TNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம்
அக்டோபர் 13, 2015 அன்று ஃபிலடெல்ஃபியாவின் ஸ்டெட்சன் பள்ளியில் நடைபெற்ற ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திராவின் 'பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகம் நடத்தப்பட்டது. இதில் திரட்டப்பட்ட 50,000 டாலர், தமிழ்நாடு அறக்கட்டளையின் 'அன்பாலயம்' குழந்தைகளுக்கென வைப்புநிதியாக வழங்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 16, 2006 அன்று நடைபெற்ற ஒய்.ஜி. மகேந்திராவின் 'காதலிக்க நேரமுண்டு' நாடக ஈகைவிழாவில் திரட்டிய நன்கொடையால், அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி வாழ்ந்த அறுபது ஏதிலிக் குழந்தைகளுக்கு 'அன்பாலயம்' புதுக்கட்டிடத்தில் புது வாழ்க்கை தொடங்கியது.

ஒய்.ஜி. மகேந்திரா நாடகத்தை மிகவும் ரசித்த அவையோர், "அன்பாலயம் அன்றும் இன்றும் என்றும்" என்ற தலைப்பில், படங்களோடு உரையாற்றிய அறக்கட்டளை துணைத்தலைவர் முனை. சோமலெ சோமசுந்தரத்தின் உரையில் மனம்நெகிழ்ந்து, பெருநிதி வழங்கி மகிழ்ந்தனர். அன்பாலயத்தின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அறக்கட்டளையுடன் துணையாகச் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் குழுவினர், ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் தன் கல்லூரிப் பகுதிநேரச் சம்பளத்திலிருந்து 2,000 டாலர் வழங்கிய நியூ ஜெர்ஸி ரட்கர்ஸ் (Rutgers) பல்கலை மாணவர் ராம் முத்துராமன் ஆகியோரை அறக்கட்டளைத் தலைவர் திரு. சிவசைலம் வாழ்த்தி, நினைவுப்பரிசுகள் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு: www.tnfusa.org

சோமலெ சோமசுந்தரம்,
பிலடெல்பியா, பென்சில்வேனியா

© TamilOnline.com