இரண்டாமிடம்: பாதாம் கீன்வா புலாவ்
தேவையான பொருட்கள்:
கீன்வா – 2 கிண்ணம்,
லீக்ஸ்,
எடமாமெ (Edamame) பருப்பு,
டோஃபு (Tofu),
குடைமிளகாய்,
பூண்டு,
இஞ்சி – 1 துண்டு,
ஆலிவ் எண்ணெய்,
கர்ப்பூரப்புல் (lemon grass),
நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பு,
பச்சைமிளகாய் – 2,
பட்டை (cinnamon) – 1 துண்டு,
கிராம்பு – 4,
தேவைக்கேற்ப உப்பு.

செய்முறை: பாதாம்பருப்பை முந்தைய இரவே நீரில் ஊறவைக்கவும். ஊறிய பருப்போடு இரண்டு கிண்ணம் நீர்சேர்த்து அரைக்கவும். அரைத்தபின் பாதாம்பாலை வடிகட்டி எடுக்கவும். பச்சைமிளகாயை மசியலாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது ஆலிவ் எண்ணெய், கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, மசித்த பச்சைமிளகாய் சிறிதளவு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கீன்வா மற்றும் உப்புச் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். நல்ல மணம் வந்ததும் பாதாம்பால், கர்ப்பூரப்புல் இரண்டும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். நல்ல கொதிவந்த பிறகு குறைவான சூட்டில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

லீக்ஸ், குடைமிளகாய், டோஃபு ஆகியவற்றைத் தனியாக வதக்கிக்கொள்ளவும். அதைக் கொதிவந்த கீன்வாவில் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். கலவையில் கொத்துமல்லித்தழை அல்லது புதினாவை மேலாகத் தூவவும். பாதாம் கீன்வா புலாவ் ரெடி!

ராஷ்மி, சந்தன்

© TamilOnline.com