தாயைக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
ஜூலை 27ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1:27க்கு சின்சின்னாட்டி, ஓஹையோவின் புறநகர்ப் பகுதியான புளூ ஆஷ் நகரைச் சார்ந்த சுமதி பாலசுப்ரமணியன் தன் தாயார் திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (53 வயது) காணவில்லை என்று காவல் துறையிடம் புகார் கொடுத்தார். மூன்று வாரம் வெளியூரிலிருந்து ஜூலை 26ம் தேதி இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்த போது தன் தாயைக் காணவில்லை, மற்றும் அவரது ஆடைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன என்று அவர் தெரிவித்தார். தன் தாயின் கணினியில் தன் அக்காள் டாக்டர் மலர் பாலசுப்ரமணியன் எழுதியிருந்த மின்னஞ்சலின் பிரதியை அவர் காவல்துறையிடம் கொடுத்தார். தன் தங்கை சுமதிக்கும், தம்பி கார்த்திக்குக்கும் மலர் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் "எப்போது என் வாழ்க்கை நான் விரும்பிய படி அமையாது எனத் தெரிந்ததோ அப்போதே என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் உங்கள் இருவரையும் அம்மாவிடம் தனியே விடக்கூடாது என்றும் புரிந்து கொண்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். "அம்மாவுக்கு நான் செய்ததை மன்னியுங்கள். ஆனால் இனிமேல் நம் யாருக்கும் அவரால் தொந்தரவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி" என்று மேலும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஜூலை 27 காலை 7 மணிக்கு, சாலையோரத்தில் அரைகுறை ஆடையுடன் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஒரு பெண் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தேட வந்த காவலதிகாரி அவர்தான் மலர் பாலசுப்ரமணியன் என்று தெரிந்ததும் அவரது தாயாரைப் பற்றி விசாரித்தார். "நான் அவர் கழுத்தை நெறித்து விட்டேன். காரில் தான் இருக்கிறார்" என்று மலர் சொன்னார். ஐந்து நிமிடத்துக்குள் ஒரு காரில் திருமதி சரோஜா பாலசுப்ரமணியனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் மலர் பாலசுப்ரமணியனுக்கு அவரது மிராண்டா உரிமைகளைப் பற்றிச் சொல்லிக் கைது செய்தனர். மலர் தனது மிராண்டா உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டு ஒப்புதல் வாக்குமூலம் தரத் தொடங்கினார். ஜூலை 24 ஞாயிறன்று 35 ¦க்ஷனாக்ஸ் (Xanax) மாத்திரைகளைப் பொடி செய்து, மறுநாள் மில்க் ஷேக்கில் கலந்து தன் தாய்க்குக் கொடுத்ததாகச் சொன்னார் மலர். தான் தற்கொலை செய்ய விரும்பியதாகவும், ஆனால், தன் தாய் தன் தம்பி தங்கைகளைக் கொடுமை செய்ய விட்டுவைக்கக் கூடாது என்று எண்ணியதாகவும் சொன்னார். மயக்க மருந்து தன் தாயைக் கொல்லாததால் அவரைப் படுக்கையறையில் மூச்சுத் திணறடித்துக் கொல்ல முயன்றதாகவும், பின்னர் அவரைத் தரையில் உருட்டிக் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும் சொன்னார். பின்னர் தன் தாயின் உடலைக் காரில் ஏற்றி வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் சொன்னார். காரில், தன் தாயைக் கொன்றதற்கான காரணங்களை விளக்கும் ஆறு பக்கக் கடிதம் இருப்பதாகவும் சொன்னார். கடிதத்தின் விவரங்களைக் காவல்துறை இது வரை வெளியிடவில்லை.
28 வயதான டாக்டர் மலர் பால சுப்ரமணியன் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் 2001ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பிட்ஸ்பர்க் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சியை ஜூன் 2004ல் முடித்தார். பின்னர் இந்தியாவுக்குச் சென்று மருத்துவப் பணி புரிந்த அவர் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்ய ஒரு மருத்துவக் கூடத்தை உருவாக்கத் துணை புரிந்தார் என்று தெரிகிறது. செயின்ட் லூயிஸ் குழந்தைகள் மருத்துவ மனைக்குச் சென்று குழந்தைகள் இதய மருத்துவம் பற்றி ஆராய்ச்சியைத் தொடர விருந்த அவரது இந்தத் திடீர்ச் செயல் சின்சின்னாட்டி வாழ் அமெரிக்கத் தமிழர் களுக்குப் பெருத்த அதிர்ச்சியளித்திருக்கிறது.
டாக்டர் மலர் பாலசுப்ரமணியனோடு பழகியவர்கள் அவரது இனிமையான குணத்தையும் அவரது அறிவுக்கூர்மை யையும் பாராட்டுகிறார்கள். 18 மாதத்துக்கு முன்பு அவரது தந்தை செங்கோட்டு வேலப்பன் பாலசுப்ரமணியன் சமோவாவில் நீரில் மூழ்கி இறந்தார் என்று தெரிகிறது. இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததில் இருந்தே மலர் பெருத்த மன உளைச்சலில் இருந்தார் என்றும், அம்மாவிடம் பேசாமல் படித்துக் கொண்டும் படங்களைப் பார்த்துக் கொண்டும் இருந்தார் என்கிறார் ஒரு குடும்ப நண்பர்.
திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் டாக்டர் மலர் பாலசுப்ரமணியன் தண்டிக்கப் பட்டால் 20 ஆண்டுச் சிறைத்தண்டனையை எதிர் கொள்ள நேரிடும் என்கிறார் ஒரு அரசாங்க வழக்கறிஞர். நீதிபதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க மலரை அழைத்து வந்த போது நீதிமன்றத்தின் வெளியே அவரது தங்கை சுமதி பாலசுப்ரமணியன், தன் அக்கா மலரின் மேலிருக்கும் பாசத்தையும், அவருக்குத் தங்கள் முழு ஆதரவையும் வெளிப்படுத்தத் தன் உற்றார் உறவினர் களோடு வந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சோகமான நிகழ்ச்சியின் மிகுந்த சிக்கலான பின்னணி பற்றிச் சின்சின்னாட்டி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
டாக்டர் மலர் பாலசுப்ரமணியத்துக்குச் சிறிது காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் குற்றவாளி இல்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். கொலை நடந்த சிறிது நேரத்தில் அவர் தன் உடன் பிறந்தோருக்கு எழுதிய மின்னஞ்சலில் "நான் இரண்டாம் தரத் தோழி, சகோதரி, மருத்துவர் மட்டுமல்ல, கொலை செய்யும் அளவுக்குத் தாழ்ந்து விட்டேன். என்னை நான் இழந்து விட்டேன்; இப்படியாகி விட்ட என்னை நான் வெறுக்கிறேன்!" என்று எழுதியிருந்தார். 35 மயக்க மருந்து மாத்திரைகளோடு, ஓரிரு வைன் பாட்டில்களைக் குடித்தும், தன் கையைக் கிழித்துக் கொண்டும் தன் நிலை மயங்கி இருந்த மலரிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தள்ளி வைக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர். |