தென்றல் பேசுகிறது...
வேலையில்லாதோர் உதவி கேட்டுவரும் புதிய விண்ணப்பங்களின் (new applications for jobless benefits) எண்ணிக்கை மிகக்குறைந்து 42 ஆண்டுக்காலம் முன்பிருந்த நிலையை எட்டியுள்ளதாக அக்டோபர் 3ம் தேதி முடியும் வாரத்துக்கான தொழிலாளர் துறை புள்ளிவிவரம் சொல்கிறது. புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்வதிலும் தேக்கநிலை இருப்பதாகக் கருதப்படும் இந்தச் சமயத்தில் இப்படி நடப்பதற்கு எந்தக் குறிப்பிடத்தக்க காரணமும் இல்லை என்பதாகவும் அறிக்கை சொல்கிறது. நேரடியாக அவ்வாறு தோன்றினாலும் ஏதோ ஒரு பொருளாதாரச் செயல்பாட்டை அவர்கள் மேற்கொண்டிருப்பதால்தான் அரசின் உதவிகேட்டு வரவில்லை என்பது ஊகிக்கத்தக்கதே. அவ்வாறு வருமானத்துக்கான வாய்ப்புக்களை தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது என்பதும் சற்றே நம்மைச் சுற்றி நடப்பதைப் பார்த்தால் தெரியவரும்.

உதாரணத்துக்கு 'curbside pickup' முறையை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுக்கு App-ல் ஆர்டர் கொடுத்துவிட்டுப் பின்னர் தகவல் வந்ததும் போய் கடைவாசலில் பொருளை வாங்கிக்கொண்டு விரைந்து திரும்பலாம். அந்தக் கடைக்குள் உங்களுக்குப் பதிலாக ஒருவர் போய், பொருள்களை வாங்கி, வரிசையில் நின்று பணம் கட்டிவிட்டு, அவற்றைக் கொண்டுவந்து சாலைவரம்பில் (curbside) உங்கள் வருகைக்குக் காத்திருந்ததால் உங்கள் நேரம் மிச்சமானது, நீங்கள் மிச்சப்படுத்திய நேரம் அவருக்கு வருமானம் ஆனது. இது தொழில்நுட்பம் ஏற்படுத்திய வாய்ப்புத்தானே! இதுபோலப் பலவற்றைச் சொல்லலாம். தகவல் தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, வருமானத்துக்கான வாய்ப்புகளைப் பரவலாக்குகிறது, நாட்டின் பொருளாதாரத்தைப் புதிய வழிகளில் முன்னேற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.

*****


வரவுசெலவுத்திட்ட ஒப்பந்தமொன்றை அண்மையில் செனட் அங்கீகரித்ததன் காரணமாக ஒபாமா நிர்வாகத்தின் பெரிய தலைவலி ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. "வாஷிங்டன் நினைத்தால் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவமுடியும் என்பதற்கு இதுவொரு அடையாளம்" என்று இதைக்குறித்து அதிபர் ஒபாமா கூறினார். 2013ல் குடியரசுக்கட்சி தனது ஒப்புதலைத் தராத காரணத்தில் மிகப்பெரிய பொருளாதார அபாயத்துக்கு அரசு உள்ளானதையும், 16 நாட்கள் அரசுசார் அமைப்புகள் கல்லாய்ச் சமைந்து நின்றதையும் இங்கு நினைவுகூர முடியும் அத்தகைய நிலை மீண்டும் வராமல் தவிர்க்கப்பட்டதை எண்ணி அமெரிக்க மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இப்போது ஒபாமா அரசு பொதுநலத் திட்டங்களுக்குச் செலவழிக்கத் தயங்கவேண்டாம். இந்தியாவோ அமெரிக்காவோ, எதிர்க்கட்சி தன்னை அரசின் எதிரியாக எண்ணிக்கொள்வதால் நன்மை விளையாது என்பதைப் புரிந்துகொண்டால் மக்களுக்குத்தான் அதனால் நன்மை.

*****


ஒரு சராசரிக்கும் கீழான மாணவனாகப் பள்ளிக்காலத்தைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு, ஒரு மருத்துவராகப் பரிணமித்து, லட்சக்கணக்கான குழந்தைகளை வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த பேராசிரியர் மதுரம் சந்தோஷம் அவர்களின் நேர்காணல் வாசிக்கத் தெவிட்டாதது. மற்றொரு வகையில் அன்பாலும் ஆதரவாலும் பெண்சிசுக் கொலைகளைத் தடுத்து, அவர்களை வளர்த்துச் சமுதாயத்தில் ஆளாக்க வழிமுறைகளைச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் டாக்டர். சியாமா அவர்களின் நேர்காணலும் நெஞ்சை நெகிழ்த்துவதுதான். சாதனையாளர்கள், சிறுகதைகள், அறிந்தே ஆகவேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்று எல்லா அம்சங்களுடனும் உங்கள் வீட்டு தீபாவளியை வண்ணமயமாக்க வருகிறது தென்றல்.

வாசகர்களுக்கு தீபாவளி மற்றும் நன்றி நவிலல் நாள் வாழ்த்துக்கள்

தென்றல் குழு

நவம்பர் 2015

© TamilOnline.com