நோபெல்பரிசு பெற்ற உலகப்புகழ் வாய்ந்த அறிவியல் மேதையான சர். சி.வி. ராமன் மிகவும் எளிமையான, கர்வமற்ற, ஒழுக்கசீலர், நேர்மையானவர் என்று போற்றப்பட்டவர். கருணை உள்ளமும் தாராள மனப்பான்மையும் கொண்டவர். தான் நோபெல்பரிசாகப் பெற்ற தொகை முழுவதையுமே பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கெனக் கொடுத்தார்.
ஒருமுறை, ஆய்வில் தனக்குத் துணை புரிபவர்களைத் தேர்ந்தெடுக்கச் சிலரை நேர்காண அழைத்திருந்தார். அவர்களுள் ஓர் இளைஞரை, "உங்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை" என்று ராமன் தெளிவாகக் கூறிவிட்டார். நேர்காணலுக்குப் பின் மதிய உணவுக்கு ராமன் தமது வீட்டுக்குப் போய்விட்டார்.
மதியம் மூன்று மணியளவில் அவர் ஆய்வு நிறுவனத்துக்குத் திரும்பியபோது அந்த இளைஞர் அவருடைய அலுவலக அறைக்கு அருகே உலவிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவ்விளைஞரை அழைத்து கண்டிப்பான குரலில், "நான் உங்களைத் தேர்வு செய்யவில்லை என்பதைக் கூறவில்லையா? பின் ஏன் நீங்கள் இன்னும் இங்கேயே இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர், "மன்னியுங்கள் ஐயா! என்னைப் பணியில் அமர்த்தவேண்டும் என்று மீண்டும் கேட்பதற்காக நான் இங்கு நிற்கவில்லை. என் பயணச் செலவுக்காகப் பணம் கொடுத்தபோது, அலுவலகக் கணக்கர் தவறுதலாக அதிகத் தொகையைக் கொடுத்துவிட்டார். அதை திருப்பித் தருவதற்காகக் காத்திருக்கிறேன்" என்று பதில் கூறினார்.
சர். சி.வி. ராமன் அவ்விளைஞரின் நேர்மையையும் கண்ணியத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர், "தம்பி! நல்லது. கவலைப்படாதே. நான் உன்னை எனது ஆய்வுக்கூடத்தில் சோதனையாளர் பணியில் அமர்த்திக்கொள்கிறேன். உனக்கு உண்மையின் மீதிருக்கும் அன்பும், நேர்மையும், உனது ஆய்வில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் மிகச்சிறந்த மூலதனந்தான்" என்று கூறினார்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
முன்திய இதழ்களில் வெளியான சின்னக்கதைகள் நம்பிக்கை நலம் தரும் கடமையைச் செய்வதே யோகம் உணவிலிருந்து எண்ணம், சொல், செயல்.... தெனாலிராமனின் சமயோசிதம் ஒரு தாயின் பங்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அப்போதைக்கு இப்போதே எடுத்து வைத்தேன்! பரமேஸ்வரன் வைத்த சோதனை |