2015 அக்டோபர் 22 முதல் 24 வரை தினமும் மாலை 7:30 மணிக்கு சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேட்டர் தனது 40வது ஆண்டுவிழாவை வர்ணா - வெண்மையின் நிறங்கள் (Varna – Colors of White) என்ற நாட்டிய நாடகத்துடன் கொண்டாடும். நாட்யாவின் நிறுவனரும் கலை இயக்குனருமான திருமதி. ஹேமா ராஜகோபாலன் அவர்களின் இந்தப் படைப்பு The Dance Center of Columbia College அரங்கத்தில் வழங்கப்படும்.
"மனிதர்களின் ஆழமான கேள்விகளையும், மதிப்பீடுகளையும் நாட்யா 40 ஆண்டுகளாக அலசி ஆராய்ந்துள்ளது. இந்த மரபினை 'வர்ணா'வும் தொடர்கிறது" என்கிறார் ஹேமா. "நவீன சமுதாயத்தில் நாம் காணும் அகந்தை, வன்முறை, தன்னலம் ஆகியவற்றை நமது புராதனத் தத்துவங்கள் தரும் பாரம்பரிய லட்சியங்களால் எவ்வாறு விடுவிப்பது என்பதை 'வர்ணா' மீள்பார்வை செய்யும்" என்று அவர் சொல்வது நமக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
'வர்ணா' நான்கு பகுதிகளாக வடிக்கப்பட்டுள்ளது: 1. அர்த்தநாரி: ஆண்/பெண் கூறுகளாகப் பிரிந்துள்ள இயற்கை/இறை தத்துவம்; 2. பிரபஞ்சம்: வண்ணக்கலவையான பிரம்மாண்டம்; 3. சீதா தேவியின் அந்தரங்க உரையாடல்; மாரன்: புத்தரால் வெல்லப்பட்ட ஆறு தீக்குணங்கள்.
டோரிஸ் டியூக் கலைஞர், சிகாகோ நடன விருது பெற்றவர் எனப்பல கௌரவங்களைப் பெற்றுள்ள கிருத்திகா ராஜகோபாலன் பிரதான பாத்திரமேற்று 12 பிற கலைஞர்களுடன் இதில் பங்கேற்கிறார். ஆண்டுவிழாச் சிறப்பு அம்சமாக ஒரு மாலைப்பொழுதில் ஹேமா அவர்களே வர்ணாவில் பங்கேற்கிறார். திரு. ராஜ்குமார் பாரதி இசையமைப்பில் பிரபல வித்வான் ஜி. விஜயராகவன் (மிருதங்கம்), திருமதி. சித்ராம்பரி கிருஷ்ணகுமார் (பாட்டு), திரு. கலையரசன் ராமநாதன் (வயலின்), அடையார் பாலகிருஷ்ணன் முத்துகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் கொண்ட இசைக்குழு பின்னணி வழங்கும்.
அக்டோபர் 24 அன்றுமட்டும் ஆண்டுவிழாச் சிறப்பு நிகழ்ச்சியாக 'வர்ணா'வை அடுத்து, சிகாகோவின் Ensemble Español இசைநிகழ்ச்சியுடன் விருந்தும் இருக்கும்.
மேலும் தகவலுக்கும் கட்டண விவரங்களுக்கும் தொலைபேசி: 312.369.8330 வலைமனை: www.natya.com |