யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
அக்டேபார் 15ந்தேதி 2006. ஞாயிறு மாலை 5 1/2 மணியளவில் சான்டாக்ளாரா Santa Clara Mission City Center for Performing Arts center-ல் யுவபாரதி ஸ்தாபனத்தின் ஆதரவில் நடந்த நந்திதா ஸ்ரீராம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கம்பீர நாட்டையில் மல்லாரி முழங்க, பின் ஓம் சாந்தி சாந்தி என வணங்கியதும் மகழ்ச்சிகரமான ஓர் ஆரம்பம்.

தொடர்ந்து 'அலருலு குரியக' என்னும் அன்னமாச்சார்யா கீர்த்தனை சங்கராபரண ராக பாடலில் அலர்மேல் மங்கையின் வர்ணனைகளை அலட்டிக்காமல் அனுபவித்து அனயாசமாக ஆடிய பாவம், அபிநயம் அருமை.

அடுத்து ஜயதேவரின் 11வது அஷ்டபதியில் கண்ணனின் தூதுவன் ராதையிடம், கண்ணன் ராதையை பிரிந்து படும் வேதனைகளை விவரித்து காட்டிய விதம் கனகச்சிதம்.

பின் தயானந்த சரஸ்வதி அவர்களின் ''போசம்போ'' எனும் ரேவதி ராக பாடலில் ''நிர்குண பரப்ரம்ம ஸ்வரூபா'' எனும் இடத்தில் உருக்கமான பாவம் காண்பித்து அவையோரை உருக வைத்தது உண்மை. சிவனின் சிறப்புகளை சித்தரித்தவிதம் சிறப்புடன் இருந்தது.

அடுத்ததாக 'மையாமோரி' எனும் ஆர்தாஸ் பஜனில் யசோதையிடம் உறியில் ஏறி வெண்ணை உண்டது நான் அல்ல என வெகுளித்தனமாக கெஞ்சும் கண்ணனை தத்ரூபமாக காட்டிய விதம் நிகழ்ச்சியின் உச்சம் எனலாம்.

தில்லனாவில் சிறந்த தாளகதி, அபிநயம், முகபாவம் ஆகியவற்றை திறமையும் விறுவிறுப்பாக ஆடி பின் காந்தி பிறந்த மாதத்தில் மகாத்மாவுக்கு பிடித்த 'வைஷ்ணவ ஜனதோ' பாடலுடன் மங்களம் பாடி முடித்தது பொருத்தமாக அமைந்தது. பாடல்களின் அர்த்தம் புரிந்து மூழ்கி சிறந்த முகபாவம் காண்பித்து உழைத்து ஆடியதில் குருவின் மாணவியின் திறமை, உழைக்கும் ஆர்வம் பளிச்சிடுகிறது. பாராட்டுக்கள்.

நிகழ்ச்சியின் முதலில் நடந்த 1 மணி நேர குச்சிபுடி நடன நிகழ்ச்சியை சோனியா ஸாங்கா அருமையாக ஆடி ரசிகர்களை அசத்தினர். பின் இன்றைய பிரதம விருந்தினரான Sri Rama Lalitha Kala Mandir School of Fine Arts பள்ளியின் தலைவர் திருமதி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் ஆற்றிய உரையில் வளைகுடா பகுதிவாழ் இளைய சமுதாயத்தில் மாணவ மாணவிகள் எவ்விதம் நமது புராதன கலைகளை கற்று சிறந்த கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள் எனவும் யுவபாரதி ஸ்தாபனம் இளைஞர்களை ஆதரித்து கலைநிகழ்ச்சி களை அளிக்கின்றனர்.

ஆகவே வளைகுடா வாழ்மக்கள் ஸ்தாபனத்தை ஆதரிக்கும் வகையில் ஸ்பான்சர் செய்ய முன் வர வேண்டும் என கேட்டு கொண்டதுடன் நிகழ்ச்சி இனிது முடிந்தது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com