கணேஷ்-குமரேஷ் வயலின் கச்சேரி
செப்டம்பர் 25, 2015 அன்று கணேஷ்-குமரேஷ் வயலின் இசைக்கச்சேரி வாஷிங்டன் இந்துக் கோயிலில் நடந்தது. இருவருமே நமது பாரம்பரிய கர்நாடக இசையையும், மேல்நாட்டு இசையையும் இணைத்துப் புதுமையாக விருந்து படைப்பதில் வல்லவர்கள். பார்வையாளர்களின் பலத்த கரவொலியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினர். ஹம்சத்வனி ராகத்தின் ஸ்வரங்களை விவரித்து வயலினில் இசைத்தது அந்த ராகத்தையே ஆராதித்ததுபோல இருந்தது. ரசிகர்களையும் தங்கள் இசையில் பங்கேற்க வைத்தது பாராட்டத்தக்க முயற்சி. ரசிகர்களிடமே சப்தஸ்வரங்களில் ஒவ்வொரு எழுத்தையும் கேட்டுப்பெற்று அவற்றையே ராகமாக அமைத்தது சிறப்பு.

அந்த ராகத்தையே ராகம், தானம், பல்லவிக்கு எடுத்துக்கொண்டு, விஸ்தாரமாக்கி, வயலினில் நகாசு வேலைகள் காட்டி, பிரமிக்கச் செய்தனர். பல்லவிக்குத் தகுந்த சாகித்திய வரிகளைக் கேட்க அரங்கத்திலிருந்த சங்கீதஞானம் மிக்க ஒருவர் எழுந்து "காமகோடிஸ சங்கரா கலியகோடி சமுத்தரா" என்று எடுத்துக்கொடுத்தார். பாடிக்காட்டிய பிறகு இருவரும் சேர்ந்து பல்லவியைப் பாடி, அதை அழகிய இசை ஓவியமாக்கினர். மிருதங்கம் வாசித்த திரு. சங்கரநாராயணன், திருச்சி கிருஷ்ணஸ்வாமி (கடம்) இருவருமே வயலின் இசைக்குப் பக்கபலமாக இருந்தனர்.

ஜெயா கிருஷ்ணன்,
மேரிலாண்ட்

© TamilOnline.com