அக்டோபர் 5, 2015 அன்று கப்பர்லி அரங்கில் செல்வி. மீனாக்ஷி குமரகுருவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. திருமதி. நிருபமா வைத்தியநாதன் அவர்களிடம் மீனாக்ஷி கடந்த 8 ஆண்டுகளாகப் பரதம் பயின்று வருகிறார். சுவாமிமலை எஸ்.கே.ராஜரத்தினம் அவர்களின் மாணவி நிருபமா என்பது குறிப்பிடத்தக்கது. மீனாக்ஷி இதற்கு முன்னர் பல நடன நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் சார்பில் நடைபெற்ற 'சிவகாமியின் சபதம்' நாடகத்தில், சிவகாமியாக நடித்தும், நடனம் ஆடியும் சிறப்பான பங்களித்தவர்.
அரங்கேற்றம், மல்லாரி மற்றும் நடராஜ துதியுடன் ஆரம்பித்தது. லால்குடி ஜெயராமன் அவர்களின் அங்கயற்கண்ணி வர்ணத்திற்கு பார்வதி, துர்கை, தாக்ஷாயணி என்ற பல இதிகாசக் கதைகளுக்கு நல்ல பாவத்துடன் ஆடியது அருமை. தாளநேர்த்தியும், மிகுந்த தன்னம்பிக்கைமாயுகப் பிடித்த அடவுகள் பெரும் கைதட்டலைப் பெற்றன. பல பாடல்களுக்கு அவர் ஆடினாலும், அமரர் கல்கியின் 'மாலைப்பொழுதினிலே' பாடலின் காதல் இன்பமும் பிரிவுச் சோகமும் கலந்த பாடலும் அதற்கு அவர் பிடித்த பாவங்களும் பெரிதும் மனதில் நிற்கின்றன. தேஷ்ராகத் தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவுற்றது. நிருபமா வைத்தியநாதன் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), சாந்தி நாராயணன் (வயலின்) மற்றும் என். நாராயணன் (மிருதங்கம்) அரங்கேற்றத்திற்கு சிறப்புச் சேர்த்தனர்.
பாகீரதி சேஷப்பன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |