STF: ஐந்தாம் ஆண்டுவிழா
அக்டோபர் 3, 2015 அன்று டாலஸில், தமிழ்ப்பணியுடன் அறப்பணியும் ஆற்றிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 5ம் ஆண்டுவிழா 'தாண்டவக்கோனே' என்ற கருத்தில், கார்லண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. அமெரிக்க நிகழ்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பறையிசைக் குழுவினரின் பறையிசை நடனம், பரதநாட்டியம் மற்றும் குழந்தைகள் நடனம் உட்படப் பல்சுவை நிகழ்ச்சியாக இது அமைந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், முதலாவதாக ஏ.ஆர். ரஹ்மானின் 'தாய் மண்ணே' பாடலுக்கு குழந்தைகள் நடனமாடினர். முரசு முழங்க, அரங்க வாசலிலிருந்து இருபுறமாகவும் குழுவினர் பறையிசைத்தபடி மேடைக்கு வந்தனர். வெவ்வேறு தாளத்துடனும் நடனத்துடனும் பதினைந்து நிமிடத்திற்கும் மேலாகப் பறையிசை முழங்கியது. இளையராஜாவின் இசையில் உருவான "பூவார் சென்னி' திருவாசகப் பாடலுக்கு இயற்கைச்சூழலை விவரிக்கும் விதமாகக் குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சி, பாம்பு, மயில் நடனம் சிறப்புச் சேர்த்தது. அறப்பணிகளை வீடியோ காட்சிகளுடன் ரம்யா விவரித்தார். Child to Child Harmony மூலம் சென்னை 'உதவும் கரங்கள்' குழந்தைகளுடன் நட்புக் கொண்ட குழந்தைகள் தம் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

மீண்டும் பரதநாட்டிய நடனமும் பறையிசை நடனமும் ஒருவருக்கொருவர் இடங்கொடுத்ததும் இணைந்து ஆடியதும் அற்புதமான காட்சியாகும். புலிட்சர் விருதுபெற்ற முதல் தமிழரான பழனி குமணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இரா. இளங்குமரன் இயற்றியுள்ள 'திருக்குறள் போற்றி'க்கு நாட்டிய அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் பிறந்து கல்லூரியில் பயிலும் மாணவி யாழினி, இரண்டு கைகளாலும் சிலம்பம் சுழற்றினார். தொடர்ந்து உடுக்கை, பம்பை, தவில், கடசிங்காரி போன்ற தமிழர் தாளக்கருவிகளை மையப்படுத்தி உருவான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி நினைவுகூர்ந்தனர். நமது பண்டைய சமூக நடனங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கும்மியாட்டம் நடைபெற்றது. தவில், உடுக்கை பம்பை அதிர, கும்மிப் பாடல்களுக்கு அரங்கத்தின் பெரும்பான்மையான பெண்கள் பங்கேற்றனர்.

அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். ஜெய்சங்கர் தொகுத்து வழங்கினார். விசாலாட்சி நன்றியுரை கூறினார். நலத்திட்டத்திற்காக 'உதவும் கரங்கள்' அமைப்புக்கு 45,000 டாலர் மற்றும் தமிழ் வளர்ச்சிக்காக அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகத்திற்கு 5,000 டாலர் நிதியுதவி வழங்கப்பட்டது.

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com