கௌதம நீலாம்பரன்
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். ஆரம்பக்கல்வியை அவ்வூரிலேயே பெற்றார். விக்கிரமாதித்தன் கதைகள், பெரிய புராணம் ஆகியவை கைலாசநாதனின் வாசிப்பார்வத்தை வளர்த்தன. விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகம் பார்த்து, ஈர்க்கப்பட்டு, அந்த நாடகக்குழுவில் இணைந்து சில மாதங்கள் நடித்தார். தொடர்ந்து நாடகம் மற்றும் திரைப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. சினிமாவில் நடிக்கும் எண்ணத்துடன் 1965ல் சென்னைக்கு வந்தார். சென்னையில் இவர் சந்தித்தது வறுமையும், கொடுமையுமே. ஹோட்டல் சப்ளையர், பழ விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று வேலைகள் செய்தார். தெருவிலும், நண்பர்களின் அறைகளிலும் இரவில் தங்கினார். நாடகங்களில் சிறுசிறு வேடங்கள் வந்தன. ஓய்வு நேரத்தில் வாடகை நூலகங்களில் நூல்களை எடுத்து வாசித்தார். கல்கி, நா.பா., மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப. சோமு போன்றோரின் நூல்களைத் தொடர்ந்து வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.

நா.பா.வின் கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கௌதம நீலாம்பரன் அவரை நேரில் சந்தித்தார். 'தீபம்' இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் நா.பா. அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை 'புத்தரின் புன்னகை' இவரது 22ம் வயதில், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப்பதிப்பில் வெளியானது. இரண்டாவது கதை 'கீதவெள்ளம்' அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையாகும். வித்தியாசமான கதைக்களனில் கற்பனை கலந்து சிறுகதை ஆக்கியிருந்தார். இது கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த கலைமகளில் வெளியானது. கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது இவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் சிறுகதை, தொடர்கள் எழுதினார். சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பித்தார்.

கி.வா.ஜ.வின் பரிந்துரையில் 'இதயம் பேசுகிறது' இதழில் உதவியாசிரியராகப் பணிசேர்ந்தார். அதில் இவர் எழுதிய 'ஈழவேந்தன் சங்கிலி' என்ற வரலாற்றுத் தொடர் இவருக்குப் பரவலான வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஈழத் தமிழ்மன்னனின் பெருமைபேசும் இந்நாவலுக்கு ஜெமினி ஸ்டுடியோ வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது. தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச்சிமிழ் எனப் பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பத்திரிகை அனுபவமும், எழுத்துத்திறனும் இவரிடமிருந்து சிறந்த படைப்பாக்கங்களை வெளிக்கொணர்ந்தன. சுதந்திர வேங்கை, சோழவேங்கை, மோகினிக் கோட்டை, கோச்சடையான், ரணதீரன், ரஜபுதன இளவரசி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித்திலகம், விஜயநந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், கலிங்கமோகினி, பாண்டியன் உலா, புலிப்பாண்டியன், பூமரப்பாவை, மந்திரயுத்தம், வேங்கைவிஜயம், வீரத்தளபதி மருதநாயகம், சேதுபந்தனம், சாணக்கியரின் காதல், சித்திரப் புன்னகை, சிம்மக்கோட்டை மன்னன், மாடத்து நிலவு போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுப் புதினங்களாகும். 'முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் 'புத்தர்பிரான்' என்ற பெயரில் நூலாக வெளிவந்து, தினத்தந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நினைவுப் பரிசு ஒரு இலட்சம் ரூபாய் வென்றது.

கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசியாவின் வானம்பாடியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா போன்ற சமூக நாவல்களையும் இவர் எழுதியிருக்கிறார். சிறந்த கவிஞரும்கூட. இதயமின்னல், அம்பரம் போன்றவை இவரது கவிதைத் தொகுப்புகள். சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்க நாடக நூல்கள். நலம்தரும் நற்சிந்தனைகள் என்பது சிந்தனைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. இதயநதியை இவரது சுயசரிதை என்றே சொல்லலாம். அருள்மலர்கள், ஞானத்தேனீ, சில ஜன்னல்கள் போன்ற கட்டுரை நூல்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, சமூக உயர்வுக்கான வழிகளைச் சொல்லியுள்ளார். மாயப்பூக்கள், மாயத்தீவு, நெருப்பு மண்டபம், மாயக்கோட்டை எனச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக "சரித்திரமும் சமூகமும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'தமிழ்வாகைச் செம்மல்' விருதளித்துச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'பேராசிரியர் கல்கி இலக்கிய விருது', மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளையின் 'சிறந்த எழுத்தாளர் விருது', லில்லி தெய்வசிகாமணி விருது, பாரதி விருது, சக்தி கிருஷ்ணசாமி விருது, இலக்கியப் பேரொளி விருது, கதைக்கலைச் செம்மல் விருது, கவிதை உறவு வழங்கிய 'தமிழ்மாமணி' விருது எனப் பல கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.

பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியிருந்து தன் படைப்புப் பணிகளை மேற்கொண்டவர். தான்மட்டுமே எழுத்தாளராக இருக்கவேண்டும் என்று நினையாமல் ஆர்வமுள்ள இளந்தலைமுறைப் படைப்பாளிகள் பலரை எழுதத் தூண்டி ஊக்குவித்தவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிவந்த, கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015 அன்று மாரடைப்பால் காலமானார். இந்தக் கட்டுரையே அவருக்கு அஞ்சலியும் ஆகிறது.

அரவிந்த்

© TamilOnline.com