அரங்கேற்றம்: மிஹிகா ஸ்ரீதர்
ஆகஸ்ட் 1, 2015 அன்று வெஸ்ட்பரோ, மாசசூஸெட்ஸின் 'நாட்யமணி நாட்டியப்பள்ளி' மாணவி மிஹிகா ஸ்ரீதரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை மியூஸிக் அகாடமியில் நடந்தது. குரு ஸ்ரீதேவி அஜய்திருமலை அவர்களிடம் 9 வருடங்களாக நடனம் இவர் பயின்றுவருகிறார்.

புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அடுத்து 'ஆனந்த நர்த்தனகணபதி' (கம்பீர நாட்டை) என்ற விறுவிறுப்பான தாளக்கட்டுடன் அமைந்த பாடலுக்கு நடனமாடினார். அடுத்து வந்தது ராகமாலிகையில் அமைந்த தோடயமங்களம் (ஜெயஜானகிரமணா). லால்குடி ஜெயராமன் அவர்களின் 'தேவர்முனிவர்' பதவர்ணத்திற்கு அவர் மிகச்சிறப்பாக ஆடினார். குரு ஸ்ரீதேவியின் நடன அமைப்பில் இவ்வர்ணத்தில் அவரது நடனம் நிகழ்ச்சியின் நடுநாயகமாக அமைந்திருந்தது. இரண்டாம் பகுதியில் ஸ்ரீகிருஷ்ணர், பார்வதிதேவி ஆகியோர் மீதான பாடல்களுக்கு மிகையில்லாத அபிநயங்களுடன் அழகாக ஆடினார். அகஸ்தியரின் 'ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி' பாடலில் அபிநயம், நிருத்தியம், நாட்டியம் ஆகியவை ஒன்றோடொன்று இயைந்து சிறப்பாக அமைந்திருந்தன. இறுதியாக தில்லானாவிற்கு (சிம்மேந்திரமத்யமம்) விறுவிறுப்பாக நடனமாடி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

மிஹிகா ஆண்டோவரிலுள்ள ஃபிலிப்ஸ் அகாடெமியில் முதுநிலை மாணவராவார். திருமதி. பாரதிவேணுகோபால் (வாய்ப்பாட்டு), திரு. V.R.சந்திரசேகர் (மிருதங்கம்), திரு. மதுசூதன் (வயலின்), திரு. எஸ். கார்த்திக் (புல்லாங்குழல்) ஆகியோரின் பங்களிப்பு நிகழ்ச்சியைப் பரிமளிக்கச் செய்தது..

நாட்யமணி நடனப்பள்ளி இயக்குனர் குரு. ஸ்ரீதேவி அஜய்திருமலை 1992 முதல் கற்பித்து வருகிறார். சிறந்த நடனக்கலைஞரான இவர் அமெரிக்கா, இந்தியா மற்றும் பல நாடுகளில் நடனநிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார்.

தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com