சாயி வாக்கு சத்தியவாக்கு
* ஆன்மீக அறிவு நம்மை நற்கருமங்களில் ஈடுபடவும், அதன்மூலம் மனத்தூய்மை பெறவும் உதவுகிறது. ஆனால் அதுமட்டும் போதாது. இதயமும் தூய்மையாக இருக்கவேண்டும். இதயம் தூய்மையாக இருந்தால்தான் மனமும், புத்தியும் தூய்மையாகத் திகழும்.

* ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நமக்குத் தந்துள்ள அரிய பரிசு. அதை மிகச்சிறப்பாக, நீடித்த பலன்தரும் வகையில் பயன்படுத்துங்கள்.

* தீய குணங்கள் உள்ளே நுழைந்து இதயத்தைக் களங்கப்படுத்த வழிவிடக் கூடாது. மரத்தைச்சுற்றி ஒரு சிறியகொடியைப் படர அனுமதித்தால், அது மரத்தையே முழுதாக மூடிவிடும். ஆகவே காமம், கோபம், பேராசை, மோகம் போன்ற கொடிகள் நம்மில் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பொறுமையின்மூலம் கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். அன்பின்மூலம் வெறுப்பை வெற்றி கொள்ளுங்கள்.

* பொறுப்பை உதறிவிட்டு உரிமையைக் கோருவது தவறு. பொறுப்பை முறையாக நிறைவேற்றும்போது, உரிமை தானாக வருகிறது.

* எண்ணங்கள் தூய்மையாகவும், உயர்ந்தனவாகவும் இருக்கும்போது மனிதனின் வாழ்க்கை மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

* நீங்கள் எந்த அளவுக்குக் கடவுளுக்காக ஏங்குகிறீர்களோ, அதைப்போல ஆயிரம் மடங்கு கடவுளும் உங்களுக்காக ஏங்குகிறார்.

* என் தேவை முதலில், பிறர் தேவை பின்னர் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்வது சேவையல்ல, தந்திரம்.

* ஒவ்வொருவரையும் இறை வடிவமாகவே கருதிச் சேவை செய்யுங்கள். அது உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

* சேவையின் வாயிலாகப் பெறும் ஆனந்தத்தை வேறெந்தச் செயலினாலும் உங்களால் அடைய முடியாது.

* பாரத கலாசாரம் மிகத் தூய்மையானது, பவித்ரமானது, சுயநலமற்றது. மாணவர்கள் இருபாலரும் இந்தப் புனித கலாசாரத்தைப் புரிந்துகொண்டு பின்பற்றினால்தான் நாடு வளம்பெறும். நல்ல ஆண், பெண்களைக் கொண்ட தேசம் முன்னேறியே தீரும்.

* உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். தாயை மறவாதீர்கள். தாய், தந்தை, குரு மற்றும் இறைவன் மேல் அன்பு செலுத்துங்கள். தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவைக் காட்டுகிறார், குரு கடவுளைக் காணும் வழியைக் காட்டுகிறார்.

* கட்டுப்பாடான பேச்சு, உண்மையற்ற வீணான பேச்சைத் தவிர்த்தல், பிறரைத் தாக்கிப் பேசாதிருத்தல் ஆகியவை மிகவும் போற்றத்தக்க குணங்கள்.

* மனிதனுக்குத் தியாகம் மிக முக்கியம். அதுவே அமரத்துவத்திற்கு முதற்படி.

* 'Happiness is union with God'. பெற்றோர் மதிக்கப்படும்போது மட்டுமே கடவுள் மகிழ்கிறார். எனது மகிழ்ச்சி, நீங்கள் சந்தோஷமாக இருப்பதிலும், உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாக இருக்க வைப்பதிலுமே அடங்கி இருக்கிறது.

* பெற்றோரை எவர் மதித்து மகிழ்விக்கின்றனரோ, அவர்கள் மீது இறைவன் கருணையைப் பொழிகின்றார்.

* நிரந்தரமான இறைவனின் பெயரைச் சொல்வதன் மூலம் நிரந்தரமற்ற இந்த உலகின் தொல்லைகளிலிருந்து விடுபடுங்கள்.

- பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

மதுரபாரதி

© TamilOnline.com