ஜில்லுவுக்கு கல்யாணம்
திருமங்கலம் ஈச்சம்பாடி ஸ்ரீ பட்டாபி ஐயருடைய பௌத்ரியும்,
திருக்குறுங்குடி ஸ்ரீ சந்திரசேகருடைய தௌஹித்ரியும்,
ஸ்ரீ சுப்புராமனுடைய புத்ரியுமான ஜ்வாலா என்ற ஜில்லுவை

டாலஸ் திரு. ஏட்ரியன் ஃப்ரெட்ரிக் ரஸல் அவர்களுடைய பௌத்திரனும்,
மின்னசோடா திரு. மார்க் கோல்மன் அவர்களுடைய தௌஹித்ரனும்,
திரு. டாம் ரஸல் அவர்களுடைய புத்ரனுமான ராபெர்ட் என்னும் ராபிக்கு


கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய் ஈஸ்வர கிருபையை முன்னிட்டு பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தத்தில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஆபட்ஸ்பரி கல்யாண மண்டபத்தில் நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் குடும்ப ஸஹிதம் வந்திருந்து முஹூர்த்தத்தை நடத்திவைத்து தம்பதிகளை ஆசீர்வதித்து, எங்களையும் கௌரவிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

*****


கல்யாணப் பத்திரிக்கையை மூன்றாவது முறையாய் ப்ரூஃப்ரீட் பண்ணிக்கொண்டார் என் அப்பாவாகிய சுப்புராமன். எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். இது அவர்களாகவே எடுத்துக்கொண்ட லட்சியமா அல்லது சமூகம் அவர்கள்மீது திணித்திருப்பதா என்று பலமுறை யோசித்து பதில் கிடைக்காமல் கைவிட்டிருக்கிறேன். இருபத்திரெண்டு வயதில் இதாகாவில் ஜர்னலிசம் டிகிரியை முடித்துக்கொண்டு காலேஜைவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அப்பா என்னுடைய பயோடேடாவை ஒரு ஆன்லைன் திருமண வெப்சைட்டில் பதிவு பண்ணிவிட்டார். "ஏஜ் 22, ஃபேர், ஸ்லிம், ப்ரிட்டி, லவ்ஸ் ம்யூசிக், ரீடிங் புக்ஸ், காட் ஃபியரிங், ..." இப்படி என்னை ஒரு ஐடியல் மணமகளாய் போட்டுவிட்டார். பிறகு அங்குள்ள பையனின் அப்பா அம்மாக்கள் மட்டும் என்ன குறைச்சலாவா விளம்பரம் செய்கிறார்கள்?

"அப்பா, இப்பதான் நான் டிகிரி முடிச்சிருக்கேன். அடுத்த மாசத்துலிருந்துதான் வேலைக்குப் போகப்போறேன், அதுக்குள்ள கல்யாணமா?" என்றால் அம்மா, "சும்மா போட்டு வச்சிருக்கோம் ஜில்லு, உனக்கு பிடிச்சமாதிரி இருந்தா டேட் பண்ணியே கல்யாணம் பண்ணிக்கலாமே" என்றாள். அம்மாவுக்கு எத்தனை வருஷம் இந்த ஊரில் இருந்தாலும் டேடிங் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. "டேடிங்னா, சும்மா பேசிக்கறதா, சேர்ந்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா? கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற எண்ணம் இருக்குமா?" என்பதுபோன்ற கேள்விகள் கேட்பாள்.

"அம்மா, இப்ப யாரு கல்யாணம்பத்தி யோசிக்கறா? வீ ஆர் ஜஸ்ட் கெட்டிங் டு நோ ஈச் அதர்" என்று புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

வேலைக்கு நியூ யார்க் போனபின் முதல் ஈமெயில் வந்தது. "யுவர் டாட் கேவ் மீ யுவர் ஈமெயில், ஷால் வீ மீட்? சின்சியர்லி, சுந்தா" என்று மொட்டையாக ஒரு ஈமெயில்? முதலில் ஸ்பாம் ஃபோல்டருக்கு தள்ளிவிடலாம் என்று நினைத்தேன். என் அப்பாவுடைய ஈமெயிலும் காப்பியாகி இருந்ததால் அப்படிப் பண்ணமுடியவில்லை. "யாரிது, சுந்தான்னு?". "பையன் பேரு சுந்தரமூர்த்தி, வீட்டுல சுந்தான்னு கூப்பிடறா. எம்.ஐ.டி. யில் ரோபோடிக்ஸ்ல பி.ஹெச்டி. பண்ணியிருக்கான். நல்ல சம்பளம், ஒரே பையன்" என்றாள் அம்மா. டெக்னாலஜி மேஜர் என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. சரி, எடுத்தவுடன் வேண்டாம் என்று சொன்னால் எடுபடாது என்று நானும் சுந்தாவும் ஒரு ஈவனிங் க்ளப்பில் மீட் செய்தோம்.

சோடா கண்ணாடியும், கோட் சூட்டும் பார்த்தவுடனே சுந்தா யாரென்று தெரிந்துவிட்டது. "ஹாய்" என்று கைகுலுக்கும்போதே கைகள் சில்லிட்டுக் கொண்டிருந்தது. ரொம்பநேரம் குறுகுறுவென்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தால் தலையைக் குனிந்துகொண்டான். பொறுமை இழந்து நானே பேசினேன் "சுந்தா, எனக்கு கல்யாணத்தில் பெரிய ஈடுபாடில்லை, ஐ வான்ட் டு எஞ்ஜாய் லைஃப், இப்பதான் வேலையில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு ஃபாரீன் கரஸ்பான்டன்ட் ஆகணும்".

"யெஸ், யெஸ், ஐ கேன் அண்டர்ஸ்டான்ட். எனக்கு அக்டோபருக்குள்ள கல்யாணம் ஆயிடும்னு ஹாரோஸ்கோப்பில் இருக்கு, ஐ கேன் வெயிட் டில் தென்" என்றான். சயன்ஸுக்கும் அஸ்ட்ராலஜிக்கும் என்னவொரு பொருத்தம். நிறைய இந்திய ஆண்கள் இப்படித்தான் சோஷியலி ஆக்வர்டாக இருப்பார்கள். பெண்களிடம் பேசாதே என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பார்களோ என்னவோ. ஏதோ சாக்குச் சொல்லி நானும் தட்டிக்கழித்த பின் அவனுக்கு அந்த அக்டோபரில் கல்யாணம் நடந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.

நியூ யார்க் லைஃப் அருமையாக இருந்தது. வேலையும் சுவாரஸ்யம்தான். அப்பா அம்மா மாதம் ஒரு பையனின் ஃபோட்டோவும் ப்ரொஃபைலும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் டாக்டரும் இஞ்சினியருமே க்வாலிஃபைட் கேண்டிடேட்ஸ். இப்படித்தான் கலிஃபோர்னியாவிலிருந்து டாக்டர். பாலாஜி என்ற நியூரோ சர்ஜன் நியூ யார்க்குக்குப் பறந்து வந்தான். ஆறடி, நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான். நியூ யார்க்கின் உயரமான கட்டடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ரெஸ்டாரென்டுக்கு அழைத்துச் சென்றான். காரிலிருந்து இறங்குவதற்குள் ஓடிவந்து கதவைத் திறந்தான். உள்ளே சென்றபின் உட்காருவதற்குச் சேரை இழுத்து நான் உட்கார்ந்தபின் எதிரில் போய் உட்கார்ந்தான். "யூ லுக் சோ ப்யூடிஃபுல். உன்னை நான் ஒரு ப்ரின்ஸஸ் போல பார்த்துப்பேன். நீ என்னோட கலிஃபோர்னியாவுக்கு இப்பவே வந்துடறயா" என்று ஒரே எக்ஸைட்டடாகக் கேட்டான். "பாலாஜி, நாம இப்பதான் முதல்முறையா சந்திக்கறோம், வீ ஹார்ட்லீ நோ ஈச் அதர்".

"இல்லை ஜ்வாலா, உன்னோட ப்ரொஃபைல் பிக்சர் பார்த்தவுடனே நீதான் என் லைஃப் பார்ட்னர்னு டிசைட் பண்ணிட்டேன். வீ வில் மேக் எ பர்ஃபெக்ட் கபிள்" என்றான். இதற்குமேல் என்னால் பொறுக்கவே முடியவில்லை. "இட் இஸ் ஆல்வேஸ் நாட் அபௌட் யூ இடியட்" என்று கத்தவேண்டும் போலிருந்தது. ஃபோனில் நடந்ததைச் சொல்லி அம்மாவுக்கு புரியவைக்கவே முடியவில்லை. "அந்தக் காலத்துல இந்தமாதிரி யாராவது என்னைக் கேட்டிருந்தால் கல்யாணம் பண்ணிக்காமலே கூடவே ஃப்ளைட்டில் போயிருப்பேன். உனக்கென்ன வந்தது?" என்றாள். அதனால்தானோ என்னவோ ஃபோட்டோவில்கூட பார்க்காமல் நேராக கல்யாணமண்டபத்தில் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.

"அதுக்கென்ன இப்போ, நாங்க சந்தோஷமா இல்லயா? குழந்தை பெத்துக்கலயா" என்பாள் தமிழ் டிவி சீரியலை பார்த்துக்கொண்டே. அப்பா வெளியில் கார்டனிங்கிலோ, லேப்டாப்பிலோ மூழ்கியிருப்பார். அவர்களுக்குள் காமனாக எதையும் நான் பார்த்ததில்லை. மாதம் ஒருமுறை வந்த ஃபோட்டோக்களின் ஃப்ரீக்வன்சி குறைந்தது. அவர்களுடைய இந்தியன், ப்ராமின், ஐயர், டீடோடலர், டாக்டர்/இஞ்சினியர் ஃபில்டரில் எத்தனை பேர்தான் மாட்டுவார்கள்? என்னுடைய இருபத்தி எட்டாவது வயதில் இந்தியாவுக்கு என் சித்தப்பாவின் பெண் சுபாவின் கல்யாணத்திற்கு போனது தப்பாகிப்போனது. சுபாவுக்கு இருபத்திரெண்டு வயதில் கல்யாணம். எம்.எஸ்சி. ஃபிசிக்ஸ் படித்துவிட்டு "நான் ஹவுஸ்வைஃபா இருந்தா போதும். வேலைக்கு போகவேண்டாம் என்று கண்டிஷன் போட்டிருக்கார்" என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டு தன்னைப் பூரணமாய் மாற்றிக் கொண்டிருந்தாள்.

என் அப்பாவும் அம்மாவும் ஊரில் என்னைப்பற்றிக் கேட்ட அத்தனை பேரிடமும் கல்யாணத்திற்கு வரன் தேடிக்கொண்டிருப்பதை, என் பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது என்பதுபோல் சோகமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவிலிருந்து வந்தவுடன் மீண்டும் எனக்கு வரன்தேடுவது முக்கியமாகிப் போனது. என்னுடைய ப்ரொஃபைலை திரும்பவும் அப்டேட் செய்து லேட்டஸ்டாய் பாப்புலரான வெப்சைட்டில் பதிவு செய்தார்கள். இந்தமுறை இந்தியன், வெஜிடேரியன், டாக்டர்/இஞ்சினியர் என்ற புது ஃபில்டரில் புது மீன்கள் நிறையவே வந்தன. மானவ் என்ற குஜராத்தி ஜெயின் பையன், வால் ஸ்ட்ரீட்டில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராய் இருந்தான். ஸ்டேடிஸ்டிக்ஸில் பி.ஹெச்டி. பண்ணியிருந்தான். அவனுடைய சம்பளத்தைப் பார்த்தவுடன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கண்கள் விரிந்தன. "ஜெயின் எல்லாம் நம்மளவிட ஆசாரமானவா, ப்யூர் வெஜிடேரியன்" என்று கன்வின்ஸ் செய்துகொண்டார்கள்.

உள்ளூரிலேயே இருந்ததால் ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆறுமணிக்கு அவனுடைய ஆஃபீசுக்கு பக்கத்திலிருந்த ஒரு இந்தியன் ரெஸ்டாரென்டில் மீட் செய்துகொண்டோம். "ஷால் வீ ஆர்டர் சூப், மேதி ரோட்டி, தால்" என்று என்னைக் கேட்டுவிட்டு "பேரர், ஆல் ஒன் பை டூ" என்றான். தனக்கு ஒரு காண்டோ வீடு, உள்ளூரில் ஒரு மோட்டல், வெளியூரில் இரண்டு மோட்டல் இருக்கிறது என்று சொத்துக்கணக்கு சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். சாப்பாடு வந்தவுடன் எல்லாவற்றையும் சரி பாதியாகப் பிரித்து வைத்துவிட்டு தன் பங்கைச் சாப்பிட ஆரம்பித்தான். டாண் என்று எட்டரை மணியானவுடன் "அச்சா, ஐ ஸ்லீப் அட் டென் அண்டு கெட்டப் அட் ஃபைவ், ஐ டோன்ட் லைக் டு சேஞ்ச்" என்றபடி சரியாக பாதிப் பணத்தை சில்லறை உள்பட மேஜைமேல் வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

கல்யாணம் செய்துகொண்டு பாதி நாட்கள் உன் வீட்டிலும் பாதி நாட்கள் என்னுடைய காண்டோவிலும் இருக்கலாம் என்று சொல்லியிருக்கலாம் போலிருந்தது.

என்னுடைய முப்பத்திமூன்றாவது வயதில் ஃபாரின் கரஸ்பாண்டன்டாக பாஸ்னியாவின் தலைநகரமான சாராயேவொவுக்கு புறப்பட்டேன். போரின் சுவடுகளையும் தழும்புகளையும் பற்றி ரிப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். அந்த ஊரைப்பற்றி எத்தனை படித்திருந்தாலும் புதிய அனுபவமாகவே இருந்தது. ஒரு நரகத்தில் வாழ்ந்த வாழ்க்கையை எப்படி மறந்துவிட்டு இயல்பாக இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது. புல்லட்டுகள் துளைத்த சுவர்கள், பாதி உடைந்துபோன கட்டடங்கள் போரையே நினைவூட்டிக் கொண்டிருந்தன.

மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் நியூ யார்க் வந்தேன். அப்பாவையும் அம்மாவையும் பார்த்ததில் ஒரே சந்தோஷமாய் இருந்தது. பிரிவு எல்லோருக்குமே ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும். என்ன இருந்தாலும் என்னை உள்ளபடியே நேசிக்கும் மனது அவர்களுக்குதான் என்று உணர்ந்து கொண்டேன்.

"ஜில்லும்மா, இந்த பையனை பாரேன், உனக்கு பிடிக்கும்னு நெனக்கறோம்" என்று ராபியை அறிமுகப்படுத்தினார்கள். ராபி ஒரு கேதலிக் கிறிஸ்டியன், அமெரிக்கன் என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ராபியும் ஒரு ஜர்னலிஸ்ட் என்பதால் எங்களுக்குள் பேச நிறைய இருந்தது. நிறைய ட்ராவல் செய்ததால் இரண்டுபேராலும் பல கலாசாரத்தையும் அலசமுடிந்தது. சிரிக்கச்சிரிக்க பேசினான். அவனுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் என்னுடைய அரேஞ்ச்ட் டேட்ஸ் என எல்லாவற்றையும் கிண்டலாய் பேசிக்கொண்டோம். ஹீ இஸ் த ஒன் என்று சீக்கிரமே தோன்றி விட்டது. அப்பா அம்மாவின் ஆசைப்படி இந்தியாவில் ராபிக்கும் எனக்கும் அரேஞ்ச்டு கல்யாணம். அப்பா அம்மாவுக்கு சித்தப்பாவிடமும் மற்ற சொந்த பந்தங்களிடமும் பழைய நண்பர்களிடமும் ராபியை அறிமுகப்படுத்துவதில் ஒரே பெருமை. இந்த மனமாற்றம் என் வயதால் வந்ததா அல்லது அவர்கள் மனதால் வந்ததா என்று தெரியாது.

எங்கள் வீட்டு தோசா சட்னியை அவனுக்கும், அவர்கள் வீட்டு பத்துவருட ஒய்னை எனக்கும் பிடித்துவிட்டன!

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com