2015 நவம்பர் 1ம் தேதி மதியம் 12 மணிக்கும் மாலை 4 மணிக்கும் 'சமுத்ர மந்தன்' நாட்டிய நாடகத்தைத் திருமதி. ஸ்ரீலதா சுரேஷ் தலைமையில் விஸ்வசாந்தி நாட்டிய அகாடமி குழுவினர் உட்சைடு தியேட்டர், உட்சைடு, கலிஃபோர்னியாவில் வழங்குகிறார்கள். இதன்மூலம் கிட்டும் தொகையில் 50 சதவிகிதம் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள World Arts West நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
ஒருமுறை சாபத்தால் தேவர்கள் பலமிழந்து அசுரர்களிடம் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்க நேர்ந்தது. அவர்கள் ஸ்ரீமன் நாராயணனை அணுகி விமோசனம் கேட்க, "நீங்கள் பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் அமுதத்தைப் பருகினால் சாகாவரம் பெறுவீர்கள்" என்று அருளினார்.
பாற்கடலைக் கடைவதென்பது எளிதல்ல என்பதால் தேவர்கள் சாமர்த்தியமாக அசுரர்களிடம் சென்று உதவி கேட்க, அவர்களும் அமுதம் பருகும் ஆவலில் வந்தனர். மேருமலையை மத்தாக்கி வாசுகி என்ற நாகத்தைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் மறுபுறமும் இழுத்துக் கடைந்தனர்.
இறுதியில் அமுதம் கிடைத்த பின்னர் என்ன ஆயிற்று என்பது போன்றவற்றை விளக்கும் இந்தச் சுவையான தெய்வீகக் கதையை 'சமுத்ர மந்தன்' (கடலைக் கடைதல்) என்ற தலைப்பில் நாட்டிய நாடகமாக்கியிருக்கிறார்கள் விஸ்வசாந்தி குழுவினர். நாடகத்தை எழுதி இசையமைத்திருப்பவர் சென்னை திருவேங்கட சுப்ரமணியன். குரு வி. கிருஷ்ணமுர்த்தி நடனவடிவம் தந்திருக்கிறார். 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டிய இயக்குனர் திருமதி. ஸ்ரீலதா சுரேஷ் அவர்களுடன் இணைந்து அற்புதமான ஆடை அலங்காரங்களுடனும், மேடை அமைப்புடனும் நிகழ்ச்சியை அளிக்கிறார்கள்.
விஸ்வ சாந்தி நாட்டிய அகாடமி பல கிளைகளுடன் பணியாற்றி வருகிறது. இங்கு பயின்ற மாணவ, மாணவிகள் வட அமெரிக்காவின் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: சவிதா ஸ்ரீராம் 408.691.7508 வலைமனை: www.shreelatasuresh.com |