கலிஃபோர்னியாவின் பெர்க்கலியில் இயங்கி வருகிறது சீகாலஜி நிறுவனம். இது உலகிலுள்ள தீவுப்பகுதிகளின் கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படும் அமைப்புகள் மற்றும் தனிநபர்ளைக் கண்காணித்து, அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. 2015ம் ஆண்டிற்கான சிறந்த கடல்வளப் பாதுகாப்பாளர் விருதிற்கு தமிழகத்தின் திருமதி. லட்சுமி மூர்த்தி (48) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 8 அன்று, பெர்க்கலி நகரில் நடந்த விழாவில் விருதும் 10,000 டாலர் பணமுடிப்பும் பெற்றார். இவர் இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியரும், முதல் பெண்மணியும் ஆவார்.
வங்கக்கடலில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் "மன்னார் வளைகுடா இயற்கைப் பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு" ஒன்று இயங்கிவருகிறது. லட்சுமி அதன் தலைவி. கடற்கரையோரக் கலாசாரம் மற்றும் கடல்வளத்தைக் காப்பதிலும், மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதிலும் முனைப்புடன் செயல்படுகிறார். கடற்பாறையில் வளரும் பாசிகளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சேகரிப்பது, இதுகுறித்த விழிப்புணர்வை மீனவப் பெண்களிடம் ஏற்படுத்துவது, அவர்களது வாழ்க்கை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவது போன்ற பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். கடல்பாசி சேகரிப்பதைத் தொழிலாகக் கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இவரது தலைமையில் இயங்கி வருகின்றனர். லட்சுமி, பாம்பன் ஊராட்சியின் வார்டு உறுப்பினரும்கூட. வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு, தன்னந்தனிப் பெண்ணாகப் போராடி உயர்நிலையை அடைந்தவர்.
"இந்த விருது, மீனவப் பெண்கள் வாழ்க்கைத்தரம், குழந்தைகள்நலம், கல்வி, கடல்வளப் பாதுகாப்புக்கு மேலும் உழைக்கத் துாண்டியுள்ளது. இது தமிழக மீனவப் பெண்களுக்குக் கிடைத்த உலக அளவிலான அங்கீகாரம்" என்கிறார். |