அரங்கேற்றம்: ஸ்ரீஹரி பாஸ்கர்
ஆகஸ்ட் 29, 2015 அன்று Trinity Academy of Fine Arts பள்ளியில் பயிலும் ஸ்ரீஹரி பாஸ்கரின் சங்கீத அரங்கேற்றம் மிச்சிகன் ஓக்லேண்ட் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. குரு திருமதி பத்மா சுந்தர், பின்னர் அவரது கணவர் திரு மதுரை சுந்தர் ஆகியோரிடம் பயின்றுள்ள ஸ்ரீஹரி முதலில் பல்லவி கோபால ஐயரின் வர்ணத்தோடு தொடங்கினார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் "லம்போதர", தியாகராஜரின் "நாதசுதா" மற்றும் "எந்துகு தயாரதுரா" ஆகிய பாடல்களை நேர்த்தியாகப் பாடினார். பூர்விகல்யாணியில் முத்துசுவாமி தீக்ஷிதரின் 'மீனாக்ஷி மேமுதம்' பாடலில் ராக ஆலாபனை அசாத்தியம். சக்கரவாகத்தில் 'குருவாக வந்த' என்ற ரமண மகரிஷியைப்பற்றி இவரது பெரியதாத்தா வேங்கட சுப்ரமணியன் இயற்றிய பாடல் வித்தியாசமாகவும், இனிமையாகவும் இருந்தது. சுப்ரமணிரைப் போற்றும் டி.என்.சேஷகோபாலனின் தில்லானா தெய்வீகமாக இருந்தது.

மிருதங்க வித்வான் டாக்டர். திருச்சி சங்கரன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். சங்கீத ஆய்வாளர் மற்றும் இயக்குநராகிய இவர் கனடாவைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழகத்தில் இந்திய இசைப் பிரிவின் நிறுவனர் இயக்குநர் ஆவார். இவர் ஸ்ரீஹரியைப் பாராட்டிப் பேசினார். மற்றொரு சிறப்பம்சம் இதற்கு மிருதங்கம் வாசித்த சாயிசந்தர், ஸ்ரீஹரியைப் போல் 12ம் வகுப்பில் பயில்பவர். இவரது தனி ஆவர்த்தனம் மிக இனிமையாக இருந்தது. இவர் திருச்சி சங்கரனின் மாணவர், சுந்தர்-பத்மா தம்பதியினரின் புதல்வர். வயலினில் ஜெயசங்கர் பாலன் இசையில் துணை நின்று மெருகேற்றினார்.

சுந்தர் மற்றும் பத்மா டிரினிடி அகாடமியை நடத்தி வருகின்றனர். பத்மா ஆசானாக இருப்பது மட்டுமல்லாது ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அமைப்பில் தொண்டாற்றி வருகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகளில் மேடைகளில் பாடிப் பட்டங்களையும் பரிசுகளையும் பெற்ற பெருமை மதுரை சுந்தரைச் சாரும்.

காந்தி சுந்தர்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com