அரங்கேற்றம்: நிவேதா நாச்சியப்பன், பிரவீணா கிருஷ்ணப்ரசாத்
செப்டம்பர் 12, 2015 அன்று கனெக்டிகட், ஃபார்மிங்டன் IAR பள்ளியில் நிவேதா நாச்சியப்பன், பிரவீணா கிருஷ்ணப்ரசாத் இசை அரங்கேற்றம் இனிதே நடந்தது. அரங்கம் நிறைந்த இந்த விழாவில் குரு. பூமா நம்பிராஜன் ஆசிகளுடன் இவர்கள் பாட, தீபக் வர்மா வயலின் வாசிக்க, ஸ்ரீராம் ரமணன் மிருதங்கம் வாசித்தார்.

நவராகமாலிகாவில் 'வலசி வசி' வர்ணத்துடன் அரங்கேற்றம் தொடங்கியது. அடுத்துவந்த 'பண்டுரீதி' வெகு இனிமை. தொடர்ந்து, ஸ்ரீ காமகோடி பீடத்திலமர்ந்த காமாக்ஷியின் கருணை விழிகளை யாசிக்க சாவேரியில் அருமையாகப் பாடினார்கள். 'அலைபாயுதே' என்று கண்ணனைக் கானடாவில் நிவேதா அழைக்க, பின்னர் ஓடிவந்த கண்ணனை 'மாடுமேய்க்கப் போகவேண்டாம்' என்று இருவரும் மாறிமாறிப் பாடியபொழுது அரங்கம் அதிர்ந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'போ சம்போ' பாடலை பிரவீணா அசாத்தியமாகப் பாடி கைதட்டல் பெற்றார். தேவியின் அருளைவேண்டும் 'ஆரபிமானம்' ராகமாலிகை அனைவரின் அபிமானத்தையும் பெற்றது. புரந்தரதாசர் கிருதி, மாகாகவி பாரதியின் தமிழ்ப்பாடல் இவற்றுக்குப் பின் சந்திரகான்ஸ் தில்லானாவும், திருமதி பூமா நம்பிராஜன் இயற்றிய மங்களமும் பாடி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்கள். விழாவுக்கு வருகைதந்தவர்கள் கனெக்டிகட் தமிழ்ச்சங்கத்தின் மூலம் மாணவர்களின் கல்விநிதிக்கு நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. பதின்மவயது நிரம்பிய இந்த இருவரும் பரிசுப்பொருள்கள் ஏதும் வாங்காது, நன்கொடை வழங்கியது பாராட்டத்தக்கது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com