கச்சேரி: ஸ்ரீநிதி ஸ்ரீதரன்
ஆகஸ்ட் 30, 2015 அன்று டொரொன்டோ தமிழிசைக் கலாமன்ற அரங்கத்தில் இளைஞர் ஸ்ரீநிதி ஸ்ரீதரன் அருமையான கச்சேரி ஒன்றை வழங்கினார். திருமதி அலகாநந்தாவிடம் ஆரம்பித்த பாடம், பிறகு திருமதி. ராஜி கோபாலகிருஷ்ணனிடம் தொடர்ந்தது. பல மேடைகளில் பாடிப் பயிற்சிபெற்றது கச்சேரியில் நன்றாகப் புலப்பட்டது.

நாட்டைக்குறிஞ்சியில் "சலமேலரா"வில் தொடங்கி, அடுத்து ஹிந்தோளத்தில் விஸ்தாரமாக "சரஸ்வதி விதியுவதி" பாடினார். வலசியில் "ஸ்ரீவல்லி தேவசேனாபதே" கேட்டதும் ஒரு சந்தோஷம். நடபைரவியில் நீண்ட ஆலாபனை அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக அமைந்தது. மேலேமேலே போய் உச்சத்தில் சுருதியும் ஸ்வரமும் நூல் பிடித்தாற்போல் நின்றபோது எழுந்த கரவொலி நிற்கச் சில நிமிடங்களாயின. சுகமான கர்ணரஞ்சனிக்குப் பின் சங்கராபரணத்தைப் பிழிந்து சாறெடுத்துப் பருகக் கொடுத்துவிட்டார் ஸ்ரீநிதி. அப்படி ஒரு ஆலாபனை. குரு திருமதி, ராஜி கோபாலகிருஷ்ணன் அங்கே இருந்திருந்தால் அப்படியே மகிழ்ச்சியில் விம்மியிருப்பார்.

ராகமாலிகையில் அனுமனைப் பாடி, பெஹாக் ராகத் தில்லானாவுடன் கச்சேரியை நிறைவுசெய்தார். அவர் க்ளீவ்லாண்டில் பலமுறை பரிசு வாங்கியதன் காரணம் அன்றைக்குப் புலப்பட்டது. சென்ற வருடம் கணிதத்திலும், பிசினஸிலும் இரட்டைப் பட்டம் வாங்கிய இவர், நல்ல வேலையிலு ம் இருந்துகொண்டு இசையையும் தொடர்ந்து போற்றிவருவது பாராட்டத் தக்கது.

மயூரன் கிரிதரன் (வயலின்), கார்த்திக் கைலாஷ் (மிருதங்கம்) இருவருமே நல்ல பக்கபலம். தமிழிசை மன்றத் தலைவர் திரு. தம்பையா ஸ்ரீபதி பேசும்போது "இசையில் விருப்பங்கொண்ட எவராயினும் இந்த இடத்தை உபயோகிக்கலாம், அதுவும் இலவசமாக", என்றபோது இசைக்காகப் பாடுபடும் ஒரு தொண்டரைக் காணமுடிந்தது. இறுதியில் திருமதி. நவராஜகுலம் முத்துகுமாரசாமி, திருமதி. கெளசல்யா சுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

அலமேலு மணி,
டொரொன்டோ, கனடா

© TamilOnline.com