தென்றல் பேசுகிறது.....
சென்னையில், ஏன், தமிழகமெங்கிலும் கடற்கரையோர நிலப்பகுதிகளில் கொட்டியிருக்கும் மழை வாழ்க்கைக்கும், வாழ்வாதாரங்களுக்கும் அளவற்ற சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகலாக வானம் கண்திறக்காமல் இதற்குமுன்னர் மழை பெய்ததை ஒருவர் நினைவுகூர வேண்டுமென்றால் அவருக்குக் குறைந்தது 114 வயதாகியிருக்கவேண்டும்! புவிவெப்பத்தால் பருவநிலை தீவிரம், எல் நினோவின் விளைவு, மனிதனின் பேராசையால் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்று எத்தனை காரணங்கள் கூறினாலும் அத்தனையும் சரிதான். இப்படி ஒரு கூட்டுச்சதியினால் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாகும்போது, அரசுமட்டுமே எதுவும் செய்துவிடமுடியாது. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவலகீதம் பாடிக்கொண்டிருந்தாலும் அரசு எந்திரம் மட்டுமல்லாமல் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும், தனிநபர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழர்களும் தம்மானாலானதைச் செய்ய உறுதி பூண்டிருக்கிறார்கள். நீங்கள் உதவ விரும்பினால் பார்க்க

*****


இந்த இதழ் தென்றலின் பயணத்தில் 16வது ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வட அமெரிக்கத் தமிழர்கள் திறன்களிலும் பொதுவாழ்விலும் அமெரிக்க மண்ணில் தடம்பதித்து வருவதைத் தென்றல் ஒரு காலக் கண்ணாடியாக இருந்து காண்பிக்கிறது. இளம் தலைமுறைத் தமிழர்கள் இங்கே மிளிரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அண்மைக்காலத் தென்றல் அட்டைப்படங்களைப் பார்த்தாலே தெரியவரும். மற்றொன்றையும் இங்கு சொல்லியாக வேண்டும். சமுதாயத்துக்குத் தன்னலமின்றிச் சேவை செய்வோர்மீது வெளிச்சம் போட்டுக் காட்டுவதைத் தென்றல் தொடர்ந்து செய்கிறது. தென்றலில் தகவல் வெளிவந்ததும் சிலராவது அவர்களைத் தொடர்புகொண்டு ஆதரவு/வாழ்த்து தெரிவித்தும், நன்கொடை வழங்கியும் ஊக்குவிப்பது எங்களுக்குத் தெரிய வரும்போது, நீங்கள் காட்டும் அளவற்ற நம்பிக்கை எங்கள் பணியைத் தொடர்ந்து செய்து உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டும் என எங்களை உழைக்கவைக்கிறது.

தென்றல் விளம்பரத்துக்குத் தரப்படும் ஒவ்வொரு வெள்ளியும், அதிக அளவில் தமிழ்ச் சமூகத்தைத் தென்றல் சென்றடையவே செலவிடப்படுகிறது. அப்படித்தான் கலிஃபோர்னியத் தமிழிதழ் என்பதாக மக்கள் கருதிய காலம் மலையேறி, 33 அமெரிக்க மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களைத் தென்றல் மாதந்தோறும் சந்திக்கிறது, தமிழ்ப் பாரம்பரியத்தோடான அவர்களது தொடர்பை, நேயத்தை உறுதிப்படுத்துகிறது. புதிய தமிழ்ப் பள்ளிகள்/கிளைகள் திறக்க உதவித்தொகை, தமிழ்த்துறை மாணவர்களுக்கு உதவித்தொகை என, தென்றலோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இந்த மண்ணில் தமிழ் செழிக்கத் தன்னால் இயன்றதைச் செய்துவருகிறது. தொடர்ந்து செய்யும்.

தென்றலின் வளர்ச்சியும் அதன் விளம்பரதாரர் வளர்ச்சியும் பிரிக்கமுடியாமல் பிணைந்தன ஆகும். வாசகர்களும், படைப்பாளிகளும், தமிழ்/இந்திய கலை கலாசார அமைப்புகளும் எமக்குத் தந்துவரும் ஆதரவும் அன்பும் தென்றலின் பயணத்தை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்டதாக ஆக்குகின்றது. தமிழ்மீதும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் வாருங்கள் தோளோடு தோள் சேர்த்து வீறுநடை போடலாம். முன்னே பாதை நீண்டு கிடக்கிறது...

*****


வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்!

தென்றல் குழு

டிசம்பர் 2015

© TamilOnline.com