விமானத்தில் எங்களுடன் பயணம் செய்த என் தோழி வசுந்தராவும் அவள் கணவர் பரசுவும் சாண்டா கிளாராவில் உள்ள அவர்கள் பையன் வீட்டுக்கு வந்தனர். பரசு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். முன்பே பலமுறை அமெரிக்கா வந்துள்ளனர். திட்டமிட்டபடி நாங்கள் நால்வரும் சேர்ந்து பயணம் செய்தோம்.
மருத்துவக் காப்பீடு (மெடிகல் இன்சுரன்ஸ்) இந்தியாவில் எடுத்து விடுகிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து பல பெற்றோர்கள் செலவைக் கருதித் தவிர்த்துவிடுகிறார்கள். ''எனக்கென்ன? இந்தியாவில் நன்றாகத்தானே இருந்தேன். இங்கு என்ன வந்துடப் போகுது? தண்டச் செலவு" என்று எண்ணுகிறவர்களுக்கு இப்போது நான் சொல்லப் போவது ஒரு அபாய மணியாக இருக்கட்டும்.
டாக்டர் பரசுவுக்கு திடீரென்று உடல்நிலை அசெளகரியம். பல்வலி. அதனால் தலைவலி. இரண்டு தோள்பட்டை வலி. பையன் சேகரும், வசுந்திராவும் "ஆஸ்பத்திரிக்குப் போகலாமா?" என்றதற்கு ''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவசியமானா நானே சொல்லமாட்டேனா? நானே ஒரு டாக்டர். எனக்குத் தெரியாதா?'' என்று சொன்னதால் இருவரும் அரை மனதாய் விட்டுவிட்டனர்.
அன்று சேகர் அலுவலகத்துக்குக் கிளம்பும் போது திடீரென்று பரசு வாந்தி எடுக்கவும், பயந்து போன சேகர் ஆபீசில் சொல்லிவிட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கு அழைத்துப் போயிருக்கிறான். அங்கு கிடுகிடுவென்று இரண்டு டாக்டர்கள் பரிசேதானை செய்தார்கள். இசிஜி, இரத்தப் பரிசோதனை என்று பலவும் நடந்தது. அதற்குள் நானும் என் கணவரும் அங்கு சென்றோம்.
மாலை நான்கு மணிக்கு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் வந்து பார்த்தார். அவர் சொன்னார், "இது ஹார்ட் அட்டாக். உடனடியாக ஒரு ஆபேரஷன் செய்யணும்.''
இதில் என்ன வேடிக்கை என்றால் டாக்டர் பரசுவுக்கு இதுவரை சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் என்று எந்த வியாதியும் இல்லை. காப்பீட்டுக்காக இந்தியாவில் பெரிய நர்சிங்ஹோமில் எல்லா டெஸ்டும் செய்து நார்மல் என்று கிளம்பி வந்தார்.
இரவு ஒன்பதரை மணிக்கு ஆபேரஷன் முடிந்தது. மறுநாள் ரத்தத்தில் சர்க்கரை 300, ரத்த அழுத்தம் 200/100 என்று எகிறிவிட்டது. ஒருவழியாக ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து எல்லாவற்றையும் நார்மலுக்குக் கொண்டு வந்தபின் வீட்டுக்கு அனுப்பினார்கள். "சர்க்கரை இருந்தால் ஹார்ட் அட்டாக் வலி இருக்காது" என்று சொன்னார் மருத்துவர். டாக்டர்களையே ஏமாற்றிவிட்டது இந்த ஹார்ட் அட்டாக்.
ஒன்று சொல்ல வேண்டும், அரசு மருத்துவமனை என்றாலும் அவசரம் என்று வந்தால் என்ன கவனிப்பு! எத்தனை அக்கறை! ஆபேரஷன் செய்த இரவு அன்று டாக்டர் பரசுவை கவனிக்க மூன்று நர்ஸ்கள் போட்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்காதான்!
இதில் என் கணவர் பரசுவிடம், ''டாக்டர் இந்தியாவில் நீங்க அரசு ஆஸ்பத்திரியில் பணிசெய்த போது நோயாளிகளை உண்மையான அக்கறையோடு கவனித்த புண்ணியம்தான் இப்படி உங்களை அமெரிக்காவில் நல்ல வைத்தியம் செய்ய வைத்தது'' என்றார். ஏனெனில் என் கணவரும் ஒரு டாக்டர். அதிலும் பரசுவோடு வேலை பார்த்தவர்.
இதில் இந்தியாவை எண்ணி நான் பெருமைப்பட வைத்தது என்னவென்றால் அந்தப் பெரிய மருத்துவ மனையில் 75 சதவீத டாக்டர்கள் இந்தியர்கள். பரசுவுக்கு வைத்தியம் செய்த டாக்டர் குமார், டாக்டர் கில், டாக்டர் சங்கு என்று இவர்கள் எல்லாம் இந்தியர்கள். பேர்பெற்ற மருத்துவர்கள்.
என்னங்க, இனியாவது இந்தியாவை விட்டு கிளம்பும்போது அங்கோ அல்லது இங்கோ மருத்துவக் காப்பீடு இல்லாமல் கிளம்பாதீங்க. சரியா!
குருபிரியா |