அத்தியாயம் 01: நாடோடிப் பெண்
உறையூர் சோழமாளிகையின் தனியறை ஒன்றில் பாண்டிய இளவரசன் கோச்சடையான் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். படுத்தால் உடனே உறக்கம் வந்துவிடும். அத்தனை அசதி. நெடுந்தூரம் பயணம் செய்திருந்த களைப்பு அவன் கண்களின் மீது கொலுவிருந்தது.
மனம் 'இன்னும் ஏன் அந்தப் பெண் வரவில்லை?' என்கிற கேள்வியை எழுப்பியவாறே இருந்தது. 'அவள் பிடிவாதம் செல்லுபடியாகாது. சாளுக்கிய மன்னன் எப்படியும் மிரட்டி அவளை நிச்சயம் அனுப்பிவைப்பான்...'
கோச்சடையானின் நம்பிக்கை வீண் போகவில்லை.
அறைக்கதவு 'டொக்...டொக்' எனத் தட்டப்பட்டது.
"திறந்துதான் இருக்கிறது... உள்ளே வரலாம்..."
ஒரு காவலன் நாலைந்து பெண்களுடன் உள்ளே வந்தான்.
"ஏய், இதென்ன... இத்தனை பெண்கள் எதற்கு?"
"இளைய பாண்டியர் இவர்களில் யாரை வேண்டுமாயினும் தெரிவு செய்யலாம். அல்லது இத்தனை பேருமே வேண்டுமானாலும் தங்களுக்கு பணிவிடைகள் செய்ய இன்றிரவு இங்கு தங்கலாம். ஒவ்வொரு பெண்ணுமே நல்ல அழகி. ஆடற்கலையில் வல்லமை பெற்ற இவர்கள் தங்களை மகிழ்விக்க மனப்பூர்வமான சம்மதத்துடன் வந்துள்ளனர். இந்த ஒருத்தியைத் தவிர..." என்று ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டினான் காவலன்.
கோச்சடையான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்கினான். நாடோடிப் பெண் போலிருந்தாள். அழுத கண்ணீரைத் துடைத்து அவசர ஒப்பனை செய்திருந்தார்கள். அவள் முகத்தில் கோபமும் சோகமும் அப்பிக்கிடந்தன. நீண்ட அழுகையால் கொஞ்சம் வீக்கமும் புலப்பட்டது. அத்தனையும் சேர்ந்து இறுகிக்கிடந்த அவள் முகத்தில் என்ன அழகைக் கண்டானோ, தெரியவில்லை. "நான் இவளைமட்டுமே இங்கு அனுப்பச் சொன்னேன். இவள் இங்கு இருக்கட்டும். மற்றவர்களை அழைத்துக்கொண்டு நீ உடனே வெளியேறு..." என்றான்.
"பிரபு இந்த அழுமூஞ்சி நிச்சயம் தங்களை மகிழ்விக்க உதவ மாட்டாள் என்பது சாளுக்கிய வேந்தரின் கணிப்பு. அதனால்தான் இந்த ஏற்பாடு. இவளுடன் வேறு இரண்டொரு பெண்களும் தங்க அனுமதித்தால், இந்த இரவு தங்களுக்கு நல்லிரவாக அமையும்; இது சாளுக்கிய மன்னரின் கட்டளையும் கூட..."
"அடேய், விரும்பி வருகிற பெண்களை நான் தொடுவதில்லை. விரும்ப மறுக்கிற புதுமலர்தான் எனக்கு வேண்டும். அவளை விரும்பவைக்கும் வித்தை எனக்குத் தெரியும். இவளை இங்கு தனியே விடமறுத்தால், நீ அத்தனை பெண்களையும் அழைத்துக்கொண்டு செல். என்னை சந்தோஷப்படுத்த சாளுக்கிய வேந்தன் ஒன்றும் அத்தனை சங்கடப்பட வேண்டாம் என்று போய்ச்சொல்..."
இளைய பாண்டியனின் பிடிவாதம் அரசியல் சிக்கலாக மாறிவிடாதிருக்க எண்ணிய அக்காவலன், வலுக்கட்டாயமாக அந்த நாடோடிப் பெண்ணை அங்கு தனியே விட்டுவிட்டு, மீதிப் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியேறினான். தன்னந்தனியே நின்ற அவள் பார்வையில் மருட்சி கூடிற்று. கூடவந்த பெண்கள் சிலருடன் அவள் எவ்வளவோ ஒட்டி உரசியும், அவர்கள் உதறி ஒதுங்கிச் சரேலென வெளியேறியிருந்தனர்.
"பெண்ணே; மாலையில் உன்னைச் சந்தித்தபோது, உன் பெயரைக் கேட்டேன்... என்னவோ சொன்னாயே... ம்... பதுமகோமளை. மிக வித்தியாசமான பெயர். அரசவையில் என் முன்னால் ஆட மறுத்தாய். அடி, உதைகள் பட்டும் உன் பிடிவாதம் தளரவில்லை. உன் வீரம், மனவுறுதி எனக்குப் பிடித்திருந்தது. சாளுக்கிய வேந்தனின் காட்டுமிராண்டித்தனம் கண்டு நீ கலங்கவேண்டாம். அமைதியாக இங்கே வந்து என்னருகே அமர்ந்து கொள். உன்னோடு நான் சிறிது பேசவிரும்புகிறேன்...." என்று கூறிய கோச்சடையான் இடக்கரம் நீட்டி அவளைத் தன்னருகே அழைத்தான்.
"விரும்புவாய், விரும்புவாய். நீதான் விரும்ப மறுக்கிற புதுமலரை மசியவைக்கும் வசிய வித்தை அறிந்தவனாயிற்றே!" என்ற அப்பெண், சற்றும் எதிர்பாராத விதமாகக் குனிந்து, தன் பாவாடை மடிப்பினுள் செருகி மறைத்து வைத்திருந்த, சிறிய பூந்தாழை மடலை ஒத்த கத்தியை எடுத்து வீசினாள். அது சரியாக, இளைய பாண்டியனின் இடது புஜத்தில் போய்ப் பதிந்து நின்றது.
குபுகுபுக்கும் குருதியைப் பொருட்படுத்தாத கோச்சடையான், "அவசரப்பட்டுவிட்டாய் பதுமகோமளை. நான் காமுகனல்ல. நான் மதுரையிலிருந்து அவசரமாகப் புறப்பட்டு உறையூர் வந்தது, அரசியல் காரணங்களுக்காகத்தானே தவிர, உன் ஆடல் கண்டு மகிழவல்ல. இன்று காலைதான் நீ அவனிடம் அகப்பட்டிருக்கிறாய். அதற்குள் அவன் உன்னை இழுத்துவந்து அரசவையில் என்முன் நடனமாடச் சொன்னான். நீ மறுக்கவே, அடி, உதை எனத் துன்புறுத்தல் நிகழ்ந்தது. அதைத் தடுக்கவே சாளுக்கிய வேந்தனிடம், "இவள்தான் இன்றிரவு எனக்கு விருந்து. இங்கு ஆட மறுப்பவள், அங்கு தனியறையில் ஆடுவாள். அது போதும் எனக்கு. அவளை ஆடவைக்கும் கலை எனக்குத் தெரியும்" என்றேன். பாம்புக்கறி உண்ணும் ஊரில், நடுக்கண்டம் நமக்கு என்று போவது ஒருவகை உடன்பாடு என்பார்கள். அது போன்றதுதான் இதுவும். எதிரியின் புத்தியறிந்து பேசி, அவன் தோளில் கை போடுவது நட்புக்காகவல்ல; நசுக்க நேரம் பார்ப்பதற்காக. இதையெல்லாம் அறியாத சிறுபெண் நீ என்பதை நிரூபித்துவிட்டாய்..." என்றான்.
"அரசியல் அறியாதவளல்ல நான். ஆயினும் உங்கள் பேச்சு புரியவில்லை; புதிராகவும் உள்ளது. முன்பின் அறியாத என்மீது உங்களுக்கென்ன அப்படியொரு தனி அக்கறை.... நான் யாரென்பது உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும்" என்றான், கோச்சடையான்.
பதுமகோமளை முகத்தில் ஒரு 'திடுக்' பரவியது.
"நீ ஒரு நாடோடிப் பெண். உன் உடையைப் பார்த்தாலே தெரிகிறது..." என்று அவன் பேச ஆரம்பித்ததும் அவள் நெஞ்சின் படப்படப்பு அகன்று, நிம்மதி வந்தது. அவன் தொடர்ந்து, "மதுரையிலிருந்து காலையில் நான் ரதத்தில் வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு கூண்டுவண்டி குடைசாய்ந்து கிடந்தது. ஒரு பெரியவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன். இறங்கிச் சென்று விசாரித்தேன். அவர்கள் கழைக்கூத்தாடிகளாம். சாளுக்கிய சேனை அவர்களை வழிமறித்துத் தாக்கியிருக்கிறது. அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்த ஓர் உயர்குடிப்பெண் மாறுவேடத்திலிருந்தாள். அவளைத் தூக்கிச் சென்றுவிட்டனர் சாளுக்கிய வீரர்கள். பெரியவர் இதையெல்லாம் என்னிடம் புலம்பிவிட்டு, உயிரை விட்டுவிட்டார். அந்த இளைஞன் எப்படியும் அப்பெண்ணை மீட்க வேண்டுமென்று துடிப்புடன் புறப்பட்டான். நான் அவனைச் சமாதானம் செய்து, அருகிலுள்ள நென்மெலிக் கோட்டைக்கு அப்பெரியவரைத் தூக்கிச் சென்று அடக்கம் செய்துவிட்டு, அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு இங்கு வந்தேன். உன்னைப் பார்த்தவுடன் எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. உன்னைக் காப்பாற்ற எண்ணினேன். அதனால்தான் உன்னைத் தனிமையில் சந்திக்க விரும்பினேன். வேறு என்ன சொல்லி, சாளுக்கிய மன்னனை உடன்படச் செய்வது? நீயே சொல்."
"உண்மைதான். உங்கள் நல்ல மனசு தெரியாமல் கத்தி வீசி விட்டேன். கழுத்திற்குத்தான் குறி வைத்தேன். 'வா' என்று கையை நீங்கள் உயர்த்தி அசைத்ததால், புஜத்தில் பதிந்தது கத்தி. கடவுள்தான் என்னைக் கொலைகாரியாக்காமல் காப்பாற்றியுள்ளார். இப்போது என்ன செய்வதாக உத்தேசம்? ஒரு கழைக்கூத்தாடிப் பெண்ணைக் காப்பாற்றுவதால் உங்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கப் போகிறது? அதை எப்படிச் செய்யப்போகிறீர்கள்? எதுவானாலும் என் தவற்றை உணர்ந்த நானே உங்கள் புஜத்தில் உள்ள அக்கத்தியைப் பிடுங்கி, ஒரு கட்டுப் போட்டுவிடுகிறேன்" என்று கூறியபடியே அவனருகே நெருங்கி வந்தாள்.
"வேண்டாம். நீ கத்தி வீசியதும் நல்லதுதான். இதை இப்படியே விட்டுவிடு. நீ உடனே தப்பிச்செல். நான் கொஞ்சநேரம் அவகாசம் கொடுத்தபின் சத்தம் போடுவேன். காவலர்கள் உள்ளே வரும்போது, ஈரம் காயாத ரணமும், பொங்கும் குருதியும் காணவேண்டும். என்னைத் தாக்கிவிட்டு நீ தப்பிவிட்டதாக நம்பட்டும். அவர்கள் என்ன தேடினாலும் இந்த இரவில் உன்னைக் கண்டுபிடிக்க முடியாது" என்ற கோச்சடையான், அங்கு சுவரில் இருந்த ஓர் ஓவியத்தை அகற்றி, இரகசிய நிலவறை ஒன்றை அவளுக்குக் சுட்டிக்காட்டினான்.
"பதுமகோமளை! உறையூர், சோழவம்ச ஆளுகையில் இல்லையென்றாலும், பாண்டியர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பல்லவனை விரட்டிக் காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன் இங்கு அத்துமீறி வந்தமர்ந்து எங்களுடன் நட்புப்பேசும் நாடகம் நடத்துகிறான். பேச்சில் இழை பிசகினாலும் நான் தப்ப நேருமென்றே இந்த அறையில் தங்கினேன். இதன் மறுமுனை நகருக்கு வெளியே ஒரு அம்மன் கோயிலில் முடியும். அங்கே என் ஆள் புரவியுடன் காத்திருப்பான். நீ இந்த அடையாளம் காட்டினால் போதும், தப்பிச் சென்றுவிடலாம். நேரே நென்மெலிக் கோட்டைக்குச் செல்" என்ற கோச்சடையான், மீன்முத்திரை பதித்த கணையாழியை அவளிடம் கழற்றி அளித்தான். நிலவறையில் இறங்கியவாறே அதைப் பெற்றுக்கொண்டு, நன்றி ததும்பும் விழிகளுடன் அவனை நோக்கிய பதுமகோமளை, "ஒரு சாதாரண, மாறுவேடத்திலிருந்த நாடோடிப் பெண்ணிடம் இளைய பாண்டியர் காட்டும் கருணை மகத்தானது. என் மானம் காத்த தங்களுக்கு வாழ்நாள் முழுக்க நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" எனத் தழுதழுத்தாள்.
அவள் பேசும்போது, 'மாறுவேடத்திலிருந்த நாடோடிப் பெண்' என்று குறிப்பிட்டதை அவன் கவனிக்கத் தவறியிருந்தான்.
கௌதம நீலாம்பரன் |