டாலஸ்: தமிழ் மலரும் மையம் 'குதூகலவிழா'
செப்டம்பர் 17, 2015 அன்று டெக்சஸ் மாநிலம் ப்ளேனோ நகரிலுள்ள ப்ளேனோ கோர்ட்யார்ட் அரங்கில், தமிழ் மலரும் மையம் 'இளந்தளிர்களின் குதூகலவிழா' என்ற கலைநிகழ்ச்சியை வழங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. திரு. ஜெய் நடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். செல்வியர் ஸ்ருதி, ஹர்ஷினி, நித்யா மற்றும் செல்வன் கிருஷ்ணா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். சுமார் 80க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பரதநாட்டியம், கிராமிய நடனம், திரைப்பாடல் நடனம், மெல்லிசைப்பாடல், நாடகங்கள் என முத்தமிழ் விருந்தை அளித்தனர்.

'தமிழ்க்கனவு நாடகத்தில் இயக்குனராக வந்து கதைசொன்ன சிறுவன் 'காதலிக்க நேரமில்லை' நாகேஷை நினைவூட்டினான். அதுபோல் 'ஐ.டி. கிச்சன்' நாடகத்தில், ஐ.டி குழு சமைக்கத் தெரியாமல் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து, கிச்சனில் அடிக்கும் கூத்து, வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தது. குறிப்பாக, முழுத்தேங்காயைப் பொரியலில் போட்டுவிட்டு, ரிகொயர்மென்ட்டில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை என டெவலப்பர் கூறியபோது, சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

'நிறையா? குறையா?' விவாதமேடையில் பிள்ளைகள் இரு அணிகளாகப் பிரிந்து, வீட்டில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடக்கும் சிறுசிறு மன உரசல்களை விவாதித்தனர். இதில் பேசிய ஒரு சிறுவன், "தாத்தா 60 வயதில் கண்ணாடி போட்டார், அப்பா 40 வயதில் கண்ணாடி போட்டார், ஆனால் நாம் இன்று 5 வயதில் கண்ணாடி போடுகிறோம், ஏனென்றால் நாம் மிக அதிகமாக மின்னணுப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோம்" என்று கூறியது நெஞ்சைத் தொட்டது.

நன்றியுரையை நகைச்சுவையோடு திருமதி. கீதா மற்றும் திருமதி. ஆர்த்தி வழங்கியது புதுமையாக இருந்தது. பங்குபெற்ற அனைவருக்கும், ஃப்ரிஸ்கோ எட் குருக்கள் சார்பில் நினைவுக்கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பாலதத்தா தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த கீதா சுரேஷ், ஷைலா நாராயணன், ஆர்த்தி ராமமூர்த்தி, சங்கீதா கார்த்திக், பவானி சுப்ரமோனி, ப்ரியா கோபிகண்ணன் மற்றும் ஜெய் நடேசன் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜெய் நடேசன்,
டாலஸ், டெக்சஸ்.

© TamilOnline.com