அரங்கேற்றம்: பரத் நம்பூதிரி
அக்டோபர் 11, 2015 அன்று போர்ட்லண்ட் கம்யூனிட்டி கல்லூரி கலைக்கூடத்தில் பதிமூன்று வயதான பரத் நம்பூதிரியின் கடம் அரங்கேற்றம் நடந்தது. அவ்வளவு கனமான கடத்தை மடியில் வைத்துக்கொண்டும், தூக்கிப் போட்டுப் பிடித்தும் வாசித்த பரத்தின் கைவண்ணம் வியக்க வைத்தது. வாதாபி கணபதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிலஹரியில் வேங்கடேசனின் அருளைப் பெற அவருக்கு எதையேனும் அர்ப்பணிக்க வேண்டுமோ என்ற பாடலில் கடம் முழங்கியது.

விஷால் சபூரத்தின் சித்ரவீணை நிகழ்ச்சிக்கு பரத் கடம் வாசித்தார். ஒன்பது வயதில் வாசிக்கத் துவங்கி ஃபிரான்ஸ், மலேசியா, க்ளீவ்லாண்ட் மற்றும் அமெரிக்காவின் பல இடங்களிலும் சித்ரவீணை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள விஷாலுக்கு 2015ம் ஆண்டின் மியூசிக் அகாதமியின் சிறந்த இசைக்கருவி விற்பன்னர் விருது கிடைத்துள்ளது. பரத்தின் முதல் குருவும், போர்ட்லாண்டை இசைமயமாக்கியவரும், 'சங்கரா டிரம்மிங் குரூப்' குழு நிறுவனருமாகிய திரு. சங்கர விஸ்வநாதன் தனது மாணவனுக்கு மோர்சிங் வாசித்துச் சிறப்புறச் செய்தார்.

பரத்தின் குரு டி.எச். சுபாஷ் சந்திரன், "இந்தியாவில் கூட இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடந்ததில்லை' என்று சொல்லிப் பாராட்டினார். இவர், 2015க்கான மியூசிக் அகாதமியின் சங்கீத கலா ஆச்சார்ய விருதைப் பெற்றவர். நன்றியுரையாற்றிய பரத், குருநாதர்கள் ஷைலஜா பிரசன்னா, சங்கர விஸ்வநாதன், முரளி கிருஷ்ணன், சுபாஷ் சந்திரன் போன்றோரையும், தன் பெற்றோர்களையும் வணங்கி ஆசி பெற்றார்.

கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லாண்ட், ஓரிகான்

© TamilOnline.com