மனத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....
அன்புள்ள சிநேகிதியே

ஒவ்வொருமுறையும் இந்தியா செல்லும்போது யாரேனும் வசதியில்லாத குடும்பத்தினருக்குப் படிப்பு அல்லது வைத்தியச் செலவுக்கென்று கணிசமாக ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு வருவேன். நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து முன்னேறியவன். என் நல்லநிலைமையைக் கண்டு அனுபவிக்க என் அப்பா, அம்மா இரண்டுபேருமே இப்போது இல்லை. அந்த வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. அதைச் சிறிது குறைக்க என்னால் முடிந்த அளவுக்கு உறவினர்களுக்கு உதவுவதைக் கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தூரத்து உறவினர். பையன் கல்லூரிப் படிப்புக்கு நான் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டேன். இது அவனுக்கு மூன்றாவது வருடம். எப்போது ஃபோன் செய்தாலும் என் உறவினர் எனக்குப் புகழ்மாலை போட்டுக்கொண்டே இருப்பார். எனக்கு அலுத்துப்போய் கொஞ்சம் போரடிக்கும். இருந்தாலும் அந்த அளவு நன்றிக்கடனை உணர்ந்திருக்கிறார்கள், நல்ல மனிதர்கள் என்று நானே என்னைச் சமாதானம் செய்துகொள்வேன். அந்தப் பையனைக் கல்லூரியில் சேர்க்கும் சமயத்தில் நான் இந்தியாவில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிமுடித்து கிரகப்பிரவேசம் செய்யப் போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குடியிருக்க ஒருவரை ஏற்பாடு செய்தேன். என்னுடைய அந்த உறவினர் என் கணக்கு வழக்கையெல்லாம் பார்த்து வரி கட்டி, வாடகை வசூல் செய்வதாக வாக்குக்கொடுத்தார். அவர் பையனின் கல்லூரிக்கு நான் தான் கேபிடேஷன் fee கூடச் செலுத்தினேன். சரியென்று சொல்லி என் பாங்க் பாஸ்புக் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நிம்மதியாக வந்து சேர்ந்தேன். எதுவும் பிரச்சனையில்லை. மாதாமாதம் வாடகை கணக்கில் கிரெடிட் ஆகிக் கொண்டிருந்தது. ஆன் லைனில் செக் பண்ணிக் கொண்டிருந்தேன்.

ஆனால் இரண்டு வருடம் குடியிருக்க விரும்பியவர், ஒரு வருடம் முடிந்ததும் காலிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 'அதற்கென்ன, நான் வேறு யாரையாவது பார்க்கிறேன்' என்று என்னுடைய உறவினர் வாக்குக்கொடுத்தார். நல்லகாலம் அந்தத் தலைவலியும் விட்டது என்று நான் நினைத்தேன். ஆனால் ஒரு வருடமாக யாரும் வரவில்லை. 'குறைந்த வாடகைக்குக் கேட்கிறார்கள்', 'குடும்பம் சரியில்லை', 'அட்வான்ஸ் குறைத்துக் கேட்கிறார்கள்' என்று அவர் ஏதோ சாக்குப்போக்குச் சொன்னார். நான் அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பணம் வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை; நல்லவர் ஒருவர் வரும்வரை காத்திருப்பதில் தப்பில்லை என்று நினைத்தேன். போன வருடம் இந்தியா போக நினைத்தேன். முடியவில்லை. இந்த முறை சிங்கப்பூர் வரை அலுவலக வேலையாகப் போகவேண்டி வந்தது. சரி, வீட்டு விஷயத்தையும் சரி செய்துவிட்டுப் போகலாம் என்று இந்தியாவுக்கு திடீர் ட்ரிப் அடித்தேன். அந்த உறவினருக்கும் செய்தியைத் தெரிவித்தேன். அப்போதுதான் அந்தச் சந்தோஷச் செய்தியைத் தெரிவித்தார் அந்த உறவினர். "போனவாரம்தான் யாரோ குடிவந்திருக்கிறார்கள். அட்வான்ஸ் எல்லாம் கொஞ்சம்தான்" என்று ஏதோ சொன்னார். எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. சரி, நேரில் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவரையும் கூட்டிக்கொண்டுதான் அந்த வீட்டுக்குப் போனேன். அங்கே குடியிருந்தவரிடம் கேள்வி கேட்டால் கொஞ்சம் விழித்தார்கள். ஏறுமாறாகப் பதில் சொன்னார்கள். ஒரு வாரத்திற்கு முன்னால் புதுக்குடித்தனம் வந்ததாகத் தெரியவில்லை. யாரையும் embarrass செய்ய வேண்டாம் என்று கிளம்பிவந்தேன்.

மறுநாள் தனியாகச் சென்று விசாரித்தபோதுதான் விஷயம் முழுவதும் தெரிந்தது. அட்வான்ஸ் கேஷாகக் கொடுத்திருக்கிறார்கள். ஒன்பது மாதமாக இருக்கிறார்கள். வாடகையும் கேஷ்தான். எனக்கு அப்போது B.P. எகிறியது. அவர் நல்லமாதிரி மனிதராகத்தான் தெரிந்தார். அவர்களை உடனே காலி செய்யச் சொல்ல எனக்கு மனமில்லை. (எல்லாரையும் இப்படி நினைத்துத்தான் ஏமாந்து போகிறேன்!) வாடகையைக் குறைத்துக்கொடுப்பதால் கேஷாகக் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு இரவே என்னுடைய ஃப்ளைட். எனக்கு அந்த உறவினரை ஃபோன் செய்தோ நேரில் பார்த்தோ விளாசக்கூட நேரமில்லை. பிடிக்கவும் பிடிக்கவில்லை. என் மனக்கொந்தளிப்பு அடங்கக் கொஞ்சம் எனக்கே நான் அவகாசம் கேட்டுக்கொண்டேன். பேசாமல் கிளம்பி வந்துவிட்டேன். மனது குழம்பிப்போய்க் கிடக்கிறது. இந்த ஒரு வாரத்தில் அந்த மனிதர் ஐந்தாறுமுறை போன் செய்திருப்பார். நான் திருப்பிக் கூப்பிடவில்லை. ஆனால், அந்தக் கல்லூரிப் பையன் வாராவாரம் தன் காலேஜ் அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் பதில் போடவில்லை. ஒரு வெறுப்பு வந்துவிட்டது. He is a decent boy. என்னைப்போல எதிர்காலத்தை நம்பியிருக்கும் பையன். அவனிடம் அவன் அப்பாவைப்பற்றி ஏறுமாறாகச் சொல்லவும் பிடிக்கவில்லை. ஆனால், நான் ஒரு ஏமாளி என்று என்னைப்பற்றி நெஞ்சில் குமைந்து போய்க் கொண்டிருக்கிறேன். என்னுடைய சமீபத்திய இந்தியா விசிட்டின் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதிரே

மனிதாபிமானம் உள்ள அனைவருக்கும் ஏற்படும் அனுபவம் இது. ஆகவே நீங்கள் ஏமாளி என்று நினைக்கவேண்டாம். உங்கள் குணத்தை நீங்கள் மாற்றமுடியாது. உங்கள் உதவி தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இந்த மனிதர் இப்போது விழித்துக்கொண்டு விடுவார். தற்காப்புக்காக ஏதேனும் கதை சொல்லுவார். ஆனால், இனிமேல் எச்சரிக்கையாக இருப்பார். அவர் செய்தது அநாகரிகமான செயல். நம்பிக்கைத் துரோகம். உங்கள் மதிப்பை இழந்துவிட்டார். இனிமேல் அந்த மதிப்பைப் பெறுவதும் கஷ்டம். அவரால் உங்களுக்கு எவ்வளவு பணவிரயம் ஏற்பட்டது என்பது தெரியாது. அந்த உறவினரால் திருப்பிக் கொடுக்க இயலுமா என்றும் தெரியவில்லை. இனிமேல் இந்த வீட்டு விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன். Trust but verify என்று சொல்வார்கள். அப்படியும் நாம் நடந்து கொள்ளப் பார்ப்போம். அதுவும் ஒரு காலக்கட்டத்தில் வேலை செய்யாது. ஆனால், இந்த அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு உள்ளுணர்வு அதிகமாகும். எந்த உறவுக்கும் நம்பிக்கையே ஆணிவேர். இந்த அனுபவத்தினால் நாம் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் மனிதத்தன்மையை இழந்து விடுகிறோம். எல்லாரையும் நல்லவராகப் பார்க்கும் உங்கள் குணம் போற்றத்தக்கது.

என் தந்தை ஒரு மனிதாபிமானி. அவர் பலமுறை பணவிஷயத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது "நான்தான் தானம் செய்துவிட்டேன்" என்று நினைத்துக்கொள்கிறேன் என்பார். எனக்கு அந்த வயதில் என் அப்பா இப்படி ஏமாந்து போகிறாரே, அப்பாவியாக இருக்கிறாரே என்று அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வரும். வருத்தமாக இருக்கும். ஆனால், அவருக்குத் தொழில், பெரியகுடும்பம் என்று இருந்த stress லெவலில் வாழ்க்கையை நடத்திச்செல்ல, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானதாக இருந்தது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். அவரைப்போன்ற ஒருவர்தான் நீங்கள். கல்லுரியில் படிக்கும் பையனுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது!

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com