ஒய்.ஜி. மஹேந்திரனின் காதலிக்க நேரமுண்டு
ஒய்.ஜி. மகேந்திரனின் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நாடகக்குழு அக்டோபர் 2005-ல் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் தங்களது 'காதலிக்க நேரமுண்டு' நகைச்சுவை நாடகத்தை நடத்தவிருக்கிறார்கள். எட்டாவது முறையாக அமெரிக்காவிற்குத் தங்களது நாடகங்களை நடத்தச் செல்லும் ஒய்.ஜி. மகேந்திரனைத் 'தென்றல்' சார்பாகச் சந்தித்து உரையாடினோம். அவர் கூறியவற்றிலிருந்து:

என் தகப்பனார் ஒய்.ஜி. பார்த்தசாரதி 1952-ல் தொடங்கிய எங்கள் நாடக்குழுவில் இன்று பிரபலங்களாக இருக்கும் பலரும் நடித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தாயார் சந்தியாவும் இதில் அடங்குவர். என்னுடைய 11-வது வயதில் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த நான், தொடர்ந்து 45 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு 'நாடகத் திலகம்' என்ற பட்டம் அளித்து கெளரவித்திருக்கிறார்கள்.

உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எங்கள் நாடகங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 1989-ல் முதன் முதலாக அமெரிக்காவுக்குத் தமிழ் மேடை நாடகங்களை எடுத்துச் சென்றது நாங்கள் தான். அப்போது நியூ யார்க், வாஷிங்டன், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் நாடகம் போட்டோம். 1993-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அமெரிக்காவுக்கு வருகிறோம். இது எட்டாவது முறை."

அமெரிக்காவில் இந்தமுறை நடத்த விருப்பது 'காதலிக்க நேரமுண்டு' என்ற நகைச்சுவை நாடகம். இது பலத்த பாராட்டுதலைப் பெற்றது. சித்ராலயா கோபுவின் மகன் இந்நாடகத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். 'காதலிக்க நேரமில்லை' அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றிச் சித்திரமாகும். ஒரு நகைச்சுவைக் காவியம். அதைப் போன்ற ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. இந்த நாடகத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

இது தவிர, எங்கெல்லாம் கேட்கிறார்களோ அங்கெல்லாம் இரண்டு நாடகங்கள் போடுவோம். அதற்காக 40 நிமிடத்திற்கான மற்றொரு குறுநாடகத்தையும் எடுத்துச் செல்கிறோம். முன்னெல்லாம் சனிக்கிழமை களில் அமெரிக்காவில் இரண்டு நாடகங்கள் போட்டதுண்டு. பார்வையாளர்களுக்கு ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரக் கஷ்டமாக இருக்கிறது. இந்த முறை 'காதலிக்க நேரமுண்டு' ஒண்ணேகால் மணி நேரத்திலும், அடுத்த நாடகம் 40 நிமிடத்திலுமாக, மொத்த நிகழ்ச்சியுமே இரண்டரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.

அமெரிக்காவுக்கு ஒரு மாதத்திற்குச் செல்கிறோம். சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சி இருப்பதால் அமெரிக்காவில் ஒரு மாதம்தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஐரோப்பாவில் ஒரு டெலிஷோ செய்யவும் நினைத்திருக்கிறோம்.

இதைத் திரைப்படமாக எடுக்க நினைத் திருக்கிறோம். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆபாசமில்லாத நல்ல தரமான நகைச்சுவை நாடகம் என்று பாராட்டப் பெற்றது 'காதலிக்க நேரமுண்டு'. இளம் கதாநாயகர் ஒருவர் படத்தில் நடிப்பார்.

டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் தமிழ் நாடகம் போட்டது எங்கள் குழு ஒன்றுதான் என்பதைப் பெருமையாகச் சொல்லுவேன். ஐரோப்பாவில் இது மூன்றாவது முறை ஆகும். லண்டன், ஆஸ்திரேலியா, பாங்காக், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பல நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறோம். ஐரோப்பா என்று எடுத்துக் கொண்டால் தவிர பாரிஸ். ஜெர்மனி, ஹாலந்து போன்ற இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம்.

இம்முறை எங்களுடன் ஜூனியர் பாலையா, யுவஸ்ரீ, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் வருகிறார்கள். அலுவலகத்தில் விடுப்புக் கிட்டாமை, மெகா சீரியல்களில் நடித்தல் போன்ற காரணங்களால் சில வழக்கமான நடிகர்கள் இந்த முறை வர முடியவில்லை.

அமெரிக்காவில் எங்கள் நாடகத்திற்கு வருபவர்கள் 30 வயதிலிருந்து 40 வயதிற்கு மேல் இருப்பவர்கள்தான். சிறியவர்கள் வருவதில்லை. அவர்களுக்குத் தமிழே மறந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். இத்தனைக்கும் அங்கு நிறையத் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. தமிழை ஒரு பாடமாகச் சொல்லித்தருகிறார்கள். ஆன்மிக விஷயங்களில் இந்தியாவில் குழந்தை களுக்குச் சொல்லித் தருவதைவிட இன்னும் அதிகமாகவே சொல்லித் தருகிறார்கள். இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு யாராவது நாடகம் போடுகிறேன் என்றால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்களோ என்று பயம் ஏற்படுகிறது.

எங்கே? எப்போது?

நாள்(2005)இடம்தொடர்பு கொள்ள வேண்டிய நபர்தொலைபேசி எண்
Oct 15சிகாகோஹேமா ராஜகோபாலன் 630.323.2226
Oct 16பிட்ஸ்பர்க்மணி மனோகரன்412.833.9183
Oct 21ரிச்மண்ட்  
Oct 22வாஷிங்டன்இளங்கோ703.370.7639
Oct 23ராலே கணேஷ்919.414.3121
Oct 29டென்வர்மணி720.222.0288
Oct 30சியாட்டில் கண்ணன் ஐயர்425.836.3486
Nov 5மின்னியாபொலீஸ்சிவந்தை651.698.0774
Nov 6கிளீவ்லாந்துமீரா சுப்பிரமணியன்440.572.0778
Nov11ஓக்லஹாமாபராசுரன்405.728.1840
Nov12டல்லாஸ்விஜி ராஜன்972.527.0809
Nov13ஆஸ்டின்ஸ்ரீராம்512.250.1530


மேலும் விவரங்களுக்கு: ஒய்.ஜி. மகேந்திரன் - 98408 21268

கேடிஸ்ரீ

© TamilOnline.com