செப்டம்பர் 19, 2015 அன்று இந்தியா/மலேசியாவைச் சேர்ந்த திரு. V.KN. கண்ணப்பன், துணைவியார் சிகப்பி அவர்களுடன் டெக்சஸ் பெர்லான்ட் நகரிலுள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வருகைதந்து "திருக்கோவில் நிர்வாகம் - என் அனுபவம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மீனாட்சி கண்ணப்பன் பாடிய இறைவணக்கத்துடன் கூட்டம் துவங்கியது. கோவில் உபதலைவர் சொக்கலிங்கம் நாராயணன் வரவேற்புரை வழங்கினார்.
கண்ணப்பன் தமது உரையில், மலேசியா டெலுக்குந்தான் நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாக அமைப்பு மற்றும் மேலாண்மைபற்றி விளக்கினார். கோவில் பராமரிப்புச் செலவுக்கு பக்தர்களின் அன்பளிப்போடு கோவிலுக்கு நிரந்தர வருமானம் தரும் சொத்துக்கள் இருந்ததையும் முந்தைய காலத்தில் தொழில் லாபத்தில் சிறுசதவிகிதம் கோவிலுக்குத் தரும் பழக்கம் இருந்ததையும் குறிப்பிட்டார். கோவில் நிர்வாகம் நிரந்தரப் பொறுப்பாளர்களால் வருடாவருடம் சுழற்சிமுறையில் நடத்தப்படுகிறது என்று கூறினார். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளைப்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கோவிலில் இளைஞர்களுக்கென்று ஒருநாளை ஒதுக்கி அவர்களையே திட்டமிட்டுச் செயல்படுத்தச் சொல்லலாம் என்றும் கூறினார். இளைஞர்களுக்குக் கணினிமூலம் செய்திகள் அனுப்பியும், அறிஞர்களின் சொற்பொழிவுமூலமும் மதம்சம்பந்தப்பட்ட செய்திகளை அறியவைக்கலாம் என்றார்.
கண்ணப்பன், காசி இந்து சர்வகலாசாலையில் நிர்வாகவியல் பட்டம் பெற்றவர். சென்னை நேஷனல் ஃபாஸனர்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிர்வாகப் பணியாற்றினார். தற்போது குடும்பத்தொழில் மற்றும் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். மலேசியா டெலுக்குந்தான் நகரிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி டிரஸ்ட், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகம் எனப் பலவற்றிலும் பதவிகள் வகித்துள்ளார்.
நாட்டரசன்கோட்டையில் 800 ஆண்டு பழமையான ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகக் குழுத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். நாட்டரசன்கோட்டை KMSC பெண்கள் பள்ளியில் செயலாளர்/தாளாளர். சென்னை மீனம்பாக்கம் ரோட்டரி சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
சாம் கண்ணப்பன், ஹூஸ்டன், டெக்சஸ் |