தமிழ் இலக்கியப் புலமையாளரான பேரா. வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் அறுவரை உயர்த்திச் சொல்லுவார்.
சி.வை. தாமோதரம் பிள்ளை, வி. கனகசபைப்பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், இராஜமய்யர், பெ. சுந்தரம் பிள்ளை ஆகியோரே அவர்கள்.
இவ்வறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப் பண்பிலும் அறிவுத்துறையிலும் திளைத்துத் தம் மொழியாகிய தமிழ் மொழிக்கு ஒவ்வொரு வகையிலே வளம் சேர்த்தவர்கள். தமிழின் சிந்தனை முறையிலும் ஆய்வு முறையிலும் புதிய புதிய சாத்தியப்பாடுகளின் ஊடுபாவுக்கும், செழுமைக்கும் காரணமானவர்கள். இன்னொரு விதத்தில் தமிழாராய்ச்சியின் அறிவு நிலைப்பட்ட ஆய்வுப் பெருக்கத் துக்கும், அதன் திசைப்படுத்தலுக்கும் காரணமாக இருந்தவர்கள். அத்தகையவர் களுள் ஒருவரான பெ. சுந்தரம் பிள்ளை குறித்து இக்கட்டுரை கவனத்தைக் குவிக்கிறது.
சுந்தரம் பிள்ளை 1855 ஏப்ரல் 4-ம் தேதியன்று ஆலப்புழையில் பிறந்தார். அங்கே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றபின் திருவனந்தபுரம் வந்து அங்குள்ள உயர்தரப் பள்ளியில் படித்தார். 1876-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உடன் பயிலும் மாணவர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப் பாராம். ஆனால் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டிருப்பார். அறிவுத் தேடலிலும் ஆராய்ச்சிப் பாதையிலும் அவர் மனம் ஈடுபட்டது. தொடர்ந்த தேடல் அவருக்குள் இயங்கிய புலமையாளரை வெளிப்படுத்தியது. 1880-ம் ஆண்டில் தத்துவத்துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார். 1882-85 ஆண்டுகளில் சட்டக்கல்வி பயின்றார்.
1876-ம் ஆண்டில் தான் பயின்ற திருவனந்தபுரம் அரசர் கல்லூரியிலேயே ஆசிரியர் பணி ஆற்றும் வாய்ப்பு சுந்தரம் பிள்ளைக்குக் கிட்டியது. அங்கு வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பித்து வந்தார். மாணவர் விரும்பிய ஆசிரியராக விளங்கினார். தாம் மறுநாள் கற்பிக்கும் பாடங்களை முதல் நாளிலேயே நன்கு படித்து ஆயத்தம் செய்து கொண்டுதான் வகுப்பறைக்குச் செல்வார். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே சந்தித்துப் படிக்க ஊக்குவிப்பார். அவர்தம் ஐயங்களை மகிழ்வோடு ஏற்று நீக்குவார்.
சுந்தரம்பிள்ளையின் பெயர் திருவனந்த புரம் எங்கும் நன்முறையில் பரவலாயிற்று. நல்லாசிரியப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இவரை மாணவர்கள் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இவரோ தொடர்ந்து கற்றல், தேடல், ஆய்வு சார்ந்து செயல்படும் ஒருவராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். சமூக மட்டங்களில் சுந்தரம்பிள்ளைக்குத் தனியான மவுசு இருந்தது. மதிப்பும் மரியாதையும் கற்றோர் மட்டங்களிலும் நிலைத்தது. தமிழ்ப் பணியில் தன்னைக் கரைத்து மேலெழுந்தார்.
திருநெல்வேலியில் இருந்த பொழுது எழுதத்தொடங்கிய மனோன்மணீயம் (நாடகம்), நூற்றொகை விளக்கம் ஆகிய வற்றைத் திருவனந்தபுரத்தில் செம்மையாக எழுதி முடித்தார். திருவிதாங்கூர்ப் பகுதி களில் இருக்கும் பழைய திருக்கோயில்களில் பாழடைந்து பாதுகாப்பற்றுக் கிடந்த கல்வெட்டுக்களைத் தம்பொருட் செலவிலேயே சென்று ஆராய்ச்சி செய்தார்.
இவ்வாறு சுந்தரம்பிள்ளை பணியாற்றி வரும் பொழுது 1882-ம் ஆண்டிறுதியில் மேதகு விசாகம் திருநாள் மாமன்னர் இவர்தம் கல்விப் பெருமையை நன்குணர்ந்து, தன் அரண்மனையிலேயே 'பிறவகை சிராஸ்தர்' (Commissioner of Separate Revenue) எனும் உயர் பதிவியை வழங்கி மகிழ்ந்தார். இப்பதவி 'திவான்' பதவிக்கான படிக்கட்டாகும். 1882 முதல் 1885 வரை இப்பொறுப்பில் தன் இயல்புக்கு மாறாய்ப் பணியாற்றி வந்தார். அப்போது சட்டக்கல்லூரியில் பயின்று வந்தார். அதுவரை அத்துறைப் பட்டம் பெறவில்லை.
அப்போது அரசர் கல்லூரித் தலைவர் திரு. ராசு, தம் தாய்நாடு செல்ல நேர்ந்த பொழுது டாக்டர் ஹார்வி வகித்து வந்த தத்துவப் பேராசிரியர் பணிக்கு சுந்தரம்பிள்ளையே பொருத்தமானவர் என்று முடிவு செய்து 1885-ல் வழங்கிச் சென்றார். சுந்தரம்பிள்ளை அப்பதவியைப் பெற்ற நாள் முதல் இறுதிக் காலம் வரையில் அதிலேயே நிலைத்து விட்டார். வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல், மொழியியல், தத்துவம், இலக்கியம், கலை என பல்துறை அறிவுசார் புலங்களுடன் ஏற்பட்ட ஊடாட்டம் இவரது புலமைப் பரிமாணம் பலவாறு சிறப்புற்று விளங்கக் காரணமாயிற்று. இவரது தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள 'ராயல் ஏஷியாடிக் கழகம்' தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக (M.R.A.S) இவரை நியமித்துப் பெருமைப்படுத்தியது. பின்னர் 'லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம்' F.R.H.S என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைக் கவனத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு 'ராவ்பகதூர்' என்ற பட்டத்தை வழங்கியது.
இத்தகைய சிறப்புகள் ஒருபுறமிருக்க இவர் இயற்றிய காலக்கணிப்பு, இரணகீர்த்தியின் நடுகல்லும் வேணாட்டு வேந்தர்களின் காலக்கணிப்பும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இவர் கல்வியின் ஆராய்ச்சியின் பயன்கள் அன்றோ!
சுந்தரம் பிள்ளையின் 'மனோன்மணீயம்' நாடக நூல் தமிழைப் புதியதொரு துறைக்குத் திசை திருப்பிவிட்டது. குறிப்பாக தமிழ் திராவிட மீட்பு வாதங்களில் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவராக சுந்தரம் பிள்ளை மேலெழுகிறார். மனோன்மணீயம் நூலில் இவர் எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் இதற்கு சான்றாகும்.
'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம் உற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து, உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே'
இப்பாடல் பல்வேறு துறைகளில் அவர் பெற்றிருந்த கூர்ந்த அறிவினைப் பறைசாற்றி நிற்கிறது. புவியியல், தத்துவவியல், மொழியியல், வரலாற்றியல், தொல்லியல் ஆகிய பல்துறைசார் அறிஞர் என்பதை அவர் இயற்றிய இந்தப் பாடல் சுட்டுகிறது.
பழைய தமிழ் இலக்கிய நூல்களிலே கடவுள் வணக்கம் அல்லது கடவுள் வாழ்த்து இன்றியமையாத ஓர் உறுப்பாக இருந்தது. இதனைத் தளமாகக் கொண்டே கடவுள் வாழ்த்து இலக்கிய மரபில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. தண்டியலங்காரம் பெரும் காப்பியத்தின் இலக்கணங்களைச் சொல்லுமிடத்து,
'வாழ்த்து வணக்கம் உருபொருளிவற்றினொன் றேற்புடைத்தாகி முன்வரவியன்று'
அமையும் என்கிறது. அதாவது வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக்கும் பொருளுணர்த்தல் என்னும் மூன்றினுள் ஏற்புடையவொன்று முதலில் வரவேண்டும் என விதிக்கிறது.
சான்றோர் செய்யுள்களை ஆராயும் பொழுது அவற்றைப் பாடிய புலவர்கள் பாடத் தொடங்குமுன் கடவுளை வழிபட்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள. இருப்பினும் காலந்தோறும் கடவுள் வாழ்ந்து மாற்றத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இலக்கிய வழி வரலாறு நின்று பார்க்கும் பொழுது இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த இலக்கிய ஓட்டத்தில் மாற்றமடைந்து வரும் கடவுள் வாழ்த்துக்கு முற்றிலும் மாறான புதிய திருப்பத்தை உண்டாக்கியவருள் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதன்மையானவர்.
தாம் எழுதிய மனோன்மணீயம் எனும் நாடகக் காப்பியத்தில் கடவுள் வாழ்த்தின் முக்கியமான பகுதியாகத் தமிழ்க் கடவுள் வாழ்த்துக் கூறினார். இது கடவுள் வாழ்த்தில் ஒரு பெரும் மாற்றத்தையே உருவாக்கி விட்டது. இப்பாடல்களில் இலக்கிய நயம் ஒருபுறமிருக்க இவற்றில் கூறப்படும் கருத்துகள், அக்காலத்து தேசிய உணர்வின் ஊற்றுகளாக வெளிப்பட்டது. தமிழ் திராவிட மீட்புக்கான கருத்துநிலைத் தளத்தை வழங்கியது.
பழைய கடவுள் வாழ்த்து முறை மாற்றத்துக்கு உள்ளாகி வந்த வேளையில் சுந்தரம் பிள்ளை நிகழ்த்திய புதுமை தமிழைத் தெய்வமாக்கி நூன்முகத்தில் அதற்கு வாழ்த்துப் பாடியது ஆகும். இது புதுமை மட்டுமல்ல, புரட்சியும் கூட.
1893-களில் மனோன்மணீயம் நாடக நூல் கல்லூரிகளில் முதன்முதலாகப் பாடநூலாக வைக்கப்பட்டது. அதைவிட 'நீராரும் கடலுடுத்த' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் இசைக்க வேண்டுமெனத் தமிழக அரசு பொதுத் துறையின் மூலம் 1970-களில் ஆணை பிறப்பித்து இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருவதையும் காணலாம். சுந்தரம் பிள்ளை காலத்துக்குப் பின்னர் தமிழ்மொழி சார்ந்த இயக்கங்களுக்கு உந்து சக்தியாகவும் திராவிட அரசியல் வேரூன்ற நீராகவும் தமிழர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் தமிழ்க் கடவுள் வாழ்ந்து அமைந்தது. 'அமர் சோனார் பங்களா' என்ற தாகூரின் வங்க தேசிய கீதம் போல் தமிழ் மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தேசியப்பாடல் சுந்தரம்பிள்ளையின் பாடல் தான்.
சுந்தரம்பிள்ளை ஒரு புதிய முறை ஆய்வு முயற்சியில் ஈடுபட்டு ஆய்வு நெறிமுறைகளை உருவாக்கும் வகையிலும் செயற்பட்டார். இங்கு 'தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம்' என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இது 1895-ல் நூல் வடிவம் பெற்று முதற் பதிப்பாக வெளிவந்தது. 1909 மார்ச் 10ம் நாள் இந்நூல் மறுஅச்சு கண்டது.
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் சமுதாய அணுகு முறை, முலப்படிவ அணுகுமுறை இருந்தமை தெளிவாகிறது என பின்வந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் ஆய்வு நுட்பங்கள், அணுகுமுறைகள் இலக்கிய ஆய்வுப் பரப்பில் புதிய தன்மைகளை வெளிப்படுத்தியது எனலாம். பின்னர் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'கால ஆராய்ச்சி' அறிவு நிலைப்பட்ட பல்துறைச் சங்கம ஆய்வுச் செல்நெறியாகப் பரிணமிப்பதற்குக் கூடச் சுந்தரம்பிள்ளையின் ஆராய்ச்சி மனப் பான்மை, ஆராய்ச்சி நோக்கு ஓர் அடிப் படைக் கருத்தியல் தளத்தை வழங்கியது.
இதனாலேயே அறிஞர் கா.சு. பிள்ளை "மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை இக்காலத் தமிழ் ஆராய்ச்சிக்கு அடிப்படை கோலியவர். தமிழும் தமிழரும் ஆரிய வகுப்பு முறையுட்படாத தனிப் பெருமை உடைமையை நிலைநாட்டித் தமிழ்ப் புலவர் கண்ணைத் திறந்தவர். தமிழாராய்ச்சிக் குறைபாடுகளுடைய ஐரோப்பிய-ஆரியப் புலவருடைய தப்புக் கொள்கைகளைக் கண்டொதுக்கித் தமிழ் வரலாற்றின் உண்மையை விளக்கும் பொருட்டு, இவரியற்றிய நூல் திருஞானசம்பந்தர் கால நிச்சயமென்னும் ஆங்கிலக் கட்டுரையாகும்" என்று கா.சு. பிள்ளை தனது இலக்கிய வரலாறு இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்வது நோக்கத்தக்கது.
1856-ல் கால்டுவெல் பாதிரியாரின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல் வெளிவந்தது. இந்நூல் 1850 முதல் நடைபெற்று வரும் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியின் செல்நெறிப் போக்கில் மிகுந்த செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 'திராவிடம்' சார்ந்த சிந்தனைப்பள்ளி அனைத்தையும் ஊடுருவித் தாக்கம் செலுத்தும் கருத்துநிலைப் பாய்ச்சல் வேரூன்றக் காரணமாயிற்று. இதன் தாக்கத் துக்கு சுந்தரம் பிள்ளையும் உட்பட்டார். குறிப்பாக திராவிட மொழிக்குடும்பத்தைப் பற்றியும் அதன் தொன்மையைப் பற்றியும் அது வட மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டிருப்பதைப் பற்றியும் கால்டுவெல் கூறியவையே சுந்தரம்பிள்ளையின் நோக்குக்கும் சிந்தனைக்கும் மூலமாயின. அத்துடன், பாதிரியாரின் மொழியியற் கருத்துக்களுடன் சமூகக் கருத்துக்கள் சிலவும் கூட அவரது கண்ணோட்டத்தில் தாக்கம் செலுத்தியது, பிராம்மண எதிர்ப்பு, ஆரிய-திராவிடப் போராட்டம், திராவிடத் தேசியம், சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற வற்றுக்கான, தர்க்கப் பின்புலம், கருத்தியல் நியாயப்பாடு என்பவற்றையும் பெற்றுக் கொண்டார்.
கால்டுவெல் தனது நூலில் வரும் திராவிட இலக்கியங்களின் பழைமை பற்றிய அதிகாரத்தில் தமிழ் இலக்கியத்தின் வரலாறு எனச் சிலவற்றைக் குறிப் பிட்டுள்ளார். அவ்வாறு எழுதும்பொழுது, அவற்றுள் (தமிழ் இலக்கியங்களுள்) கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எவையும் இல்லை என்றும், திருஞான சம்பந்தர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறு கால்டுவெல் கூறிய கருத்தையே மேனாட்டு அறிஞர்கள் பலர் முடிவான கருத்தாக எடுத்துத் தமது கட்டுரைகளில் எழுதி வந்தார்கள். கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மக்கள் இலக்கிய முடையோராய் இருக்கவில்லை. தமிழ் இலக்கியம் சமஸ்கிருத நூல்களின் திட்ட வட்டமான பிரதியாகவே இருந்தது என்ற கலாநிதி பர்னலின் (Dr. Burnell) கருத்து பிரித்தானியக் கலைக் களஞ்சியக் கட்டுரை ஒன்றினுள் புகுந்துள்ளது.
சுந்தரம்பிள்ளை இப்பிரச்சினையை முக்கியமாகக் கொண்டு இக்கருத்துக்கு தனது வன்மையான எதிர்ப்பினை எடுத்துக் கூறியள்ளார்.
"சம்பந்தர் காலம் சம்பந்தமாக நிலவும் குழப்பத்தை விட அதிகமான ஒரு குழறுபடி நிலையைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதென்பது நிச்சயம். திரு. டெயிலர் (Taylor) கூன் பாண்டியனையும், அவன் கூனை மாற்றிய சம்பந்தனையும் ஏறத்தாழ கி.மு. 1320-க்குரியவர்கள் என்கின்றார். ஆனால் கலாநிதி கால்டுவெல்லோ அவன் கி.பி 1292-ல் ஆட்சி புரிந்தவன் என்கின்றார். இவ்வாறாகச் சம்பந்தரை கிறித்துவுக்கு முன்னும் பின்னும் வரும் 1300வது வருடத்துக்குரியவர் என மிகுந்த அலட்சியத்துடன் கூறக் கூடுவது சாத்திய மாகிறது. இது நிச்சயமாக ஒரு நூதனமாகும். வரலாறு முழுவதிலும் இதைப்போன்ற ஒன்றைக் காண முடியுமோ என என்னால் நிச்சயமாகக் கூறமுடியவில்லை. உண்மையில் தென்னிந்திய வரலாற்றுக் காலவரிசை அறிவு இனித்தான் தொடங்க வேண்டியுள்ளது போலும்."
இவ்வாறு தனது திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் இலக்கியங்களில் காலத்தை நிர்ணயிப்பதில் நடைபெற்ற விவாதத்தில் ஆய்வுத்திறன் முறைமையில் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சுந்தரம் பிள்ளை ஒரு முன்னோடியாகவே உள்ளார்.
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஆய்வுத்திறன் குறித்த பேரா. ந. வேலுசாமி 'மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை' என்னும் நூலில் குறிப்பிடுவது கவனத்துக்குரியது.
1. தருக்க முறையிலான ஒப்பிட்டாய்வு 2. இலக்கிய மரபு தழுவிய நிலையில் பொருள்கோள் காணுதல் 3. ஐயத்திற்கிடமான இடங்களைச் சுட்டுதல் 4. பிறமொழி, பிறநாட்டார் கருத்துகளை ஏற்றல் - மறுத்தல் 5. பல்துறை அறிவாற்றலைப் பயன்படுத்தல்
ஆகிய திறன்களைக் கொண்டிருந்த மையால் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியைப் பிற்காலத்தில் வந்த பலர் செய்த போதிலும் சுந்தரம் பிள்ளையின் கருத்துகளே வலுப்பெற்றன. தமிழ் இலக்கியத்தின் வரலாற்று எழுத்துகள் முழுவதிலும் பிள்ளையின் பங்களிப்பு ஒரு மைல்கல்லாக அமைந்தமை குறிப்பிடத் தக்கது. நாம் இன்னும் விரிவாகச் சுந்தரம் பிள்ளையின் புலமை மரபை ஆராய்ச்சி திறன்களை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
சமுக - அரசியல் தேவைகளுக்கு இலக்கியத்தையும் இலக்கிய வரலாற்றையும் வேண்டி ஒரு முறையியலை நமக்கு அடையாளம் காட்டிய முன்னோடி பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ஏப்பிரல் 26,1897 வரை வாழ்ந்து நாற்பத்திரண்டு குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்த ஆராய்ச்சிப் பெருந்தகை. திராவிட எழுச்சியும், தமிழ் உணர்ச்சியும், தமிழ்ப் பிரக்ஞையும் தொடர்ந்து காலமாற்றங்களுக் கேற்ப மேலெழும் பொழுது, அவை புதிய பொருள்கோடல் சார்ந்து மையம் கொள்ளும் பொழுது, 'பேராசிரியர் சுந்தரம் பிள்ளை' ஒரு மைல்கல்லாகவே இருப்பார்.
தெ. மதுசுதனன் |