திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ, தூரத்தில் உள்ளது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில். பல்வேறு சிறப்புக்களை உடைய இத்தலம், வெள்ளாற்றங்கரையில் இயற்கை சூழ்ந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. திருமுறைகளிலும், இலக்கியங்களிலும் அநாதிமூர்த்தித் தலம், ஆதிகைலாயம், சதுர்வேதபுரம், ஞானபுரம், தட்சிணகைலாயபுரம், தென்கயிலை தேசுவனம், குருந்தவனம், திரிமூர்த்திபுரம், பூலோககைலாயம், யோகபீடபுரம், யோகவனம் எனப் பல பெயர்களால் இத்தலம் குறிக்கப்படுகிறது. மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் இறைவன் குருநாதராக எழுந்தருளி ஞானமார்க்கத்தை இங்குதான் உபதேசித்தார். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் கோவில்களிலும் வீடுகளிலும் ஒலிக்கும் திருப்பெருந்துறைச் சிவபெருமான் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவைப் பாடல்கள் மாணிக்கவாசகர் இயற்றியவை. மாணிக்கவாசகர், தாம் பெற்ற சிவானுபவத்தைத் தேனினும் இனிய செந்தமிழ்ப்பாடல்களாகத் திருவாசகத்தில் மலர்ந்தருளியது இத்தலத்தில்தான்.

இங்கு இறைவன் அநாதிமூர்த்தியாக எழுந்தருளி ஐந்தொழில் நடத்தலால் இது அநாதிமூர்த்தித் தலமாகும். ஆதியும் அந்தமும் இல்லை. கயிலையைவிட மேலானது. இத்தலத்தை அடைந்தவருக்கு மீண்டும் பிறப்பில்லை. மூலவர் ஆத்மநாதர். அம்பிகை யோகாம்பிகை. சிவபெருமான் சோமாஸ்கந்தர்போல் திருவுருவமாகவோ, லிங்க மூர்த்தியாகவோ அருவுருவமாகவோ இல்லாமல் அருவத்திரு அமைப்பில் பீடத்தில் அருட்காட்சி வழங்குகிறார். அம்பிகையும் அருவுருவாக விளங்குகிறாள். உருவத்திருமேனி இல்லை. பீடத்தின்மேல் அம்பிகை சிவயோகம் புரிகிறாள்.

ஆத்மநாதரால் ஆதியில் உண்டானவை 9 தீர்த்தங்கள். இவை சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்பவை ஆகும். இறைவன் அருளால் இங்கு தோண்டிய இடத்திலெல்லாம் நீர் பெருகியது. அவையே அறுபத்து நான்கு கோடி தீர்த்தங்களாகும். தலவிருட்சம் குருந்த மரம்.

மதுரையை அடுத்த திருவாதவூரில் அவதரித்தவர் திருவாதவூரர். இவர், பாண்டியனின் மந்திரியாகி, சோழநாட்டுக் கடற்கரைக்கு குதிரை வாங்கச் சென்றார். ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறையில், குருந்த மரத்தடியில் சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றுக் கையிலிருந்த பொருள் அனைத்தையும் ஆலயத் திருப்பணிக்குச் செலவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் தண்டிக்க, சிவபெருமானே பிரம்படி பட்டு, பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் புரிந்து வாதவூரரை ஆட்கொண்டார். இறைவனாலேயே அவருக்கு 'மாணிக்கவாசகர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இவர் இறைவனுடன் இரண்டறக் கலந்து சாயுஜ்ய முக்தி பெற்றவர். சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர். இவருக்குத்தான் கோவிலில் உற்சவம் நடைபெறுகிறது.

இவ்வாலயம் தெற்குநோக்கி அமைந்துள்ளது. ஏழுநிலை ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. பெரிய மாடவிளாகத் தெருக்கள், நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோயிலுக்குள் மூன்று பிரகாரம் உண்டு. கோயிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டேசர் ஆலயம் ஏதுமில்லை. கோபுர வாயிலுக்கு வெளியே அதனை ஒட்டினாற்போல் பெரிய மண்படம் உள்ளது. இதன் முகப்புத் தூண்களில் நரசிம்மர், காளி, ஊர்த்துவதாண்டவர், பிட்சாடனர், வேலேந்திய முருகன், அகோர வீரபத்திரர், துவாரபாலகர் சிலைகள், குதிரை வீரர்களின் சிற்பங்கள் எனப் பலவும் எழிலுற அமைந்துள்ளன. மேற்கேயுள்ள மண்டபத்தில் மாணிக்கவாசகரின் மூலக்கோவில் உள்ளது. இது மிகப் பழமையானது. மாணிக்கவாசகர் கிழக்குமுகமாக எழுந்தருளி உள்ளார். கோவில் கருவறை அர்த்தமண்டபம், பிரகாரம், விமானம் ஆகிய அமைப்புகளுடன் உள்ளது. ராஜகோபுரத்தின் வடபுறம் சுப்பிரமணியர், மூன்றாம் பிராகாரத்தில் வெயிலுகந்த விநாயகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வடகோடியில் தியாகராஜ மண்டபம், ஊஞ்சல் மண்டபம் இரண்டும் ஒன்றுபோல் இணைக்கப்பட்டு மேல்தளத்தால் மூடப்பட்டிருக்கிறது.

விதானத்தின் நாற்புறமும் உள்ள கொடுங்கைகள் அதியற்புதமான வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லில் தேக்குமரத்துக்கு இணையாக இழைத்து, வளைவுகளை உருவாக்கி, கூரைபோல் அமைத்திருக்கும் திறம் வியக்கத்தக்கது. எய்தற்கரிய சிறப்பாக இதனைக் கருதும் ஸ்தபதிகள், "ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்" என புதிய பணியைத் துவங்குவதற்கு முன் ஒப்பந்தம் போடுவராம். கொடுங்கை என்பது, சாய்வான கல்கூரையின் வளைந்த மேல்பகுதி. இத்தலத்தின் கொடுங்கை உலகப் பிரசித்தமானது. கோயிலின் கலையழகையும் அபூர்வ சிற்பங்களையும் வெளிநாட்டவர்கள் வந்து வியந்து பார்க்கின்றனர். அசுவநாதர், பதஞ்சலி, வியாக்ரபாதர், குறவன்-குறத்தி சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. தென்மேற்கு மூலையில் சொக்கவிநாயகர் எழுந்தருளியுள்ளார்.

முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர் கோவில் கொண்டுள்ளார். கர்ப்பக்கிரகத்தில் ஆவுடையார் என்று அழைக்கப்படும் பீடம் மட்டுமே உள்ளது. அம்பாள் யோகபீடத்தில் யோகாம்பிகையாகக் காட்சிதருகிறாள். பாதங்கள் மட்டுமே உள்ளன. கோயிலின் தெற்கிலுள்ள பலகணி வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இறைவனின் கருவறைக்கு நேர்பின்னே நாலுகால் மண்டபத்தில் குருந்தமூல சுவாமி உள்ளார். இவ்வுருவில் ஆத்மநாதர் ஆசானாகவும் எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும் சிறிய சிற்பங்கள் உள்ளன. விழாக்காலத்தில் மாணிக்கவாசகரை எழுந்தருளுவித்து, உபதேசக்காட்சி நடைபெறுகிறது. முதல் பிரகாரத்தில் திருவாசகக் கோவில் உள்ளது. கிழக்கே நடராஜர் சிலாரூபமாக தெற்குநோக்கி எழுந்தருளி உள்ளார்.

கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பரிபாலனத்தின் கீழ் சிறப்பாக இயங்கிவருகிறது. ஆனி, மார்கழியில் விழாக்கள் யாவும் மாணிக்கவாசகருக்கே நடைபெறுகின்றன. உருவிலியான ஆத்மநாதர், அன்னை யோகாம்பிகை, சிவயோகியாக இருந்து விழாக்கள் கொண்டருளும் மாணிக்கவாசகர் என இவை யாவும் பிற கோவில்களில் காணமுடியாத சிறப்பம்சங்களாகும்.

சீதா துரைராஜ்,
சான்ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com