தத்தினால் நனைக்கப்பட்ட மேனியை உடையவனாகிப் பிரஜ்ஞையை இழந்து உயிரை விட்டவன்போல் தேர்நடுவில் உட்கார்ந்தான். இந்த ஸமயத்தில் கர்ணனைக் கொல்லக்கருதி வருகின்ற விருகோதரனைக் கண்டு, திரும்பிச் செல்லும்படி செய்வதற்காக மத்திரராஜன் இந்த வார்த்தையைக் கூறலானான்." (கர்ண பர்வம், அத். 45; பக். 200). மத்திரராஜன் என்பது சல்யனைக் குறிக்கும். "பீமா, கர்ணனுடைய வதத்துக்கு உரியவன் அர்ச்சுனன் அல்லவா? நீ கொல்லக்கூடாது" என்று பேசி, அந்த நிமிஷத்தில் கர்ணனை சல்யன் காப்பாற்றினான். இதற்கு முன்னால், அதே நாள் போரில் தர்மபுத்திரன் கர்ணனை வென்று மூர்ச்சையடையச் செய்து, கொல்லாமல் விட்டதும் 44ம் அத்தியாயம் 189ம் பக்கத்தில் சொல்லப்படுகிறது. ஜெயத்ரத வத சமயத்தில் கர்ணன் பீமனுடன் நடந்த போரில் பலமுறை தோற்கிறான்.
இவையெல்லாம் இப்படியிருக்கவும், கர்ணன் பீமனைத் தூக்கி தலைக்குமேல் சுழற்றித் தரையில் எறிந்து, "பீமா இப்போது தெரிந்ததா சமையற்கட்டு ரகசியம்" என்று பரிகசிப்பதுபோல ஒரு காட்சி! பீமனிடத்தில் ஆயுதம் தீர்ந்துபோய் அவனால் எதிர்க்க முடியாத ஒரு தருணத்தில் கர்ணன் அவனை நெருங்கி வில்நுனியால் தொட்டு அவமதித்ததும், ஜெயத்ரத வதத்தில் ஈடுபட்டிருந்த அர்ச்சுனன், "அவன் உன்னை எத்தனைமுறை தேரை அழித்துத் தரையில் நிறுத்தினான்? இப்படி அவமானப்படுத்தியிருப்பானா? ஜெயத்ரதவதம் முடியட்டும் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று தூரத்திலிருந்தவாறே எச்சரிக்கிறான். இப்படி விவரங்கள் மிகப்பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளன. திரைப்படத்தின் கைங்கர்யம் ஒருபக்கம்; வில்லி ஆங்காங்கே செய்திருக்கும் மாறுதல்கள் மறுபுறம்.
கர்ணனிடத்தில் சல்யன் எவ்வளவு விசுவாசமாக இருந்திருக்கிறான் என்று காட்டும் அற்புதமான இடமொன்றுண்டு. போர்முனையில் கண்ணனும் அர்ச்சுனனும் இருக்கும் தேரைக் கர்ணனுடைய தேர் அணுகுகிறது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பக்கம் அர்ச்சுனன், "கண்ணா, இதோ கர்ணன் வந்துவிட்டான். ஒருவேளை இவன் என்னைக் கொன்றுவிட்டால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்க, "அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. கடல் வற்றினாலும், சூரியன் மேற்கில் உதித்தாலும் வெல்லப்போவது நீதான். அப்படியே ஒருவேளை கர்ணன் வென்றுவிட்டால் நாளைமுதல் போருக்கு நான் தலைமைதாங்கி நடத்துவேன்" என்று கண்ணன் பதில் சொல்கிறான். அந்தப் பக்கத்தில் கர்ணன் இதே கேள்வியை சல்யனிடத்தில் கேட்கிறான். "சல்ய! இப்பொழுது இந்த யுத்தத்தில் பார்த்தன் என்னை ஒருசமயம் கொல்வானாகில் யுத்தத்தில் நீ என்ன செய்வாய்? உண்மையைச் சொல்" என்று வினவினான். சல்யன், "கர்ண! ஸ்வேதவாகனன் (அர்ச்சுனன்) யுத்தத்தில் உன்னை இப்பொழுது கொல்வானாகில், மாதவன் பாண்டவன் இருவரையும் நான் ஒரு ரதத்தின் உதவியினாலேயே கொல்வேன்" என்றான்'. (கர்ண பர்வம், அத். 93; பக். 413). கண்ணனுக்குத் தான் சொன்னதைச் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சல்யனுக்குக் கிடைத்தது. 18ம் நாள் போருக்கு அவன்தான் தலைமையேற்றான். இறுதிவரை துரியோதனனுக்காகப் போர்புரிந்து, பதினெட்டாம் நாள் போரில் தர்மபுத்திரனால் கொல்லப்படுகிறான். இவனைத்தான் கர்ணனை அதைரியப்படுத்தி, அர்ச்சுனனுக்கு உதவி செய்ததாகச் சொல்கிறோம். அப்படி ஒரு வரத்தை தர்மபுத்திரன் போர் தொடங்குவதற்கு முன்னால் கேட்டது உண்மைதான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தினார்களா என்பது கேள்வி.
இப்போது அதை ஆய்வது நம் நோக்கமில்லை. இதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம். கர்ணன் கதைக்குள்ளே எப்போது பிரவேசித்தான் என்ற விவரம் நமக்குத் தேவை. இது எங்கே கிடைக்கிறதென்றால், யுத்தமெல்லாம் முடிந்து சாந்தி பர்வத்தில் நீர்க்கடன்களை இயற்றிய பின்னால் 'நான் என் சகோதரனைக் கொன்றுவிட்டேனே' என்று கர்ணனைப் பற்றி அறிந்துகொண்ட தர்மபுத்திரன் துக்கப்பட, அப்போது அங்கே வரும் நாரதர் பழைய கதைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார். அங்கேதான் கர்ணன் எப்போது துரியோதனனை வந்தடைந்தான், ஏன் துரோணரிடமிருந்து அஸ்திரப் பயிற்சி பெறுவதை நிறுத்திவிட்டுப் பரசுராமரிடம் பயின்றான் என்பன போன்ற பல செய்திகள் வருகின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. நாரதர் சொல்லும் 'புழு குடைந்த' கதையில் இந்திரனுடைய பெயரே இல்லை. தம்சனென்ற பெயருடைய ஒரு அசுரன் அளர்க்கம் என்ற பெயருள்ள புழுவடிவத்தில் வந்து கர்ணனுடைய தொடையைக் குடைந்ததாக இருக்கிறது! அடுத்து அந்த விவரத்தைப் பார்க்கலாம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |