என். சொக்கன்
சேலம் ஆத்தூரில் பிறந்து, கோவையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சொக்கன் (நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்) தமிழ்நாட்டில் வெளிவரும் பத்திரிகைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சுயமுன்னேற்றம் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் தொடர்கட்டுரைகள் எழுதி மிகப்பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர். 'தினம் ஒரு கவிதை' என்ற பெயரில் மின்னஞ்சல் கவிதைக்குழு நடத்தியது உட்படப் பல பெருமைகளுக்கு உரியவர். இவர் எழுதி மூன்று சிறுகதைத் தொகுப்புகள், வாழ்க்கை வரலாறுகள், அரசியல், குழந்தைகளுக்கான படைப்புகள், சங்க இலக்கியத்துக்கு எளிய விளக்கம், திருவாசக விளக்கம் என்று பல துறைகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்கள் பிரசுரமாகியிருக்கின்றன. பெங்களூருவில் நடந்த கம்பராமாயண முற்றோதலில் முக்கியப் பங்கை வகித்தவர். தொடர்ந்து பாரதி பயிலரங்கம், சிலப்பதிகார முற்றோதல் எல்லாவற்றுக்கும் ஆதாரத்தானமாக இருந்து வருகிறார். இனி உங்களிடம் பேசுகிறார் சொக்கன்...

*****


தென்றல்: பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்தவர் என்றமுறையில், இன்றைக்கு எப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?
சொக்கன்: புனைகதைகள், கவிதைகளைவிட இன்றைக்குக் கட்டுரைகள், அபுனைவுகளை மொழிபெயர்க்கத் தேவை அதிகம் உள்ளது. காரணம், புனைவுகளின் வெற்றி அவை கொண்டுவரும் அனுபவத்தின் முழுமையில் இருக்கிறது, மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்கூட அதை ஓரளவுதான் நெருங்க இயலும். அபுனைவுகளில் அந்தச் சிரமம் இல்லை, விஷயம் பரிமாறப்பட்டால் போதும், கட்டமைப்பைப்பற்றிப் பெரிய கவலை இல்லாமல் வாசித்துவிடலாம்.

கேள்வி: சமீபகாலமாகக் குழந்தை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளிடையே வாசிப்பார்வம் வளர என்ன செய்யலாம்?
பதில்: பெரிதாக எதையும் செய்யவேண்டியதில்லை, அவர்களை வாசிக்கச் சொன்னாலே போதும், ஆர்வம் தானாக வரும், வருகிறது, கண்ணெதிரே பல குழந்தைகளிடம் இதைப் பார்த்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் சோகம் என்னவென்றால் பெரும்பாலான பெற்றோருக்கே வாசிப்புப் பழக்கம் இல்லை. குழந்தைகளுக்கு சினிமாவோ கிரிக்கெட்டோ இசையோ விளையாட்டோ அறிமுகப்படுத்துவோர் எங்கும் இருக்கிறார்கள், புத்தகத்தை எங்கிருந்தோ வந்து இன்னொருவர்தான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டால் சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துவிடலாம்.

கே: குழந்தை எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் அதிகம் இல்லாமல்போகக் காரணம் என்ன?
ப: எழுத்தாளர்கள், பத்திரிகைகள் இருக்கின்றன, ஆனால் எழுத்தில் புதுமை குறைந்துவிட்டது, பெரும்பாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் போலவே அப்படைப்புகள் தெரிகின்றன, சொற்களில், நடையில், கருத்துகளில்கூடத் தமிழ்வாசமே இல்லை. இதனால், குழந்தைகள் ஆங்கிலத்தையே படித்துவிடட்டும் என்று பெற்றோர் நினைத்துவிடுகிறார்களோ என்னவோ.

எனவே, குழந்தைகளை வாசிக்கச் சொல்லும் பழக்கம் இல்லாத இடத்தில் குழந்தைகளுக்கான படைப்புகள் குறைவது இயல்பே. என். ராமதுரைபோல் அறிவியலைச் சுவாரஸ்யமாகப் புரியவைக்கிற எழுத்தாளர்களைத் தமிழ்ப் பெற்றோரும் ஆசிரியர்களும் கொண்டாட வேண்டாமோ? அப்படிக் கொண்டாடாவிட்டால் முனைப்புடன் சிறுவர்களுக்காக எழுதுகிற அடுத்த தலைமுறை எப்படி வரும்?



கே: மின்னூல்கள்குறித்து அதிகம் பேசியும் நிறைய எழுதி வெளியிட்டும் வருகிறீர்கள். அதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எங்கும் ஒரு மின்னூலைப் படிக்கலாம் என்பதுதான் முதல் சாதகம், இடத்தை அடைக்காது என்பது இரண்டாவது; வேண்டியதைத் தேடிப் படிப்பது சுலபம் என்பது மூன்றாவது சாதகம்.

பாதகம், அதில் நிஜப் புத்தகத்தின் சுவையும் அனுபவமும் சாத்தியமாவதில்லை. ஆகவே, நான் என்னதான் மின்னூல் எழுதி வெளியிட்டாலும், தனிப்பட்டமுறையில் அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறேன்.

ஆனால் என்போன்றோர் சிறுபான்மைதான். நாளைய வாசகர்கள் மின்புத்தகங்களையே அதிகம் விரும்பி வாசிப்பார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஆனால் அவை பெரும்பாலும் இலவச மின்புத்தகங்களாகவே இருக்கும் என்று ஊகிக்கிறேன். இந்த ஊகம் தவறானால் (எழுதுகிறவர்களுக்கு) நல்லது.

கே: அச்சடித்த நூல்களை வாசிப்பதே இல்லாதுபோகும் என்று ஒரு கருத்து உள்ளதே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: அது ஒருநாளும் நடக்காது என்று நினைக்கிறேன். புத்தகச்சுவை என்பது வெறும் சாஃப்ட்வேர் கிறுக்கு அல்ல, அதன் ஹார்ட்வேரும் கலந்துதான் வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது, எல்லாத் தலைமுறைகளிலும் என்னைப்போல் அச்சுநூல் பிரியர்கள் இருப்பார்கள், புத்தகங்கள் வாழும் என்று நம்புகிறேன்.

அதேசமயம், வாசகர்கள் வீட்டிலிருக்கும் இடநெருக்கடி, இந்த நாட்டுக்கு, உலகுக்கும் வரும்போது, அச்சுப் புத்தகங்கள் அநாவசியமானவையாகக் கருதப்படலாம், அவற்றை அச்சிடுவது சட்டவிரோதம் என்றுகூட அறிவிக்கப்படலாம், அப்போது ரகசியமாக ஒரு குழு நூல்களை அச்சிட்டு, முகர்ந்துபார்த்து மகிழலாம்... அறிவியல் புனைகதைபோல்தான் இருக்கிறது, நடந்துவிடுமோ?

கே: இலக்கிய வாசிப்பு ஆர்வம் வந்தது எப்படி?
ப: கோயம்பத்தூரில் பிறந்தவன் அல்லது வளர்ந்தவனுக்கு அந்த ஆர்வம் வராவிட்டால்தான் ஆச்சர்யம். அங்கிருந்த பழைய புத்தகக்கடைகளில்தான் எனக்குப் பெரும்பாலான நல்ல நூல்கள் அறிமுகமாகின. அவற்றில் ஒன்று 'குறுந்தொகை' உரையுடன். அந்தப் புத்தகத்தை அநேகமாக ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன் என்று நினைக்கிறேன். அட்டை கிழிந்து கேவலமாக இருந்தது. ஆனால் வாசிக்க ஆரம்பித்தவுடன் அந்தச் சொகுசும் அழகும் எனக்குப் பிடித்துவிட்டது. இன்றும் அந்தப் புத்தகத்தைப் பத்திரமாக வைத்துள்ளேன்.

அதன்பிறகு, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்' என்ற புத்தகம் கம்பன்மீது பெருங்காதலை உருவாக்கியது. அப்போதிலிருந்து நான் வாங்கிய புத்தகங்களில் 90% பழந்தமிழ் இலக்கியங்கள்தான், மற்ற எதையும் படிக்கவேண்டும் என்ற ஆசையே குறைந்துவிட்டது!



கே: பெங்களூரு கம்பராமாயண முற்றோதல் அனுபவத்தை விவரியுங்கள்...
ப: விளையாட்டாகத் தொடங்கிய விஷயம். ஹரி கிருஷ்ணன், ஜடாயு ஆகியோரின் வழிநடத்துதலில், மகேஷ், ஷைலஜா, சேது, திருமூலநாதன் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பில் மிகப் பிரமாதமாக இரண்டரை ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றது. கம்பராமாயணத்தில் ஒரு வரி விடாமல் விளக்கத்துடன் வாசித்து, விவாதித்தது பெரும்பேறு!

கே: அடுத்து, சிலப்பதிகார முற்றோதல் தொடங்கியுள்ளீர்கள். முற்றோதலால் கிடைக்கும் பயன் என்ன?
ப: நாமே தனியாகப் படிக்கும்போது, நம் கவனம் பாடல்களின் பொருளில்மட்டும்தான் செல்லும், பாடல்களைச் சத்தமாக வாசிக்கும்போது கிடைக்கும் சுவையை அவ்வளவாக அனுபவிக்கமாட்டோம். சிலசமயம் சிரமமான பொருள்கொண்ட பாடலைத் தாண்டிச் சென்றுவிடுவோம், முழுதாகப் படித்து முடிப்பதே முதல் நோக்கமாக இருக்கும்.

ஆனால் முற்றோதல் வாசிப்பை ஒரு கூட்டுச் செயல்பாடாகச் செய்வதால், ஒருவருடைய பலவீனத்தை இன்னொருவர் எளிதில் நிரப்பலாம், அதனால் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறது. வாசிக்கும் பகுதியைப்பற்றிய விவாதங்கள், கூடுதல் விவரங்கள் அனைத்தும் சேரும்போது, அந்த நூலைத் தனியே வாசிப்பதைவிடப் பலமடங்கு நன்மை.

கே: இன்றைய எழுத்தாளர்முன் இருக்கும் சவால் எது?
ப: இன்றைக்கு எழுதுவதே பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. சரியான மொழியில், இலக்கண சுத்தத்துடன், வாசிக்கச் சிரமமில்லாத நடையில், எளிய விவரிப்புடன் ஒரு விஷயத்தைச் சொல்லி, வீடியோகேம், வாட்ஸ்ஆப், கேபிள் டிவி திரைகளுடன் போட்டியிட்டு அதை வாசிக்கவைப்பது சுலபமில்லை. அதனால் பெரிய புகழோ பணமோ கிடைக்கும் என்பதும் எதார்த்தமில்லை.

ஆகவே, எழுதுகிறோம் என்ற மகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதவேண்டிய மனோநிலை எழுதுபவனுக்குத் தேவைப்படுகிறது. அது கிடைத்தவர்கள் புண்ணியவான்கள்.

கே: எழுத்துலகம் சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறதா?
ப: ஆமாம், வாசிப்புலகத்தைப்பற்றி இதே கேள்வி கேட்டால் வேறு பதில் சொல்வேனாக இருக்கும்.

கே: சொல்லுங்கள், கேட்க ஆவலாக இருக்கிறோம்...!
ப: நான் பல சந்தர்ப்பங்களில் யோசிப்பதுண்டு, தமிழில் மரபுக்கவிதைகள்மட்டுமே இலக்கியமாக எழுதப்பட்டுவந்த காலத்தில், அவற்றை எழுதியவர்கள், வாசித்தவர்களில் யாராவது, பின்னர் ஒரு தலைமுறையில் மற்றவகை எழுத்துகள் முதன்மை பெற்று, மரபுக்கவிதை எழுதுவோரை, வாசிப்போரைத் தேடித்தான் பிடிக்கவேண்டி இருக்கும் என்று கற்பனையாவது செய்திருப்பார்களா? இன்றைய வாசகர்களைப் பார்த்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்?

இது மரபுக்கவிதைகளைக் குறைத்து மதிப்பிடும் விஷயமல்ல, மரபுக்கவிதைகளை இன்னும் ரசிக்கும் சிறுபான்மையினரில் நானும் ஒருவன், நான் சொல்லவந்தது, கிட்டத்தட்ட அதுபோன்ற ஒருநிலை சிறுகதை, நாவல்களுக்கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது, ஒருபக்கம் எதையும் பத்து விநாடியில் சொல் என்கிறார்கள், இன்னொருபக்கம் வளவளவென்று நீளும் மெகாசீரியல்களை ரசிக்கிறார்கள், நடுவில் கச்சிதமான ஒழுங்குடன் ஒரு விஷயத்தைச் சொல்லும் சிறுகதை, நாவல்களுக்குப் பொதுமக்கள் வாசிப்பில் இடம் குறைந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. இதைப் புலம்பலாகச் சொல்லவில்லை, நானும் சிறுகதை, நாவல் வாசிப்பதைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டுவிட்டேன் என்பதால் இந்தக் குற்றச்சாட்டு எனக்கும் பொருந்தும்.

கதைகளை மிகச் சுருக்கமாகவும் காட்சிபூர்வமாகவும்மட்டுமே சொல்லவேண்டும் என்ற வாசகவுலகத்தின் எதிர்பார்ப்பு எனக்கு நியாயமற்றதாகத் தோன்றுகிறது. எல்லா வாசிப்பும் பயன்குறித்தனவே என்ற நவீன எதிர்பார்ப்பும் அவ்வாறே. 'ஒரு புத்தகத்தைப் படிப்பதால் என் பாக்கெட்டில் என்ன சேரும்' என்று வணிகப் பரிமாற்றம்போல் வாசிப்பை அணுகுவது சரியா?

அது சரி, குழந்தை வளர்ப்பே வணிகப் பரிமாற்றம்போல் ஆகிவிட்டது, வாசிப்பெல்லாம் எம்மாத்திரம்!



கே: உங்கள் வாசகரிடம் ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள்...
ப: வாசகர்கள் பெரும்பாலும் கடித, ஈமெயில் அனுப்புவார்கள். இரண்டு கடிதங்களைப்பற்றிச் சொல்கிறேன், இரண்டும் நான் பொக்கிஷமாக நினைப்பவை.

முதல் கடிதம், தீருபாய் அம்பானிபற்றி நான் எழுதிய நூலொன்றை வாசித்துவிட்டு, அந்த உந்துதலில் சொந்தத்தொழில் தொடங்கி வெற்றியடைந்ததாக ஒரு நண்பர் எழுதியது. அடுத்த கடிதம், மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் மும்பையிலிருந்து தமிழில் எழுதியது, இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர், தமிழ் தெரியாது. ஆனால் ரஹ்மான் பாடல்களில் மயங்கியிருக்கிறார், அவற்றைப் புரிந்துகொள்வதற்காகத் தமிழைக் கற்கத் தொடங்கியிருக்கிறார், அந்த நேரத்தில் நான் எழுதிய ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கை வரலாறு நூல் வெளியானது, அவர் தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டபின் வாசித்த முதல் நூல் அது. ரஹ்மானுக்காக அதை வாசிக்க ஆரம்பித்தவர், தமிழின் அழகில் கவரப்பட்டு, அதன்பிறகு பல தமிழ்நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கிவிட்டதாக எனக்கு எழுதியிருந்தார்.

கே: உங்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்கள்?
ப: பிறந்து, வளர்ந்தது சேலம் அருகிலுள்ள ஆத்தூரில். கோவையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்தேன். தற்போது பெங்களூரில் CRMIT என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன்.



கே: சமீபத்தில் தமிழில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளீர்கள் அல்லவா? எஞ்சினியரிங் முடித்த ஒருவருக்கு எப்படி இந்த ஆர்வம்?
ப: உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், PhD செய்யவேண்டும் என்ற ஆசையில்தான் தமிழில் பட்டப்படிப்புக்குச் சேர்ந்தேன். ஆனால், பாடங்களைப் படிக்க ஆரம்பித்தபிறகு, மற்ற எல்லா நோக்கங்களும் மறந்துவிட்டன, தமிழை ஒரு பாடமாக விரும்பிப் படிக்கும் அனுபவமே போதும் என்று தோன்றிவிட்டது.

ஆகவே, ரசித்துப் படிக்கிறேன், அனுபவித்துத் தேர்வு எழுதுகிறேன், வேறென்ன வேண்டும்?

எஞ்சினியரிங் படித்தவன், லாஜிக்கை முதன்மையாகக் கொண்ட மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவன் என்றமுறையில் இங்கும் எனக்கு இலக்கணப் பாடங்கள்தான் அதிகம் பிடித்திருக்கின்றன!

உரையாடல்: தென்றல்
உதவி: ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com