எர்தாம்டனின் சுடர்
புத்தகம் – 1

அத்தியாயம் – 1
அதுவொரு அதிகாலை நேரம். வெய்யில்காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே வேலையைத் தொடங்கிவிட்டான். எர்தாம்டன் நகரின் வீடுகளில் ஜன்னல்மூலமாக நுழைந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களைச் சீண்டினான். சில வீட்டு ஜன்னல்களில் திரை இருந்தாலும், நடுவிலிருக்கும் ஓட்டையின் மூலம் நைசாகக் கையை நீட்டினான்.

பாதித் தூக்கத்தில் இருந்த அருண் மேகநாதனின் முகத்தில் சுரீர் என்று சூரியவெளிச்சம் பட, முகத்தைப் போர்வையால் மூடிக்கொண்டான். "கண்ணா, நேரம் ஆயிருச்சு பாரு. எழுந்திரு!" அருணின் அம்மா கீதா ஜன்னல் திரையைத் திறந்துவிட்டு, அவனைச் செல்லமாக எழுப்பினார்.

"அம்மா ப்ளீஸ்மா, அஞ்சு நிமிஷம்?" கெஞ்சினான் அருண். இது தினந்தோறும் நடக்கும் செல்லப் பிடிவாதம். "மணி ஏழு ஆயிருச்சு கண்ணா. இனிமேலும் தூங்கினா சோம்பேறி ஆயிருவ!"

"அம்மா, இன்னிக்குமா சீக்கிரம் எழுந்துக்கணும்? சண்டே ஒருநாள் லேட்டா எழுந்துக்கறேனே?" மீண்டும் கெஞ்சினான்.

"கண்ணா, இப்ப நாம ஜாகிங் போகணும். போய் சீக்கிரம் முகம்கழுவி, பல்விளக்கிட்டு வா" என்று கூறிவிட்டு கீதா சென்றார். கீதா ஒரு விவசாய விஞ்ஞானி (Agricultural Scientist). குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். நல்ல உணவு சாப்பிடணும், நல்லா உடற்பயிற்சி செய்யணும் என்று வற்புறுத்துவார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் குடும்பத்தோடு ஜாகிங் போவார்கள்.

அருண் மெத்தைமீது எழுந்து உட்கார்ந்தான். முகம் கழுவப் போவதற்குமுன் தினமும் காலையில் செல்ல நாய்க்குட்டி பக்கரூவுடன் கொஞ்சம் விளையாடுவான். பக்கரூவை ஏனோ அன்று காணவில்லை. காலையில் அவனுக்கு முன்னால் எழுந்து, அறைக்குள் வந்து அன்போடு 'வவ்வவ்' என்று குரைத்து அருணை பக்கரூ எழுப்புவான். இன்றைக்கு பக்கரூவின் நிழல்கூடக் காணவில்லை! அருணுக்கு ஒரே ஆச்சரியம்.

"எங்கே பக்கரூ?" என்று சொல்லிக்கொண்டே, பல்விளக்க எழுந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் ஜாகிங் உடையில் சமையல் அறைப்பக்கம் அருண் போனான். அப்பா பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். "அருண், குட்மார்னிங். நல்லா தூங்கினயா?" என்று கேட்டார். அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நாற்காலியின் அடியில் அருண் தேடினான்.

"என்னப்பா, என்ன தேடுற?" என்றார். "அப்பா, பக்கரூவைப் பாத்தீங்களா?"

"அவன் தூங்கறானே அருண். இப்பத்தான் பார்த்தேன்."

"இன்னும் தூங்கறானா? மாட்டானே!" என்று சொல்லிக்கொண்டே பதட்டமாக பக்கரூவின் இருப்பிடம் நோக்கி ஓடினான். பக்கரூவின் இடம் அருணின் அறையில் இருந்து சற்றுத்தள்ளி ஒரு மூலையில் இருந்தது. ஒரு சின்ன மாளிகைபோலத் தோற்றமளித்தது. அதில் ஒரு மெத்தையில் பக்கரூ பாதிக் கண்ணை மூடியபடி படுத்திருந்தான்.

"பக்கரூ, எழுந்திரு. யார் வந்திருக்காங்க பாரு" என்று சொல்லி அருண் அவனை எழுப்ப முயற்சித்தான். பக்கரூவிடம் இருந்து வெறும் முனகல்மட்டும் கேட்டது. அருண் அவனைச் சடாரென்று தூக்க முயன்றான். அப்பொழுது இரு கைகள் அருணின் தோளைக் கெட்டியாகப் பிடித்தன. திரும்பிப் பார்த்தான் அருண். அவை அம்மாவின் கைகள்.

"அருண், பக்கரூவைத் தொந்தரவு செய்யாதே. வா, நாம ஜாகிங் போகலாம்" என்றார். "அம்மா, ப்ளீஸ்… கொஞ்சமாவது அவனை எழுப்பிப் பார்க்கறேன்," என்று மன்றாடினான் அருண்.

"வேண்டாம் கண்ணா, நாம திரும்பி வரதுக்கு முன்னால அவன் எழுந்துருவான். தூங்கட்டும் அதுவரையில்." என்றார் அம்மா. அருணின் அப்பா வீட்டிலேயே இருக்க முடிவுசெய்தார். "அருண், நீ அம்மாவோடு ஜாகிங் போ. நான் பக்கரூவைப் பாத்துக்கறேன்" என்றார்.

"சரி அப்பா, பக்கரூ எழுந்தவுடன் எங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணுங்க, ப்ளீஸ்!"

"கட்டாயமா. டெக்ஸ்ட் என்ன, Instagram அனுப்பறேன் கவலைப்படாதே, அம்மாவோடு போய் நல்லா ஓடிட்டு வா."

சாதரணமாக கீதா ஜாகிங் போகும்பொழுது செல்ஃபோன் எடுத்துப்போக விரும்பமாட்டார். ஆனால், அன்றோ அருணின் மனது புண்படாமல் இருக்க அவர் அதை அனுமதித்தார். அரை மனதோடு அருண் அம்மாவுடன் கிளம்பினான். பக்கரூவுக்கு என்ன ஆச்சு?

(தொடரும்)

கதையும் படமும்: ராஜேஷ்

© TamilOnline.com