செப்டம்பர் 12, 2015 அன்று, மிச்சிகனிலுள்ள ஸ்ரீ சிருங்கேரி வித்யா பாரதி ஃபவுண்டேஷன் கோவில் கலைமகள் சன்னிதியில் பாரதி விழா நடந்தது. மாணவர்கள் வயதுவாரியாக மூன்று பிரிவுகளில் பாரதியாரின் படைப்புகளை கவிதையாகவும், பாடலாகவும் வாசித்தனர். தமிழின் உயிரோட்டம் அங்கு திரளாக வந்த போட்டியாளர்களைக் கொண்டே தெரிய வந்தது. விழாவில் பள்ளிக் குழந்தைகள் தமிழ் பேசுவதைக் கேட்கவே இனித்தது. பாரதியாரின் தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்லாமல், சமஸ்கிருதப் பாடலான "பூலோக குமாரி" மற்றும் தமிழில் "ஓய் திலகரே", "திக்குகள் எட்டும் சிதறி" போன்ற வித்தியாசமான கவிதைகளை உச்சரித்ததும், பாடியதும் அபூர்வமான இனிமை. பங்கேற்ற அனைவருக்கும் பாரதியார் திருவுருவம் பொறித்த கோப்பை வழங்கப்பட்டது.
டாக்டர் ராஜாராமன்-ரஞ்சனி ராஜாராமன், திரு. சாந்தபிரகாஷ்-சங்கரி சாந்தபிரகாஷ் ஆகியோர் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். ராஜாராமன் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைப் பல ஆண்டுகளாக மிச்சிகனில் நடத்திவருகிறார். இதில் தமிழறிஞர்களை அழைத்து கவியரங்கம், விவாதமேடை போன்றவற்றை நடத்திவருகிறார். சாந்தபிரகாஷ் கர்நாடக சங்கீதப் பாடகர். மிச்சிகனில் பல குழந்தைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதோடு, கச்சேரிகளும் செய்கிறார்.
காந்தி சுந்தர், டெட்ராய்ட், மிச்சிகன் |