ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயம்
ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். நெய்வேலியிலிருந்து பேருந்துகள் உண்டு. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் எட்டுத்தலங்கள் மிக முக்கியமானவை. அவை ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம், வேங்கடாத்ரி, அஹோபிலம், நரநாராயணம், சாளகிராமகிரி, புருஷோத்தமம், தோதாகிரி என்பனவாகும். இங்கெல்லாம் பூஜை செய்பவர் பிரம்மா. துதி பாடுபவர் சரஸ்வதி.

ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் பெருமாள் பூவராகசுவாமியாக எழுந்தருளியுள்ளார். தாயார் அம்புஜவல்லி. தீர்த்தம் நித்யபுஷ்கரணி. தலவிருட்சம் அசுவத்த மரம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள் உள்ளிட்டோர் பாசுரங்களைப் பாடியுள்ளனர்.

பிரம்மா, ஸ்வாயம்புவ மனுவிடம் சகல உயிர் வர்க்கங்களையும் படைக்குமாறு பணித்தார். அதற்கு அவர், உயிர்கள் வாழ ஏற்றதான பூமி கடலில் மூழ்கிக்கிடப்பதால் அதை மேலே கொண்டுவரும்படிக் கேட்க பிரம்மா நாராயணனைத் தியானம் செய்தார். அப்போது பிரம்மாவின் மூக்கின் வழியே கட்டைவிரல் அளவுள்ள பன்றிக்குட்டி (வராகம்) ஒன்று வெளியே வந்தது. பின்னர் அது வானளவு விஸ்வரூபம் எடுத்துநின்றது. தேவர்கள் வராஹப் பெருமானைத் தொழுது பூமியை மீட்டுத்தர வேண்ட, பகவானும் தன் மோப்ப சக்தியினால் கடலினுள் மூழ்கி, தன் கோரைப் பற்களினால் பூமியைத் தூக்க முயன்றபோது, அசுரர் தலைவனான ஹிரண்யாசுரன் பகவானை எதிர்த்தான். அவனை எளிதில் கொன்று தன் கோரைப் பற்களில் பகவான் பூமியை ஏந்தி நின்றபோது தேவர்களும், ரிஷிகளும் அவரை யக்ஞவராகனாக வழிபட்டு, பூமியில் உரிய இடத்தில் உயிர்கள் வாழ நிலைபெறச் செய்யுமாறு வேண்டினர். வேண்டுதலை நிறைவேற்றியவுடன் பெருமாள் வைகுண்டம் திரும்ப எண்ணியபோது, பூமிதேவி பெருமாள் எப்போதும் தன்னுடன் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் பூமி மேலே கொண்டுவரப்பட்ட இடமான ஸ்ரீமுஷ்ணத்தில் வாசம் செய்யத் துவங்கினார். பூமா தேவியோடு வசிப்பதால் இங்கே பெருமாளுக்கு பூவராகன் என்று பெயர்.

பெருமாளது திருமேனியின் வியர்வையே இங்கு 'நித்ய புஷ்கரணி' என்னும் தீர்த்தமாக விளங்குகிறது. கங்கை முதலிய 16 புண்ணியநதிகள் பிரியத்துடன் இங்கு வந்து வசிப்பதாகப் புராணம் கூறுகிறது. நதிகளில் கங்கை எவ்வாறு புனிதமானதோ அவ்வாறே தலத்தில் ஸ்ரீமுஷ்ணமும் புனிதமானது என 'வராக புராணம்' சொல்கிறது. பெருமாளின் கண்களிலிருந்து விழுந்த இரு சொட்டுத் தீர்த்தங்களில் ஒன்று திருத்துழாயாகவும் மற்றொன்று அசுவத்த மரமாகவும் தோன்றின. பூமி கடலுக்குள் இருந்து மேலே வந்ததும் முதலில் தோன்றிய மரமாதலால் இதனை ஆதிவிருட்சம் என்கின்றனர். மரங்களில் நான் அசுவத்தமாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்வதிலிருந்து இதன் பெருமையை நாம் உணரலாம். பொதுவாக அரச மரத்திற்கு முற்பகலில் மட்டுமே பூஜை, வழிபாடுகள் நடக்கும். ஆனால் இங்குள்ள அரசமரத்திற்கு எந்த நாளிலும், எந்த நேரத்திலும் பூஜை செய்து வழிபடலாம் என்ற நியதி உண்டு. காரணம், பெருமாள் இங்கே எழுந்தருளியிருப்பதுதான். இம்மரத்தினடியில் அஷ்டாக்ஷர மந்திரம் ஜபித்து துளசியால் பெருமாளை அர்ச்சிக்க லௌகீக நற்பலன்களுடன் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம். நித்யபுஷ்கரணிக் கரையில் அரச மரத்தடியில் வராகப் பெருமான் தேவர்களுக்கு வேள்வியைச் செய்வித்தும், வேத அத்யயனம் செய்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே பகவானுக்கு 'யக்ஞவராகன்' என்ற பெயரும் உண்டு.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள் பழமையானது இத்திருக்கோயில். நாயக்க மன்னர்கள் உள்ளிட்ட பல மன்னர்கள் திருப்பணி செய்த விவரங்கள் கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. கூடவே கோவிலுக்கு தானமாகவும் கிராமங்களை வழங்கியவர்கள் பெயர்களும் கல்வெட்டுக்களிலும், செப்புப் பட்டயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

பூவராக சுவாமி மேற்குநோக்கி நின்ற திருக்கோலத்தில் முகம் தெற்குநோக்கியபடி சேவை சாதிக்கிறார். அசுரர்களை வென்ற ஆனந்த உணர்ச்சியுடன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, முகத்தை நிமிர்த்தி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். மேலே உள்ள சிதாநந்த விமானம் பகவத் சங்கல்பத்தால் தோன்றியது. மூலவர் சாளக்ராம மூர்த்தி. பிரதான மூர்த்தி பிரகாரத்திற்கு அடுத்த பிரகாரத்தில் அம்புஜவல்லித் தாயார் சன்னிதி அமைந்துள்ளது. அதன் முன்பு ஊஞ்சல் உற்சவ மண்டபம். கருவறைக்கு முன் மேற்புறம் அர்த்தமண்டபத்தில் உற்சவர் யக்ஞவராக மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேற்கு நோக்கிக் காட்சிதருகிறார். உடன் ஆதிவராக மூர்த்தி, கண்ணபெருமான் எழுந்தருளியுள்ளனர். மேற்குக் கோபுர வாசலின் உட்புறத்தில் சீனிவாசப் பெருமாள் சன்னிதி, வடமேற்கு மூலையில் ஆண்டாள் சன்னிதி, உடையவர் சன்னிதி உள்ளன. மகாமண்டபத்தில் போக நாராயணர் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகிறார்.

வடபுறம் வேணுகோபாலன் சன்னிதி, விஷ்வக்சேனர் சன்னிதி, வடகிழக்குப் பகுதியில் வேதாந்த தேசிகன், திருமலை மன்னர், மணவாள முனிகள் உள்ளிட்ட பலரது சன்னிதிகள் உள்ளன. பிராகாரத்தின் வடபுறம் உள்ள கோபுரத்தின் அருகில் குழந்தையம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. பூவராக சுவாமி சன்னிதி எதிரில் பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் ராமர் தம்பதி சமேதராக லக்ஷ்மணன், பரத, சத்ருக்னருடன் காட்சி தருகிறார். சன்னிதித் தெருவின் மேலக்கோடியில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. நித்யபுஷ்கரணியின் கீழ்க்கரையில் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் சன்னதி உள்ளது. ஹிரண்யாக்ஷனை வதம்செய்த ஸ்ரீ பூவராகப் பெருமான் மகா உக்கிரத்துடன் இருந்ததைக் கண்ட தேவர்கள், அவர் சாந்தமடைய பூதேவியை வேண்ட, பூதேவி பெருமானைப் பிரார்த்திக்க, பெருமானும் பூதேவியுடன் கூடி, சாந்தலக்ஷ்மி வராகனாகக் காட்சி தருகிறார் எனப் புராணம் கூறுகிறது. புருஷசூக்த மண்டபத்தில் பல கண்ணைக் கவரும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் இரு பிரம்மோற்சவ விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மாசிமக பிரம்மோற்சவம் ஏழுநாள் நடைபெறுகிறது. இதில் பெருமாள் கடலுக்கு எழுந்தருளும்போது வழியில் கிராமத்தில் நவாப் அடக்கம் செய்யப்பட்ட மசூதி வழியாக எழுந்தருளி மேள, தாளங்களுடன் மசூதி மேட்டில் பூஜையை ஏற்றுக்கொண்டு, நவாபின் அரண்மனைவரையில் எழுந்தருளுவது சிறப்பு. இரண்டாவது பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று பெருமாள்-தாயார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. சித்திராபௌர்ணமி அன்று நித்யபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாளின் வழிபாடுகளில் வைஷ்ணவர், சைவர், மாத்வர், இஸ்லாமியர் என அனைவரும் பங்குபெறுவது சமய ஒற்றுமைக்கு ஓர் சிறப்பான எடுத்துக்காட்டாகும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com