அக்டோபர் 2015 : வாசகர் கடிதம்
செப்டம்பர் இதழில் முதுபெரும் எழுத்தாளர், கவிஞர் பல சாதனைகள் செய்து எளிமையாக வாழ்ந்து வரும் உயர்ந்தமனிதர் கோவை ஞானி பற்றிய கட்டுரை பாராட்டுக்குரியது. நேர்காணல், சிறுகதை மற்றப் பகுதிகள் வழக்கம்போல் சுவையாக இருந்தன. ஒவ்வொரு திங்களும் தென்றல் மிக அருமையாக வீசிக்கொண்டிருக்கிறது.

கே.ராகவன்,
பெங்களுரு, இந்தியா

*****


செப்டம்பர் தென்றல் முகப்பு அட்டையில் itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா அவர்களின் புகைப்படத்தையும், உள்ளே அவர்களைப் பற்றிய விவரங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். விரிகுடாப் பகுதியில் நன்கு அறிமுகப்பட்டவர் 'ஸ்ரீ'. மிக வித்தியாசமான தலைப்புகளில் அருமையான தகவல்களோடு அற்புதமாக ரசிகர்களையும் பங்குபெற வைத்து தொய்வில்லாமல் நிகழ்ச்சிகள் தருவது மிகவும் சவாலான விஷயம். அதைத் திறம்பட அவர் செய்கிறார். 'ஸ்ரீ' அவர்களின் நீண்டநாள் ரசிகர்கள் நாங்கள். அவரைப்பற்றிய விவரங்கள் தெரிவித்த தென்றலுக்கு அன்பான நன்றிகள். எப்போதும்போல் அத்தனைப் பகுதிகளும் சிறப்பாக இருந்தன.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


itsdiff என்றால் ஸ்ரீகாந்த் என்னும் அளவுக்கு இன்று வடஅமெரிக்காவில் பிரபலமாகியிருக்கிறார். செப்டம்பர் தென்றல் இதழில் அவரது நேர்காணலைப் படித்து மகிழ்ந்தேன். தொடர்ந்து 10 ஆண்டுகளாக வாரந்தோறும் தமிழில் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளைத் தந்து சாதனை படைத்திருக்கிறார் அவர். இது ஓர் அசுர சாதனை. 3 ஆண்டுகளுக்குமுன் 100வது நிகழ்ச்சியை முடித்து விழாக் கொண்டாடியபோது நானும் பங்கேற்றேன். ஸ்ரீகாந்த் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

டாக்டர். அலர்மேலு ரிஷி

*****


'தென்றல்' ஆகஸ்ட் இதழில் கல். ராமன் அவர்களது பேட்டியின் அற்புதத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அவரது இனிய நினைவுகளை உணர்வு பூர்வமாக வழங்கியது மகிழவும், அதிசயிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது எத்தனையோ சாதனைகள் பிறருக்கு உதவுதல், தொண்டு நிறுவனங்கள், தற்கொலையைத் தடுத்தது, புராணம், அரசியல், சினிமா, குடும்பம் என்று எல்லா விஷயத்திலும் பிடித்ததை ஒளிவு மறைவின்றி, சுவாரஸ்யமாகக் கூறியது மனநிறைவைத் தந்தது. அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். தென்றலின் பன்முகப் பணிக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். அருமையாகத் தமிழ் வடிவம் தந்த மீனாட்சி கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சிவ. ஜெயராமன்,
வியென்னா, விர்ஜீனியா

*****


நான் தென்றல் இதழுக்குப் புதியவன். செப்டம்பர் மாத இதழைப் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பெருமிதம் அடைந்தேன். 'தென்றல்' தீண்டாத தலைப்புகளோ, பொருள்களோ இல்லை என்பது கண்டு பிரமிப்பு அடைந்தேன். எழுத்தாளர் கோவை ஞானி என்கிற பழனிச்சாமி அவர்களின் மழலைப்பருவத்தில் இருந்து இன்றுவரை அவரது கல்லூரி அனுபவங்களையும், வளர்ச்சியையும், பன்முகத் திறமைகளையும், இலக்கியப் படைப்புகளையும், திறனாய்வுகளையும், பெற்ற விருதுகளையும், அலசி ஆராய்ந்து ஆராய்ச்சித் தொகுப்புபோல் இருக்கிறது கட்டுரை. அவருடைய "நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்” என்ற கட்டுரைமூலம் அவரை நாத்திகரா, இலக்கியவாதியா, ஆன்மீகவாதியா, ஸ்திதபிரக்ஞரா, சித்தரா என்று கணிக்க முடியவில்லை. அவரையே கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டும் போலும்.

"டாக்டர் சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும்” என்ற பிராணாயாமத்தின் விளைவையும் பயன்களையும் பரிசோதனைமூலம் ஆராய்ந்து மகத்துவத்தை வெளியிட்டது மிகப் பயனுள்ள செய்தி. காந்தி கண்ணதாசன் நேர்காணல் 'முயற்சி திருவினையாக்கும்' என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கிறது. தன்வி ஜெயராமன் புகுமுக மாணவிகள் படும் இன்னல்களை ஆவேசச் சொற்பொழிவால் எடுத்துரைத்தது அவரை பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகக் காணவைக்கிறது. தென்றலின் வளர்ச்சி சூறாவளியாகப் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.

கிருஷ்ணன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

*****


செப்டம்பர் 2015 தென்றல் இதழில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை பற்றிய கட்டுரை வந்துள்ளது. அமெரிக்காவாழ் தமிழர்கள் அறிய அவர் குறித்து மேலும் சில தகவல்கள்: இவர் தஞ்சை வட்டக் கழகத் தலைவராகத் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தஞ்சை வட்டத்தில் சாலைவசதி இல்லாத சிற்றூரே இல்லையென்ற நிலையை உருவாக்கியும், புதிதாக நூற்றெழுபது ஆரம்பக் கல்விநிலையங்களை அமைத்தும், பல கிராமங்களில் குடிநீர்க் கிணறுகளை அமைத்தும் சேவை புரிந்துள்ளார். இவரது பொதுச்சேவையைப் பாராட்டி தஞ்சைமாவட்டக் கழகக் கூட்டத்தில் இவரது திருவுருவப் படத்தை அக்காலத்துத் தஞ்சை மாவட்ட நீதியரசர் லோபோ பிரபு திறந்து வைத்தார். தமிழவேள் அவர்கள் கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்தபோது 1919ம் ஆண்டில் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்கக் கோரித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்திய நடுவண் அரசு அக்டோபர் 2004ல் அதனை அறிவித்தது. இந்தச் சேவையைப் பாராட்டி இவரது உருவம்கொண்ட சிறப்புத் தபால்தலை சென்னையில் பிப்ரவரி 10, 2006 அன்று ஒரு விழாவில் வெளியிடப்பட்டது.

கரந்தை பாலசுப்பிரமணியன்
(கரந்தை தமிழ்ச்சங்கக் கலாநிலைய முன்னாள் மாணவர்)

*****


நியூ ஜெர்ஸியில் 'தென்றல்' வாசித்தேன். பெருமகிழ்ச்சி. சிறுகதைகள், விளையாட்டு வீரர்களுக்கான அறிவிப்புகள், இளந்தளிர்களைக் கற்க ஊக்குவிக்கும் பகுதிகள், தொடர்கதைகள், நேர்காணல், முக்கிய நிகழ்வுகளின் விபரங்கள், மருத்துவ ஆலோசனை என ஏராளமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளர்க்கிறது தென்றல். செம்மொழியாம் நம் தமிழ்மொழியை வளர்க்க அமெரிக்காவில் அரும்பாடுபடும் அன்பர்களுக்குத் தலைவணங்குகிறேன். தொடரட்டும் உங்களின் பணி.

பாலசுந்தரி கணேசன்,
பட்லேக், நியூ ஜெர்ஸி

*****


தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களைப்பற்றிய கட்டுரையில் அரிய செய்திகளைக் கொடுத்த பா.சு. ரமணனுக்கும் அதைச் சிறந்தமுறையில் வெளியிட்ட தென்றல் இதழுக்கும் நன்றி.

பாவலர் தஞ்சை தர்மராசன்,
செயின்ட் லூயிஸ்

© TamilOnline.com