என்ன சத்தம் இந்த நேரம்!
ராசி இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கக் கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி டிஷ்வாஷரில் எல்லாச் சாமான்களையும் போட்டுவிட்டு பட்டனை அமுக்குவதைப் பார்த்தாள். சற்றுநேரம் டிஷ்வாஷரையே பார்த்துக்கொண்டிருந்தாள் ராசி. "இந்த ஊரில் இருப்பதைப்போல் நம் ஊரில் டிஷ்வாஷர் இன்னும் ஏனோ பிரபலமாகவில்லை. அதனால்தான் வாங்க யோசனையாயிருக்கிறது. வாங்கிவிட்டால் அஞ்சலைக்காக, வழிமீது விழிவைத்துக் காத்திருக்க வேண்டியிருக்காதே" என்று நினைத்துக் கொண்டே ஆ........வ் என்று பெரிதாகக் கொட்டாவி விட்டாள்.

திடீரென்று கும்...கும்... என்று மெலிதான சத்தம் கேட்டது. "என்ன சத்தம் இது?" என்று ராசி கேட்க, ஆர்த்தியோ நிதானித்துக் கூர்ந்து கவனித்துவிட்டு, "ஒன்றுமில்லையே மாமி" என்று சொன்னாள்.

"ஓ! நம் வயிறுதான் ஒருமாதிரி சத்தம் போடுகிறதோ? இன்றைக்கு என்ன சாப்பிட்டோம்? வயிறு ஒரே கடமுட என்கிறதே" என்று நினைத்துக்கொண்டு சூடாக ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்துவிட்டுப் படுக்கக் கிளம்பினாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. பொழுதுவிடிந்ததும் காஃபி கலந்து தானும் குடித்துவிட்டு விஷ்ணுவிற்கும் கொடுத்துவிட்டு, ஜன்னல்வழியே வெளியே பார்த்துக்கொண்டே காஃபியைச் சுவைக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று நினைவுக்கு வந்தது "ஆமாம்... நேற்றிரவு நமக்கு வயிறு சற்று மந்தமாக இருந்தாற்போல் இருந்ததே. அப்பாடி.. இப்பொழுதாவது சரியாகித் தொலைத்ததே" என்று நிம்மதியானாள். வெந்நீர் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ராசி.

அதற்குப் பிறகு அவளுக்கு எதைப்பற்றியும் நினைக்க நேரமில்லை. அன்றைக்கு ராஜேஷ் அவனுடைய நண்பர் குமாரை மதிய உணவுக்கு அழைத்திருந்தான். அதற்காக ஆர்த்தியும் அவளுமாகச் சேர்ந்து காய்கறிகளை நறுக்கவும், சமைக்கவும் என்று சுறுசுறுப்பாக நாள் ஓடிக்கொண்டிருந்தது.

நண்பர் குமார் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தார். பின்பு, "அம்மா... உங்கள் சமையல் சூப்பர். இந்தமாதிரி சமையலை சாப்பிட்டு எத்தனை மாதங்களாகிவிட்டன. நான் சென்றவருடம் ஊருக்குப் போயிருந்தபோது அம்மா கையால் சமைத்துச் சாப்பிட்டது. பிறகு இப்பதான் அதே சுவையுடன் சாப்பிடுகிறேன். அதுவும் உங்கள் அவியலுக்கு ஈடு இணையே இல்லை" என்று சொல்லவும் ராசிக்குப் பெருமை பிடிபடவில்லை.

அதற்குள் விஷ்ணு "குமார், அதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு பல மாதங்களாகின என்று. அதனால்தான் சாதாரண சமையல்கூட உங்களுக்குச் சூப்பர் சமையலாகிவிட்டது" என்று சொல்லவும், ராசி, விஷ்ணுவைப் பார்த்து ஒரு முறை முறைத்தாளே பார்க்கணும். ஆனால் விஷ்ணு இதற்கெல்லாம் பயந்துவிடுவாரா என்ன? கண்டுகொள்ளாமல் நகர்ந்தார். பிறகு எல்லோருமாக அருகிலிருக்கும் மென்லோ பார்க் சென்றுவிட்டு, வீட்டுக்கு வரும்போது மணி எட்டரை ஆகியிருந்தது..

வந்ததும் இரவுணவு முடிந்து மீண்டும் டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கி, ஆர்த்தி சுவிட்சை ஆன் செய்வதைப் பார்த்தாள் ராசி.

"நாளையிலிருந்து நானே இந்த வேலையைச் செய்கிறேன் ஆர்த்தி" சொல்லி முடிக்கவில்லை, திரும்பவும் வயிறு கடமுட என்பதுபோல் இருந்தது. அவியல் நமக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது. வயதாவதின் அறிகுறி இது என்று நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒரு டம்ளர் வெந்நீர் உள்ளே இறங்கியது. சில வினாடிகளில் வயிறு உறுமல் அடங்கிவிட்டது.

"ராசி! நல்ல கை வைத்தியம் உன்வசம்" என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டே தூங்கிப்போனாள் ராசி.

ஆனால் அவள் வயிறு அப்படியெல்லாம் அவளை விட்டுவிடவில்லை. மறுநாள் மீண்டும் கடமுடா. மீண்டும் வெந்நீர் வைத்தியம். பிறகு தூங்கச் சென்றாள்.

"இன்றைக்கும் உனக்கு வயிறு பிரச்சினையோ!" படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமலே நக்கலாக விசாரித்தார் விஷ்ணு.

"ஆமாம், ஆனால் சரியாகிவிடும்!" சொன்ன சிறிது நேரத்தில் சன்னமான குறட்டை ஒலி கிளம்பியது ராசியிடமிருந்து.

மறுநாள் காலை மணி ஆறு இருக்கும். ராசி எழுந்து குளிர்ந்தநீரில் பல் துலக்கிவிட்டு, காஃபி போடக் கிச்சனுக்குள் நுழைந்தாள். உள்ளே காலை வைத்ததுமே, காலில் கொழகொழவென்று ஏதோ தட்டுப்பட, லைட்டைப் போட்டு என்னவென்று பார்த்தாள் ராசி. புஸ்புஸ் என்று நுரைதள்ளிக் கொண்டு இருந்த டிஷ்வாஷர் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

"ராஜேஷ்..." இரைந்தாள் ராசி.

"இங்கே வந்து பாருடா. டிஷ்வாஷர் ரிப்பேர் போலிருக்கிறது. நுரைதள்ளி, வாந்தி எடுத்து வைத்திருக்கிறது பார்."

கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த விஷ்ணு "நீதானே நேற்று 'ஆன்' செய்தாய்? சரியாகச் செய்யவில்லையோ என்னமோ? உன் தொல்லை தாங்காமல் டிஷ்வாஷர் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டதோ?" நக்கலடித்துக்கொண்டே அருகில் போக முயற்சித்தார்.

"இந்த ரணகளத்திலும் என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே" சொல்லிக்கொண்டே விஷ்ணுவைப் பார்த்து "வேண்டாம், வேண்டாம். இங்கே வராதீர்கள். வழுக்குகிறது" என்று கத்திக்கொண்டே அடுத்த அடி எடுத்து வைக்கவும், சர்ரென்று சறுக்கியபடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு கீழ் உட்கார்ந்தாள். நல்லவேளை தடாலென்று விழவில்லை. ராசி சமாளித்துக்கொண்டாள்.

பதறியடித்துக் கொண்டு வந்த, ராஜேஷும், ஆர்த்தியும், ராசியை மெதுவாகக் கைத்தாங்கலாகப் பிடித்து சோபாவில் அமர்த்தினர். இருவருமாகச் சேர்ந்து கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, பாத்திரத்தையெல்லாம் சுத்தம் செய்தனர்.

பின்னர் டிஷ்வாஷர் ரிப்பேர் செய்பவருக்கு ஃபோன் செய்துவிட்டு, "அம்மா, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்பவர் வந்து ரிப்பேர் செய்துவிட்டுப் போவார். முடியுமென்றால் சமைத்துச் சாப்பிடு. ரொம்ப அலட்டிக்காதே அம்மா, கீழே விழப் பார்த்தாய். ஜாக்கிரதை" என்றான் ராஜேஷ். பிறகு அப்பாவைப் பார்த்து "இல்லைன்னா நீங்களே தோசை வார்த்துவிடுங்களேன் அப்பா" என்றான்.

"நானோ ஆர்த்தியோ சீக்கிரமே வந்துவிடுகிறோம். ஜாக்கிரதை" என்று சொல்ல, ஆர்த்தி பங்கிற்கு அவளும் "ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

ராசிக்கு அடி எதுவும் படவில்லை. அவள் சுருக்கமாகச் சமையலைச் செய்துமுடிக்கவும், மெல்லிசையாய் வாசல்மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்தாள் ராசி.

ஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு கார். யார் என்பது போல் ராசி அவரைப் பார்க்கவும், அவரோ ராஜேஷ் பெயரைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்ய வந்திருப்பதாகச் சொன்னதைப் புரிந்துகொண்டு அவரை உள்ளே விட்டனர்.

ராசிக்கு நம்பவே முடியவில்லை. ‘ரிப்பேர் செய்பவர்... காரிலா? இருக்காது... கடை ஓனராக இருக்கும்! அதான் அக்கறையுடன் காரில் வந்துவிட்டார் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டாள். (இங்கிருக்கும் பெரும்பான்மையோருக்கு கார்தான் போக்குவரத்துக்கு என்பது அப்போது ராசிக்குத் தெரிய நியாயமில்லை). அமெரிக்காவில் கார் வைத்திருப்பவரெல்லாம் முதலாளியாயிருக்க வேண்டிய அவசியமில்லை என்கிற பேருண்மை புரியச் சில நாட்களாகினது.

அந்த ஆஜானுபாகுவின் பின்னால் சென்றனர். அவர் டிஷ்வாஷர் அருகில் போய் தன் பெரிய பையைத் திறந்து, அதனுள்ளிருந்து ஏதேதோ உபகரணங்களை எடுத்து டிஷ்வாஷரின் நாடி பிடித்துப் பார்த்தார். பிறகு தடாலென்று ராசியிடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல் நெடுஞ்சாண் கிடையாக கீழே டிஷ்வாஷர் அருகே படுக்கவும், அருகில் நின்றுகொண்டிருந்த ராசியோ பதறி நகர்ந்தாள். அதைச் சற்றும் லட்சியம் செய்யாமல் டிஷ்வாஷரின் அடிப்பாகத்தில் ரிப்பேர் செய்ய ஆரம்பித்தார் அந்த மகானுபாவர். ஒரு மணி நேரத்திற்கு மேலானது சரிசெய்து முடிக்க.

நடுவில் ராசிக்கு, இவர்பாட்டுக்குக் காலை நீட்டிப் படுத்துக்கொண்டு, டிஷ்வாஷர் ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று தூங்கி விட்டாரோ என்கிற சந்தேகம்கூட வந்தது. எழுப்பலாம் என்றால் எப்படி எழுப்புவது என்று குழம்பிய நேரத்தில், நல்லவேளை அவரே எழுந்து டிஷ்வாஷரை ஆன் செய்துவிட்டு வேலை செய்கிறது என்று சொல்லிவிட்டு 'பில்' எழுத ஆரம்பித்தார்.

ராசி தானே அதை ஆன் செய்து ஓடுகிறதா என்று பார்த்தாள். அதைப் பார்த்த ஆஜானுபாகு மனிதர் எழுதிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விறுவிறு என்று அருகில் வந்தார். வந்தவர் டிஷ்வாஷரை ராசியைவிட்டே ஆன் செய்யச்சொல்லி அழுத்தி மூடினார். பிறகு? என்பதுபோல் அவரையே ராசி பார்க்க. டிஷ்வாஷர் மேடைமேல் காதைவைத்துச் சத்தம் வருகிறது பார் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சத்தமா? குழம்பிக்கொண்டே காதை வைத்தாள் ராசி.

பில் வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிய விஷ்ணு, ராசி என்ன செய்கிறாள் என்று பார்க்கவந்தார். ராசியோ காதை டிஷ்வாஷர் மேடைமேல் வைத்துக் கேட்டுவிட்டு, 'அட... இங்கிருந்துதான் கடமுடா சத்தம் வருகிறதா?' என்று சத்தமாகத் தனக்கே சொல்லிக்கொண்டாள்.

"வேறு எங்கிருந்து வருவதாக நினைத்துக் கொண்டிருந்தாய்?" விஷ்ணு கேட்க "ம்... ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது ராசியிமிருந்து.

உண்மையைச் சொல்வானேன். அதுவும் இவரிடம்... சொல்வது பிட் நோட்டீஸ் அடித்து நியூஸ்பேப்பர் நடுவில் வைத்து வீடுவீடாக விநியோகிப்பதற்குச் சமம் என்று நினைத்துக்கொண்டாள் ராசி.

விஷ்ணுவுக்கு புரியவில்லையோ என்னமோ, உங்களுக்குப் புரிந்திருக்குமே.

ராஜலக்ஷ்மி பரமசிவம்,
பெங்களூரு

© TamilOnline.com